செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இலங்கை தில்லையாற்றங்கரையை காப்பியடித்து அயலியாக்கிய 'அயலி' இயக்குநர் முத்துக்குமார்

'அயலி'
அயலி
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன்

  BBC  - சிவகுமார் ராஜகுலம்  : தமிழில் வெளியாகி, நாடு முழுவதும் பரவலாக கவனம் ஈர்த்துள்ள அயலி இணையத் தொடரின் கதை தன்னுடையது என்று இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் உரிமை கோரியுள்ளார். தன்னுடைய கதை களவாடப்பட்டுள்ளது என்பது அவரது குற்றச்சாட்டு. இதனை மறுத்துள்ள அயலி இயக்குநர் முத்துக்குமார், அயலி கதையை உருவாக்கியதன் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'அயலி' இணையத்தொடரின் கதை என்ன?
கடவுள் நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கம் என்பன போன்ற கட்டுகளை உடைத்து லட்சியத்தை நோக்கி நடைபோடும் பெண்ணை மையமாகக் கொண்ட அயலி தொடரின் கதை 1990களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்துப் பெண் ஒருத்தி வெளியூர் இளைஞருடன் காதல்வயப்பட்டு, உடன்போக்கு சென்றுவிட, சிறிது காலத்தில் அந்த ஊரே இயற்கையால் வஞ்சிக்கப்படுகிறது. இதனால் துரத்தப்பட்ட அவ்வூர் மக்கள் ஒட்டுமொத்தமாக அலைந்து, திரிந்து வேறோர் இடத்தில் குடிபெயர்கின்றனர்.


அங்கு பெண் தேவதை அயலிக்கு கோயில் கட்டும் அந்த மக்கள், தங்களது மோசமான நிலைக்கு கிராமத்துப் பெண்ணின் காதல் மணமே காரணம் என்று முடிவு கட்டி, அதற்கு பரிகாரமாக இனிமேல் தங்களது கிராமத்துப் பெண்கள் காதல்வயப்படாத வகையில் அவர்கள் பூப்பெய்த உடனேயே மணமுடிப்பதை வழக்கமாக்குகின்றனர். பூப்பெய்ததுமே மணமுடிக்க வசதியாக படிப்புக்கு பெற்றோர் முற்றுப்புள்ளி வைத்து விடுவதால், அந்த கிராமத்துப் பெண்கள் யாருமே எட்டாம் வகுப்பை தாண்டுவதே இல்லை. மருத்துவராக கனவு காணும் கதையின் நாயகி, அதற்காக வீடு, கிராமம், சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள், தளைகளை எவ்வாறு எதிர்கொண்டு சாதிக்கிறார் என்பதே அயலி தொடரின் கதை.

'அயலி' தொடரில் பெண்ணுரிமை கருத்துகள்

பெண்ணை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க ஆணாதிக்க சமூகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை சாடும் பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகள் அயலி தொடர் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. "ஊர் கவுரவத்தை ஏன் பொம்பளை காலுக்கிடையிலே தேடுறீங்க?" என்பது போன்ற இந்த தொடரில் இடம் பெற்றுள்ள ஆணாதிக்க சமூகத்தை துளைக்கும் கேள்விகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

பெண் கல்வி, பெண் விடுதலை, குழந்தை திருமணம், சிறு வயது திருமணங்களால் நேரிடும் பிரசவ இறப்புகள் போன்றவற்றைப் பேசும் அயலி தொடர் குறித்து பெரும்பாலான பத்திரிகை, இணைய ஊடகங்கள் நேர்மறை விமர்சனங்களை முன்வைத்துள்ளன. படம் பேசும் கருத்தியலை அவை பாராட்டியுள்ளன. அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அயலி தொடர் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

"அயலி" கதைக்கு உரிமை கோரும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்

அயலி தொடரும, அதில் பேசப்படும் பெண்ணுரிமை, பெண் விடுதலை கருத்துகளும் பேசுபபொருளாக மாறியுள்ள நிலையில், லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளரான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், அயலி கதை தன்னுடையது என்று உரிமை கோரியுள்ளார். 70 வயதான அவர், இலங்கையில் பிறந்து, 1970-ம் ஆண்டு லண்டனில் குடியேறியவர்.

மருத்துவ மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், எழுத்தாளர், பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர், பட இயக்குநர் என பன்முகம் கொண்டவர். 19 புத்தகங்களை எழுதியுள்ள அவர், இலங்கையில் சிறந்த எழுத்தாளர் உள்ளிட்ட விருதுகளை வென்றவர். 'தில்லையாற்றங்கரை' என்ற புதினத்திற்காக அவருக்கு சிறந்த எழுத்தாளர் விருது கிடைத்தது.

பட மூலாதாரம், FB/ Rajeswari Balasubramaniam
படக்குறிப்பு,

எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன்

'தில்லையாற்றங்கரை' புதினம் 1987-ம் ஆண்டு இந்தியாவில் பாரி பதிப்பகத்தால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த புதினம் 1998--ம் ஆண்டு மணிமேகலை பதிப்பகத்தாரால் மறுபதிப்பு செய்யப்பட்டது. 'தில்லையாற்றங்கரை' புதினத்தின் கதை 1948-ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் மற்றும் 1960-களின் கால கட்டத்தில் நடக்கிறது.

இலங்கையின் கொந்தளிப்பான அரசியல் நடப்புகளுடன் அங்குள்ள கிராமத்தின் நிகழ்வுகளை பிணைத்து இந்த புதினம் புனையப்பட்டுள்ளது. பாரம்பரியம், சாதியம் மற்றும் பெண்களுக்கு எதிரான தளைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பிறந்த 3 பெண்களை நம் மனக்கண் முன் நிறுத்துகிறது இந்த புதினம்.

இந்த மரபுகள் எப்படி செயல்படுகின்றன? பெண்கள் இந்த அமைப்புக்கு எதிராக வெற்றிகரமாக போராட முடியுமா? இவர்களது எதிர்கால கனவுகள் என்ன ஆகும்? அவர்களுக்கு திருமணம் மகிழ்ச்சியா அல்லது பேரிடரா? என்பன போன்ற கேள்விகளை முன்னிறுத்தி அந்த புதினத்தின் கதையோட்டம் அமைந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த கார்னார்ட் பதிப்பகம் (Cornard Press), தில்லையாற்றங்கரை புதினத்தை "The Banks of the river Thillai" என்ற பெயரில் 2021-ம் ஆண்டு மொழியாக்கம் செய்து வெளியிட்டது. புத்தக வெளியீட்டாளரான பீட்டர் எஸ்.சாப்மேன், இலங்கைத் தமிழரின் சமூக கட்டமைப்பு, பெண்களின் நிலை, தமிழ்நாட்டு திராவிட அரசியல் இலங்கைத் தமிழரில் ஏற்படுத்திய தாக்கம், இலங்கையில் நடந்தேறிய அரசியல் மாற்றங்களால் தமிழர் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம் பிடித்துக் காட்டும் இந்த புதினம் ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

"அத்தகைய சிறப்பு வாய்ந்த தில்லையாற்றங்கரை புதினத்தையே என்னிடம் அனுமதி பெறாமல் அயலி இணையத் தொடராக எடுத்து வைத்திருக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

பிபிசி தமிழிடம் பேசுகையில், "இலங்கையின் கிழக்கு கடற்கரையில் மட்டக்களப்பு அருகேயுள்ள கோளா கிராமம்தான் தில்லையாற்றங்கரை புதினத்தின் கதைக் களம். கவுரி, சாரதா, மரகதம் ஆகிய கதை மாந்தர்களை அடிப்படையாகக் கொண்டு நகரும் இந்த கதை, 1957-ம் ஆண்டு சாரதா பூப்படைவதில் இருந்து தொடங்குகிறது. அந்த கிராமத்தில் கண்ணகி கோயிலை மூலாதாரமாகக் கொண்டே பெண்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பெண் கல்விக்கும், பெண் விடுதலைக்கும் வேலி போட்ட அந்த கட்டுப்பாடுகளை உடைத்து தங்களது கனவுகளை நோக்கி கதை மாந்தர்கள் எப்படி நடை போட்டார்கள் என்பதே புதினத்தின் கதை." என்றார்.

தில்லையாற்றங்கரை புதினத்தில் திராவிட அரசியலின் தாக்கம்

அவர் மேலும் கூறும் போது, "இலங்கை சிங்கள பேரினவாத அரசியல் தலைதூக்கிய 1950-களின் பிற்பகுதியில், அதன் தாக்கம் தமிழரிடையே எப்படி இருந்தது என்பதையும் இந்த புதினம் விவரிக்கிறது. அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்ற திராவிட அரசியலின் தாக்கம் இலங்கைத் தமிழரிடையே எப்படி இருந்தது என்பதும் இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது. தில்லையாற்றங்கரை புதினத்தில் வரும் சின்னத்தம்பி என்ற கதாபாத்திரமும், ஆசிரியர் கதாபாத்திரமும் திராவிட கருத்துகளை பேசும். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளை யாருக்கும் தெரியாமல் படிப்பவராக சின்னத்தம்பி இருப்பார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கருத்துகள் இந்த புதினத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும்." என்று கூறுகிறார்.

"கண்ணகி கோயிலை அயலி அம்மனாக மாற்றியுள்ளனர்"

"தில்லையாற்றங்கரை புதினத்தின் கதைதான் அப்படியே அயலி இணையத் தொடராக வெளிவந்திருக்கிறது. அதுகுறித்து நண்பர்கள் என்னிடம் கூறிய போது அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகே அயலி இணையத் தொடரை நான் பார்த்தேன். என் புதினத்தில் உள்ள கண்ணகி கோயிலை அயலி கோயிலாக்கி இந்த தொடரை எடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். என் புதினத்தின் கதையையும், காட்சிகளையும் அப்படியே எடுத்துக் கொண்டு, பெயரையும், இடத்தையும் மட்டும் மாற்றி அயலி என்று இணையத் தொடராக்கி இருக்கிறார்கள்." என்று அவர் கொந்தளித்தார்.

'அயலி' குழு மீது விரைவில் சட்ட நடவடிக்கை - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

"The Banks of the river Thillai புதினம் ஒரு ஹாலிவுட் படத்திற்கு உகந்த சிறந்த கதை என்று அதனைப் படித்த ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் பாராட்டினர். ஆனால், அந்த கதையை என்னிடம் கேட்காமலேயே, உரிய அனுமதி பெறாமலேயே இன்று அயலி இணையத் தொடராக எடுத்திருக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள என் நண்பர்களான, எழுத்தாளர்களும், நலம் விரும்பிகளும் என்னிடம் பேசியிருக்கிறார்கள். என் புதினத்தை ஆங்கிலத்தில் பதிப்பித்த கான்ரார்ட் பிரஸ் பதிப்பகத்திடமும் இதுகுறித்து பேசியுள்ளேன். அயலி இணையத் தொடர் தயாரிப்புக் குழு மீது விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பேன் " என்றார் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உறுதிபட.

எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ்நாட்டுடனான தொடர்பு

இலங்கையில் மனித உரிமை மீறல் பிரச்னை, பெண்ணும் உடல் நலமும், பெண்ணும் எழுத்தும் ஆகிய தலைப்புகளில் சர்வதேச மாநாடுகளில் அவர் கட்டுகரைகளை சமர்ப்பித்துள்ளார். இலங்கை, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் இலக்கியம், அரசியல், பெண்ணுரிமை உள்ளிட்ட விவாதங்கள் அவர் பங்கேற்றுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் பல கல்லூரிகளில் அவர் உரையாற்றியுள்ளார்.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எழுத்துகளை இலங்கையிலும், இந்தியாவிலும் பல மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்காக திறனாய்வு செய்துள்ளனர். தஞ்சை பல்கலைக் கழகத்தில் முனைவர் இராசு.பெவுன்துரை, பன்னாட்டுத் தமிழரும், பண்பாடும் என்ற பெயரிலும், கொங்கு நாடு பல்கலைக் கழகத்தில் முனைவர் த.பிரியா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில் புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்கள் என்ற பெயரிலும் புத்தகம் எழுதியுள்ளனர் என்பது அவரது சிறப்புகளை உணர்த்துவன.


'அயலி' இயக்குநர் முத்துக்குமார் என்ன சொல்கிறார்?

லண்டனில் வசிக்கும் இலங்கைத்தமிழ் பெண் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் குற்றச்சாட்டு குறித்து 'அயலி' இயக்குநர் முத்துக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த அவர், "அயலி கதை குறித்துச் சிந்தித்த போது தில்லையாற்றங்கரை நாவல் குறித்தோ, அதன் எழுத்தாளர் பற்றியோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. புத்தகம் மற்றும் எழுத்தாளர் பெயர் கூட எனக்குத் தெரியாது." என்று கூறிவிட்டு, அயலி கதையை உருவாக்கிய விதத்தை எடுத்துரைத்தார்.

'அயலி' கதை உருவானது எப்படி?

"கொரோனா பேரிடர் காலத்தின் போது, சென்னை அசோக் நகரில் நண்பர் ஒருவருடன் இருந்த போது, அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் நவ நாகரிக ஆடை அணிந்த வட இந்திய பெண், தனது தாயாருடன் வணங்கியதைப் பார்த்தேன். அப்போது, தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்த நிலையை எட்டியிருப்பதாகக் கூறி நண்பரிடம் சிலாகித்தேன். அதற்கு அவர், சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டையில் பூப்பெய்த சில மாதங்களிலேயே சிறுமி ஒருவருக்கு திருமணம் நடந்ததாக தெரிவித்தார். குழந்தை திருமணம் வழக்கொழிந்து விட்டதாக நான் கருதியிருந்த நேரத்தில், நண்பரின் பதில் அதிர்ச்சியளித்தது.


'அயலி' இயக்குநர் முத்துக்குமார்

அந்த நிகழ்வு தந்தை வேதனையில்தான், குழந்தை திருமணத்திற்கு எதிரான படத்தை உருவாக்க திட்டமிட்டேன். ஒரு கிராமமே அந்த நிலையில் இருந்ததாக குறிப்பிடுவது இந்த கால கட்டத்தில் பொருத்தமாக இருக்காது என்ற காரணத்தால்தான் கதை 1990-களில் நடப்பதாக மாற்றினேன். நாயகியை நாயகன் காப்பாற்றுவது போன்ற தமிழ்த் திரைப்படங்களின் ஸ்டீரியோ டைப்பை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். பெண்ணே தனது பிரச்னைகளை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாயகி தாமே முயன்று தளைகளை உடைத்து இலக்கு நோக்கி பயணிப்பதாக கதையமைத்தேன்." என்று அவர் கூறினார்.

"என் சிந்தையை கூர்தீட்டிய எழுத்தாளர்களுக்கு நன்றி கூறியுள்ளேன்"

அயலி தெய்வத்தின் முன் நின்று நாயகி தமிழ்ச்செல்வி 'தான் பூப்பெய்துவிடக் கூடாது' என்று வேண்டிக் கொள்ளும் காட்சிதான் அயலி கதையில் தனக்கு மிகவும் பிடித்தமான காட்சி என்று அவர் குறிப்பிட்டார். "வெளியுலகம் அறிந்திடாத நாயகியின் குழந்தைத்தனத்தையும், அவள் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தும் அந்த இடம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த வயதுப் பெண்ணின் மன ஓட்டத்தை சரியாக கூறியிருப்பதாகவே நான் எண்ணுகிறேன். பெண்களின் மனம், சிந்தனை, உணர்வுகள் போன்றவற்றை புரிந்து கொள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளே எனக்கு உதவின.

அந்த வகையில், அயலி கதையை வடிவமைக்க உதவிகரமாக அமைந்த படைப்புகளுக்காக தொ.பரமசிவன், தமிழ்ச் செல்வன், கீதா இளங்கோவன், மாதவி குட்டி, பிரியா தம்பி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தொடரின் இறுதியில் அவர்களது பெயர்களையும் இடம்பெறச் செய்திருக்கிறேன். அவர்களது படைப்புகளில் இருந்து அயலி கதைக்காக நான் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அந்த படைப்புகளே என் சிந்தனையை கூர்தீட்டின, நாயகியின் இடத்தில் இருந்து சிந்தித்து கதை எழுத உதவின என்பதற்காகவே அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன்." என்று அவர் கூறினார்.

"அயலி கதை என்னுடையது; உரிய இடத்தில் நிரூபிப்பேன்"

"உண்மை இவ்வாறிருக்க, எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் குற்றச்சாட்டு குறித்த முகநூல் பதிவை 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுதான் அவரது பெயரையும், அவர் எழுதிய நாவலையும் நான் கேள்விப்பட்டேன். இதுவரை நான் அந்த புத்தகத்தை படித்துக் கூட பார்க்கவில்லை. ஆகவே, அயலி தொடருடன் அந்த நாவல் ஒத்துப் போகின்றதா என்று என்னால் கூற முடியாது. வழக்கு தொடர அவர் தயாராகி வருவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. அயலி கதை என் சிந்தையில் உதித்தது. சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்வால் மனதில் உதித்த சிறுபொறியே அயலி கதையாக மாறியது. அயலி கதை என்னுடையது என்பதை உரிய இடத்தில் நிரூபிப்பேன்," என்றார் இயக்குநர் முத்துக்குமார் மிகவும் திட்டவட்டமாக.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

கருத்துகள் இல்லை: