bbc.com : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தபோது, பிபிசியின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்த பிரச்னையை எழுப்பியதாக ராய்ட்டரஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "பிரிட்டன் அமைச்சரிடம் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று உறுதிபட கூறப்பட்டது" என்று இந்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், இந்தியாவின் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தகவல்களை பார்வையிட்டனர். இந்த நடவடிக்கையின் அங்கமாக சில மூத்த அலுவலர்களின் டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் குளோனிங் முறையில் நகல் எடுத்தனர்.
வரும் வியாக்கிழமை ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை பிரிட்டன் அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி சந்தித்துப் பேசினார். ஆனால், இந்திய அமைச்சருடன் பேசிய பிற விவரங்களை அவர் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
"இந்திய அமைச்சருடன் நான் பேசிய விஷயங்களை அவருடன் மட்டுமே வைத்திருப்பது சிறந்தது. அந்த விஷயத்தை (பிபிசி அலுவலகத்தில் ஆய்வு நடந்த விவகாரம்) அதை எழுப்பினேன்," என்று அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"ஜெய்சங்கருடன் இந்த அளவுக்கு வலுவான மற்றும் தொழில்முறை உறவை நான் கொண்டிருப்பதால் ஏற்படும் நன்மை எது எனக்கேட்டால், நான் அவரிடம் எழுப்பியதை போலவே சில நுட்பமான விஷயங்கள் குறித்து அவரும் என்னிடம் பேசினார். அந்த விஷயத்தையும் நான் அவரிடம் எழுப்பினேன்," என்று ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்தார்.
இரு தரப்பு எதிர்மறையான பணிகள் தொடர்பாகவே இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக பிரிட்டன் அமைச்சர் மேலும் கூறினார்.
நேர்மறையான உறவின் தனிச்சிறப்பு பற்றி பேசிய அவர், "ஒரு நுட்பமான மற்றும் கடினமான பிரச்னை பற்றி விவாதிக்கும் அதே சமயம், அது எங்களின் உண்மையான, நேர்மறையான விஷயங்களை பற்றி பேசுவதிலிருந்து தடம் புரளச் செய்யாது" என்று அமைச்சர் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சிவில் உரிமைகள் பற்றிய கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, "இரு நாடுகளும் வலுவாக உணரும் மதிப்புகள் நிலைநாட்டப்படுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். அதாவது பல்வேறு பிரச்னைகளில் இணைந்து பணியாற்ற வேண்டும்," என்று அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி பதிலளித்தார்.
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி பிரிட்டனில் உள்ள பார்வையாளர்களுக்காக அந்நாட்டில் மட்டும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பியது.
இந்த ஆவணப்படத்தை பலர் அங்கீகரிக்கப்படாத முறையில் பதிவேற்றம் செய்து சமூக ஊடகங்கள் மூலம் பகிர்தனர். இதையடுத்து அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் பார்க்காமல் தடுக்க இந்திய அரசு முயற்சித்தது.
இது நடந்த சில வாரங்களுக்குப் பிறகு டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களுக்கு வந்த வருமான வரித் துறையின் குழு, ஆய்வு என்ற பெயரில் பிபிசி பணப் பரிவர்த்தனை ஆவணங்களை பார்வையிட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வை நடத்திய வருமான வரித்துறை, பிபிசியின் மூத்த அலுவலர்கள், பத்திரிகையாளர்களையும் விசாரித்தது.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தங்களுடைய ஆய்வில் பிபிசி பரிவர்த்தனைகளில் ‘முரண்பாடுகள்’ இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
ஆனால், ஆய்வுக்குப் பின்பு பிபிசியிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமோ நோட்டீஸோ அத்துறை அனுப்பவில்லை.
வருமான வரித் துறையிடம் இருந்து நேரடியாகப் பெறும் அதிகாரபூர்வ செய்திகளுக்குத் தகுந்த பதிலளிப்பதாக பிபிசி அப்போது கூறியிருந்தது.
இந்த விவகாரம் கடந்த மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பிபிசியின் இந்திய அலுவலகங்கள் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
அப்போது அவையில் இருந்த பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவின் வருமான வரித் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்தியாவில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பிபிசியின் சுயாதீன இதழியலுக்கு முழு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.
டிம் டேவி, தலைமை இயக்குநர் - பிபிசி
பிபிசி ஆய்வு நடந்த சில தினங்கள் கழித்து அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி தமது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்தார். பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிபிசி, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.
"உலகெங்கிலும் உள்ள நமது பார்வையாளர்களுக்கான நமது கடமை, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற இதழியல் மூலம் உண்மைகளை தெரிவிப்பதும், அதை மிகச் சிறந்த ஆக்கபூர்வ உள்ளடக்கத்துடன் தயாரித்து விநியோகிப்பதும் ஆகும். அந்தப் பணியிலிருந்து நாம் விலகிப் போக மாட்டோம்."
"நான் தெளிவாக இதை தெரிவிக்க விரும்புகிறேன்: பிபிசிக்கு எந்த திட்டமும் இல்லை - நாம் ஒரு நோக்கத்துடன் இயக்கப்படுகிறோம். அதில் முதலாவது பொது நோக்கம், பாரபட்சமற்ற செய்திகளையும் தகவலையும் மக்கள் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பில் இருக்கவும் உதவுவதாகும்," என்று டிம் டேவி குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக