புதன், 1 மார்ச், 2023

திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

 vinavu.com  :  திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை ஒன்றிய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18 அன்று வெளியிட்டது.
பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள திரிபுராவில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக வன்முறைகளில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகளை முடக்கி வருகிறது.
இந்நிலையில், “வன்முறையில்லா தேர்தல்” என்பதே இலக்கு என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைக் கால்தூசுக்குச் சமமாகக் கூட மதிக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது பாசிச பா.ஜ.க கும்பல்.
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மஜிலிஸ்பூர் தொகுதியில் இரு சக்கரவாகனப் பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியது பா.ஜ.க குண்டர்படை.



இது மட்டுமின்றி, “சச்சிந்திர லால் காலனி, மோகன்பூர், ரணீர் பஜார், பிரித்தா நகர் என பேரணி சென்ற பிற இடங்களிலும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதய்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது” என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சுதீப் ராய் பர்மன். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது மஜிலிஸ்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திரிபுரா மாநில தகவல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருமான சுஷாந்த சௌத்ரி தான் என்று குற்றஞ்சாட்டுகிறார், பர்மன்.

இத்தாக்குதல்களில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், திரிபுரா மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான அஜய் குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோபால் சந்திர ராய் உட்பட பலர் தாக்கப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தாக்குதல் தொடர்பாக 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 3 போலீசுதுறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். கடந்த 2018 முதலாக, பா.ஜ.க நடத்தி வரும் அத்தனை வன்முறைகளையும் திரிபுரா போலீசு வேடிக்கை பார்த்து வருவதாக சி.பி.எம். கட்சி தொடர்ந்து கூறி வரும் நிலையில், துணை ராணுவத்தினர் முன்னிலையில் தான் இத்தாக்குதல்கள் நடந்தன என்றும், திரிபுரா போலீசுதுறை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

உதய்பூரில் சி.பி.எம். கட்சியினரைக் கடுமையாகத் தாக்கியதோடு, கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்துள்ளது பா.ஜ.க கும்பல். தெற்கு திரிபுராவிலும், ஜிரானியாவில் உள்ள எஸ்.என் காலனியில் சி.பி.எம் முன்னாள் அமைச்சர் மாணிக் டே கலந்துகொண்ட கூட்டத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேற்கு திரிபுராவில் சி.பி.எம் கட்சி அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், தலாய் மாவட்டத்தில் காரில் வந்து கொண்டிருந்த திப்ர மோத்தா கட்சியின் ஊழியரான பிரனஜித் நமசுத்ரா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

படிக்க: குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
எதிர்க்கட்சிகளின் மீதான பா.ஜ.க குண்டர்களின் தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் சார்பில், “தேர்தல் வன்முறைகளை நிறுத்து”, “என் ஓட்டு என் உரிமை” போன்ற முழக்கங்களுடன் கடந்த ஜனவரி 21 அன்று பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்குப் பிறகு, மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ள தேர்தல் வன்முறைகள் குறித்து இக்கட்சிகளின் தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.

திரிபுராவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்வரை மதக்கலவரங்களோ, தேர்தல் வன்முறையோ திரிபுரா வரலாற்றில் நடைபெற்றதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல்கள் திரிபுராவில் காலூன்றிய பிறகு திரிபுராவின் நிறம் மாறியிருக்கிறது, மதக்கலவரங்களும், தேர்தல் வன்முறைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதுதான் திரிபுராவில் முதன்முறையாக தேர்தல் வன்முறை அரங்கேறியது. அச்சமயத்தில் மட்டும், தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தின்படி 370 புகார்கள் தேர்தல் வன்முறையை ஒட்டி பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

2018 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தொடங்கிய தேர்தல் வன்முறையானது, 2021-இல் நடந்த திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் உச்சநிலையை அடைந்தது. திரிபுரா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்கச் செய்வது, எதிர்க்கட்சியினர் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்துவது, மக்களை மிரட்டுவது, ஓட்டுப் போடவிடாமல் தடுப்பது என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பலின் தேர்தல் வன்முறை கோரத் தாண்டவமாடியது. மொத்தமுள்ள 334 இடங்களில் 122 இடங்கள் எதிர்த்தரப்பினர் இல்லாமலே பா.ஜ.க வெற்றி பெற்றது என்பதிலிருந்தே காவிக் கும்பலின் வன்முறை வெறியாட்டத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலானது தேர்தல் வெற்றிக்காகவோ, தேர்தல் நேரத்தில் நடைபெறுகிற வழக்கமான வன்முறையாகவோ இல்லை. இது தேர்தல் வன்முறையில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணம், திரிபுரா மாடல் எனலாம். தற்போது காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தேர்தல் வெற்றி என்ற தற்காலிக நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டதல்ல, அக்கட்சிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் நடத்தப்பட்டவையாகும். தேர்தல் அரங்கில்கூட பா.ஜ.க-விற்கு போட்டியாக எந்த அரசியல் கட்சியும் இருக்க முடியாது என்ற சூழலை பாசிஸ்ட்டுகள் உருவாக்கி வருகின்றனர். இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துவந்த காவி பாசிஸ்ட்டுகள் தற்போது முற்றிலுமாக ஒழித்துக்கட்ட துணிந்திருக்கிறார்கள் என்பதையே இத்தாக்குதல் காட்டுகிறது.

இதுநாள் வரை, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் தீவிர மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தும்போது, அதை எதிர்கொள்ள முடியாத இதர முதலாளித்துவக் கட்சிகள் தாங்களும் இந்துக்களின் பாதுகாவலர்கள்தான் என மென்மையான இந்துத்துவா போக்கினை முன்வைத்து வந்தனர். ஆனால், ‘இந்துப் பாதுகாவலர்’ போட்டியில் பாசிஸ்ட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுவிட்டனர்.

படிக்க: குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!
பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டும் நோக்கமற்ற இவர்கள், தற்போது நேரடித் தாக்குதலில் பாசிஸ்ட்டுகள் இறங்கியிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். சகல ஆயுதங்களும் தரித்து நிற்கும் எதிரியின் முன்னே வெறுங்கையோடு நிற்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டனர். எனினும், மக்கள்விரோத – ஜனநாயக விரோத இந்துத்துவா சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி முறியடிக்கவும், ஜனநாயகப்பூர்வமான மாற்றுத்திட்டம் ஒன்றை – அவர்கள் நம்பும் தேர்தல் வரம்புக்குள் கூட – முன்வைத்து மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் யாரும் தயாரில்லை.

இதே நிலையில்தான் திரிபுராவில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சியும் இருந்து வருகிறது. அவர்கள் கம்யூனிஸ்டு கட்சி என தங்களை அறிவித்துக் கொண்டிருப்பதால், சில செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் கட்டாயம் அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. இதனால், பழங்குடிகள் – பழங்குடி அல்லாதோர் என அனைவர் மத்தியிலும் தனது வாக்கு வங்கியையும் – செல்வாக்கையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பரிசீலித்த சி.பி.எம். கட்சியின் தலைமையானது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் – சித்தாந்த – ஸ்தாபன தளங்களில் போராட்டங்களை நடத்தி மக்களை வென்றெடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தது. ஆனால், இதுவரை இவை எவற்றையும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. மாறாக, வழக்கமான பொருளாதாரப் போராட்டங்கள் – தேர்தல் கணக்குகளுக்குப் பொருத்தமான வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. கேரளா தவிர்த்த மற்ற மாநிலங்களில் கட்சி சுருங்கி வருவதோடு, மக்கள் அடித்தளத்தையும் இழந்து வருகிறது என்பதை அவர்களது தேர்தல் பரிசீலனை அறிக்கைகளும், கட்சி மாநாட்டு அறிக்கைகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

புரட்சி என்பதே நாடாளுமன்றத்தின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்ட இக்கட்சி, பாசிசம் பற்றிய புரிதலே இல்லாமல், இதர கட்சிகளைப் போலவே தேர்தல் மூலமாகவே பா.ஜ.க பாசிசக் கும்பலை வென்றுவிட முடியும் என்ற சிந்தனைப் போக்கில் மூழ்கிக் கிடக்கிறது. பாசிஸ்ட்டுகள் ஆயுதந்தாங்கிய தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையிலும் கூட வன்மையாகக் கண்டிப்பது, கடுமையாகக் கண்டிப்பது என அறிக்கைப் போரை நடத்தி வருகிறது.

படிக்க: அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !

2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே, கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் 27 சதவிகித வாக்குச் சாவடிகளில் இடது முன்னணியால் முகவரை நியமிக்க முடியவில்லை. இப்போது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவோ, தேர்தல் பிரச்சாரம் செய்யவோ முடியாத நிலைக்கு பாசிஸ்ட்டுகள் கொண்டு வந்துவிட்டனர். ஆனால், எவ்வளவு அடித்தாலும், செக்கு மாடுகளைப் போல தலைமையும் அணிகளும் தேர்தல் வரம்புக்குள் சுற்றிவருபவர்களாக மாறியிருப்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய வழிமுறைகளால் தேர்தலில் கூட சி.பி.எம். கட்சி பெற்றது ஏதுமில்லை, இழந்தவையோ ஏராளம். குறிப்பாக, தேர்தல் அரசியலில் இருக்கும் ஒரு கட்சி என்ற அந்தஸ்தையே பறிகொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இவர்களுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதால், ஓட்டுப் போடுவதைக் கூட குறைத்து வருகின்றனர். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரண்டு சதவிகித ஓட்டுகளைக் கூட வாங்க முடியாத நிலைக்குப் போயிருக்கிறது. எனவே, தேர்தல் மூலமாகவே சமூக மாற்றத்தையும், பாசிச எதிர்ப்பையும் சாதிக்க முடியும் என்ற கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, குறைந்தபட்சம் தமது கட்சி மாநாட்டு அறிக்கைகளில் இருக்கும் படிப்பினைகளையேனும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அரசியல் அரங்கில் சி.பி.எம். கட்சி தாக்குபிடிக்க முடியும்.

தேர்தல் அரங்கில் பாசிஸ்ட்டுகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் விருப்பம், இனி வெறும் விருப்பமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை பாசிஸ்ட்டுகள் உணர்த்தி வருகின்றனர். தேர்தலுக்கு வெளியே மக்களை அரசியல் – சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அணிதிரட்டுவதும், பாசிச எதிர்ப்பு மக்கள் படையொன்றை உருவாக்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்துவதும்தான் இனி தீர்வு. இதுவே, தேர்தலைத் தீர்வாகக் கருதும் எதிர்க்கட்சிகளும், அதை ஒரு வழிமுறையாகக் கருதுகிற ஜனநாயக சக்திகளும் திரிபுரா அனுபவத்திலிருந்து பெற வேண்டிய படிப்பினையாகும்.

அப்பு

கருத்துகள் இல்லை: