திங்கள், 27 பிப்ரவரி, 2023

யாழ்ப்பாணத்தை 1694 முதல் 1697 வரை ஆண்ட Holland தளபதி Hendrick Zwaar- decroon யின் அரிய வரலாற்று குறிப்பு

HENDRICK ZWAARDECROON-GOVERNOR GENERAL [After VALENTIJN-VOC, 1724 ...
Hendrick Zwaar- decroon

 தாய்வீடு : ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு - மணி வேலுப்பிள்ளை
1667 ஜனவரி 26-ம் திகதி ரொட்டர்டாமில் பிறந்த ஹென்றிக் சுவார்தகுரூன் (Hendrick Zwaar- decroon) 1694 முதல் 1697 வரை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தளபதியாக விளங்கியவர். மூன்றே மூன்று ஆண்டுகளுக்குள் அவர் வட - கீழ் இலங்கை முழுவதையும் கண் காணித்து, தனது பின்னவர்களுக்கு வழிகாட்டவென விட்டுச்சென்ற நினைவுத்திரட்டு அரியதொரு வரலாற்று ஆவணமாகும்.
தனது தாய்மொழியில் அவர் எழுதிய நினைவுத்திரட்டு பிரித்தானிய ஆட்சியாளரால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, இலங்கை அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 1911-ல் வெளியிடப்பட்டது. அதன் படப்பிரதி ஒன்று கலிபோர்ணியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திரு. பத்மநாப ஐயர் ஊடாக அண்மையில் எமக்குக் கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பில் 95 பக்கங்கள் கொண்டது.


இலங்கையில் தாம் கட்டியாண்ட வட - கீழ்ப் புலத்தை யவ்னாபற்றம் (Jaffnapatam) என்று ஒல்லாந்தர் குறிப்பிட்டார்கள். இது யாழ்ப்பாணப் பட்டினம் என்பதன் ஒல்லாந்த உச்சரிப்பு. ஒல்லாந்தரின் சொல்லாட்சியில் இது யாழ்ப்பாண மாநகரத்தை மட்டும் குறிக்கவில்லை. ஓல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட வட-கீழ்ப் புலம் முழுவதையும் குறித்தது.

ஆள்புலம்: தீவகம், குடாநாடு, வன்னி, மன்னார், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தமது ஆள்புலத்தைக் கட்டியாள்வது, பொருள்வளம் பெருக்குவது, வணிகம் புரிவது, வரி வசூலிப்பது... பற்றி எல்லாம் தன் பின்னவர்களுக்கு அவர் மதியுரைகளும், அறிவுறுத்துரைகளும் விடுத்துள்ளார்.

தீவகம்: 'நாங்கள் காரைதீவை Amsterdam என்றும், வேலணைதீவை Ley-den என்றும், புங்குடுதீவை Middleburg என்றும், நெடுந்தீவை Delft என்றும், நைனாதீவை Haarlem என்றும், அனலைதீவை Rot-terdam என்றும், இரணைதீவை de Twee Gebroeders அல்லது Hoorn & Enkhuisen என்றும் குறிப்பிடுகிறோம்' என்று தெரிவித்து தமது தாயக வேட்கையை வெளிப்படுத்துகிறார்.

குடாநாடு: வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரிவுகளையும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனைக்கோட்டை, நல்லூர், கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, வல்லை, வல்லிபுரம் ஆகிய ஊர்களையும் பற்றிய குறிப்புகள் இந்நினைவுத்திரட்டில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன.

வன்னி: தமது ஆள்புலத்தில் மிகவும் பரந்து விரிந்தது வன்னியே என்று கூறும் ஒல்லாந்த தளபதி வன்னியரைப் பயன்படுத்தி புளியங்கு-ளம், மாங்குளம், வேப்பங்குளம், முள்ளியவளைப் பகுதிகளின் கானக வளங்களைக் கையகப்படுத்தும் விதத்தை அவர் எடுத்துரைக்கிறார். அதேவேளை 'வன்னியரின் கொட்டத்தை அடக்க வேண்டும்!' என்றும் அறிவுறுத்துகிறார்.

மன்னார்: முத்துக்குளிப்பு தொழிலையும், கற்பிட்டி-அரிப்பு - மாந்தோட்டை-முசலி - செட்டிகுளம் பகுதிகளின் இயற்கை வளங்களையும் குறிப்பிடுகிறார். காலி - மாத்தறைப் பகுதிகளிலிருந்து புத்தளம், மன்னார் வழியாக வடபுலச் சந்தைக்கு யானைகளைக் கொண்டு வருவதற்கு வசதியாக புத்தளம் - மன்னார் பாதையை அகட்டும் பணியை திறம்பட மேற்கொண்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

கிழக்கு: திருகோணமலை, தென்னைமரவாடி, கொட்டியாரம், பெரியதம்பனை, தம்பலகாமம், மட்டக்களப்பு பகுதிகளின் தெங்குவளம், பனைவளம், யானை வணிகம் என்பவற்றை விருத்திசெய்யும் விதங்களையும் அவர் விதந்துரைக்கிறார்.

திணைக்களங்கள்: அவரது நிரலின்படி கோட்டை, அரசியல் மன்றம், செயலகம், திறைசேரி, நீதிமன்று, குடிமை நீதிமன்று (காணிக் கந்தோர்), வேலைக்களம், பண்டசாலை என்பன யாழ்ப்பாணத் திணைக்களங்களாய் அமைந்தன.

படைத்துறை: தன்னையும் உள்ளடக்கி அவர் முன்வைக்கும் படைத்துறைப் பட்டியலில் தளபதி, துணைத்தளபதி, சிப்பாய்கள், மாலுமிகள், குடிப்படையினர், கூலிப்படையினர் அடங்கியிருந்தனர். படையினருக்கு வேண்டிய பீரங்கிகள், பீரங்கி ஊர்திகள், துவக்குகள், தோட்டாக்கள், வெடிமருந்து வகைகள், எரிகுண்டுகள், எறிகுண்டுகள் முதலியவை போதியளவு இருப்பில் இருந்தன. அவர்களுக்கு தானியமும், எண்ணெயும், மிளகும், சாராயமும் தாராளமாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

பணித்துறை: திசாவை, அதிகாரி, தலைமை எழுதுநர், பிசுக்கால், வரிவசூலிப்பவர், தோம்புக்காரர், கணக்கப்பிள்ளை, சம்பளக் கணக்குப்பிள்ளை, சிறாப்பர், உலாந்தா (அளவையாளர்), நடுத்தீர்ப்பாளர், ஆராய்ச்சி, உடையார், விதானையார், கையாள் (நீர்ப்பாசனத்துக்கு பொறுப்பானவர்), பட்டங்கட்டி (முத்துக்குளிப்புக்கு பொறுப்பானவர்), திருமண ஆணையாளர், தீயணைப்புப் படை கண்காணிப்பாளர், நகர பாலகர், மேற்பார்வையாளர்கள், பணிவிடையாளர்கள், கூலியாட்கள், நெசவாளர்கள், பண்டாரப்பிள்ளை, அடிமைகள் முதலியோர் பணித்துறையினுள் அடங்குவர்.

வருவாய்: யானை, கறுவா ஏகபோக வணிகம், தலைவரி, பதின்மை வரி, சோலை வரி, சுங்கத்தீர்வை, கடவுச்சீட்டுக் கட்டணம், உரிமக் கட்டணம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. தலைவரி என்பது ஒவ்வொருவரும் செலுத்தவேண்டிய ஒரேயளவு வரி. பதின்மை வரி என்பது ஒருவரின் வருமானத்தில் 10 விழுக்காடு. குடிமக்களின் வருமானமும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துவருவதால், தலைவரியும், பதின்மைவரியும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

பொருளாதாரம்: இலாபம் மிகுந்த யானை, கறுவா வியாபாரம் ஒல்லாந்த ஆட்சியாளரின் ஏகபோகமாய் இருந்தது. பூநகரி, புளியங்குளம், பூவரசங்குளம், கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப்புலத்தில் யானைகளைப் பிடித்து வடபுலத்துக்கு கொண்டு வந்து விற்பது பற்றிய கணக்குவழக்கு மிகவும் நுணுக்கமாய் தரப் படுகிறது.

வணிகம்: வங்காள மரக்காயர்கள் அரிசி, சீனி, வெண்ணெய் முதலிய பொருட்களை இங்கு கொண்டுவந்து விற்று, அவற்றுக்குப் பதிலாக காசை விடுத்து யானைகளைக் கேட்டுவாங்கி, மரக்கலங்களில் ஏற்றிச்செல்வதாகத் தெரிவிக்கிறார். யானைகளின் பெறுமதி அத்தகையது!

'அக்கரையிலிருந்து' அடிமைகள் கொண்டுவரப்படுவதை 'இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறும் தளபதி, அவர்களை 'பிராணிகள்' என்று குறிப்பிடுகிறார். 1694 முதல் 1696 வரை 3,589 அடிமைகள் 'இறக்குமதி செய்யப்பட்டதாகவும்', ஒவ்வோர் அடிமையையும் ஒரு சிறங்கை அரிசிக்கு உள்ளூர்வாசிகள் வாங்கிச்செல்வதாகவும் தெரிவிக்கிறார்.

'இப்பிராணிகளை' வன்னியர்கள் வாங்கிச்சென்று வயல்வேலை செய்விப்பதாகவும், கண்டி அரசுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதாகவும், போர்மூளும் வேளைகளில் படைவீரர்களாகப் பயன்படுத்துவதாகவும், அவர்கள் பொக்குளிப்பான் வாய்ப்பட்டு மடிவதாகவும், உள்ளூரில் பொக்குளிப்பான் பரவுவதாகவும், அவர்களின் 'இறக்குமதியால்' கிடைக்கும் தீர்வையை விஞ்சிய கேடு விளைவதாகவும் முறையிடுகிறார்.

உள்ளூரிலிருந்து தேங்காய், நெல்லு, புகையிலை, பாக்கு, வெற்றிலை, மிளகு, வாழைப்பழம், கொடிமுந்திரி, பனங்காய், ஊமல், வைக்கோல் என்பன சந்தைக்கு வருவதை தெரிவிக்கும் தளபதி ஆடு, மாடு, கோழி வளர்ப்பையும் எடுத்துரைக்கிறார். சிரட்டைக்கரி, சங்கு, சுண்ணாம்பு, ஆளி எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், துவக்குமருந்து, துத்தநாகம், செப்பு, வெட்டுமரம், பவளக்கல், பாய், கயிறு, தீராந்தி, சிலாகை, ஓடு, சிப்பி, சோகி முதலியவை யாழ்ப்பாண பட்டினத்தின் உற்பத்திப்பொருட்கள். துவக்குச் சோங்கு, பீரங்கி ஊர்தி ஆக்குவதற்கு வேண்டிய மரவகைகள் வன்னிக் காட்டிலிருந்தும், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரையான கரையோரத் தோப்புகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப் பட்டன.

பருத்தித்துறையில் பவளக்கல் அகழப்பட்டு, சூளையில் சுடப்பட்டு, சுண்ணாம்பு ஆக்கப்பட்டு, தோணிகளிலும் தெப்பங்களிலும் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நாகபட்டினத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காங்கேசன்துறையில் சுண்ணக்கல் சுடுவோருக்கும் பவளக்கல் வழங்கப்பட்டது.

'காரைதீவில் சிறந்த சாயவேர் கிடைக்கிறது. மன்னாரிலும் பெருமளவு கிடைக்கிறது. வன்னியிலும் ஊர்காவற்றுறையிலும் கிடைக்கும் சாயவேர் தரம் தாழ்ந்தது. அதை ஏனைய சாயவேர்களுடன் கலந்து சாயம் ஆக்கப்படுகிறது. சோழமண்டலத்திலிருந்து இறக்குமதியாகும் துணிமணிகளுக்கு சாயம்பூசி விற்கப்படுகிறது' என்பது ஒரு குறிப்பு.

'நெடுந்தீவிலிருந்து உடலுறுதிவாய்ந்த குதிரைகள் கொழும்புக்கும், நாகபட்டினத்துக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு, ஏலங்கூறி விற்கப்படுகின்றன. பருமன் குறைந்த, குறைகள் மிகுந்த குதிரைகள் சுட்டுக்கொல்லப்படுகின்றன. ஆதலால் உடலுறுதிவாய்ந்த குதிரைகள் பெருகி வருகின்றன. அராபிய, பாரசீக நாடுகளிலிருந்தும் சிறந்த குதிரைகள் தருவிக்கப்படுகின்றன' என்பது வேறொரு குறிப்பு.

குறிப்பு. 'பருத்தித்துறையிலும், ஊர்காவற்றுறையிலும் கடவுச்சீட்டுகள் வழங்கும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வெளியார் கடவுச்சீட்டு இல்லாமஒ; பயணம் செய்வதையும், உரிமம் இல்லாமல் சாமான் சண்டி ஏற்றி இறக்குவதையும், அடிமைகளின் திருட்டையும், யானைகளின் ஊடுருவலையும், வன்னியரும் - சிங்களவரும் அத்துமீறி நுழைவதையும் தடுக்கும் வண்ணம் பூநகரியிலிருந்து, குறிப்பாக ஆனையிறவு, பளை பாலங்களிலிருந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார் தளபதி.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் தெங்குவளம், நெல் சாகுபடி பற்றிக் குறிப்பிடும்பொழுது, 'அங்கு யானைகளுக்கு ஓலை கொடுக்க அதிக தென்னைகள் தறிக்கப்படுவதால், தெங்குவளம் குன்றி வருகிறது. அதற்காக மாவட்டவாசிகளின் தலைவரியை மேலிடம் குறைத்திருக்கத் தேவையில்லை, அவர்களை சுதந்திர வர்த்தகம் புரிய அனுமதித்திருக்கத் தேவையில்லை. அவர்களின் தேங்காய் ஏற்றுமதி தடைசெய்யப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறார்.

மக்கள்: தளபதியின் கணக்குப்படி யாழ்ப்பாணப் பட்டினத்தின் மக்கள் தொகை 1,69,299 பேர். அவர்களை மலபாரிகள் என்று குறிப்பிடும் தளபதி, ஒருசில தடவைகளே மக்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் சிங்களவர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் கணிப்பில் மலபாரிகள் (அதாவது யாழ்ப்பாணப் பட்டினத்து மக்கள்) 'தற்பெருமையும், செருக்கும், பிடிவாதமும், சோம்பலும்' மிகுந்தவர்கள்.

'பொய்சொல்லி ஏமாற்றும் தந்திரம் படைத்த இந்த இனத்துடன் மிகவும் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். தமக்கு நன்மை கிடைக்கும் என்றால், இவர்கள் பொய்ச்சத்தியம் செய்யவும், பொய்ச்சாட்சியம் சொல்லவும் தயங்கமாட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டு, வல்லடி வழக்குத் தொடுத்து, வெல்லும்வரை வழக்காடி மகிழ்வார்கள். அதற்காக போர்த்துக் கேயர் காலத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளையே புதுப்பிப்பார்கள்.'

'முன்னர் அஞ்ஞான மன்னரும், பின்னர் போர்த்துக்கேயரும் ஆண்ட காலங்களில் இவர்கள் சாதி, சாதியாகப் பிரிந்து வாழ்ந்து பழகியபடியால், சாதிப்பிரிவுகளில் நாம் தலையிடக் கூடாது' என்று தனது பின்னவர்களுக்கு புத்திமதி கூறும் தளபதி தனது ஆள்புலத்தில் 40 சாதிகளை எண்ணிக் கணக்கிட்டுள்ளார்.

எண்ணிக்கை மிகுந்தவர்களாய் வேளாண்மையில் ஈடுபட்ட வெள்ளாளரின் ஆதிக்கம் பற்றி கொழும்பு ஆளுநருக்கும், இந்திய தலைமை ஆளுநருக்கும், பற்றேவிய உச்சபீடத்துக்கும் முறைப்பாடு தெரிவிக்கிறார். 'வெள்ளாளரின் சாதித் திமிருக்கு இடங்கொடுத்தால் மாத்திரமே, மற்றெல்லா அலுவல்களிலும் அவர்கள் கூனிக் குறுகி, கெஞ்சிக் கூத்தாடி வேலை செய்வார்கள்' என்று வலியுறுத்துகிறார்.

'காசாளர்களின் உடந்தையுடன் செட்டிவியாபாரிகள் தரம் குறைந்த வராகன் நாணயங்களை சோழமண்டலத்திலிருந்து தருவித்து, நல்லது கெட்டது தெரியாத அப்பாவிக் குடிமக்களுக்கு, குறிப்பாக திருகோணமலைக்கு வரும் சிங்களவருக்கு கைமாற்றிக் கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதித்ததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது அவரது வேண்டுகோள்களுள் ஒன்று.

'பண்டசாலைப் பணியாளர்கள் சிறுகச்சிறுக அரிசியைக் களவெடுத்து உள்ளூர்வாசிகள் ஊடாக சந்தையில் விற்றுக் காசாக்கி வருகிறார்கள். ஆகவே தேவைக்கதிகமாக அரிசியச் சேமித்து வைக்கக்கூடாது' என்று வேறு எச்சரிக்கிறார்.

'கொழும்பிலிருந்து தருவிக்கப்படும் பன்றி இறைச்சி இடைவழியில் பழுதடைந்துவிடும். கரையோரங்களில் கிடைக்கும் கருவாடு பழுதடையாது. ஆனால் அதன் நெடியை தாங்க முடியாது என்பது இன்னோர் எச்சரிக்கை.

'சாராயத்தை அளவாகக் குடித்தால் நலம் பயக்கும், அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து விளையும்' என்று அறிவுறுத்தும் அதே வேளை, சாராய வியாபாரிகளும், ஏற்றி இறக்குவோரும் கலப்படம் செய்வதாகக் கேள்வி' என்றும் குறிப்பிடுகிறார்.

குருமார்: 'ஆட்டிறைச்சியும், கோழி இறைச்சியும், வெண்ணெயும் கிடைக்கும் தேவாலயங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் மட்டுமே எமது குரு மார் சமயம் பரப்பச் செல்கிறார்கள். பச்சிலைப்பள்ளி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வறிய பகுதிகளுக்குப் போகாமல் தலைமறவாகி விடுகிறார்கள். கட்டளையிட்டால் மாத்திரமே அங்கு போவார்கள். போகும்பொழுது மனைவிமாரையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள். இவர்களை விருந்தோம்புவது அந்த ஏழைகளுக்கு எவ்வளவு கடினம்!

அவர்களையும், சில தேவாலயங்கள் குதிரைக் கொட்டில்கள் போல் தென்படுவதையும் எண்ணி வருந்துகிறேன்' என்று கூறுகிறார்.

1697-ல் மேலிடத்து உத்தரவின்படி தளபதி ஹொன்றிக் சுவார்தகுரூன் தற்காலிகமாக ஆணையாளர் பதவியேற்று இந்தியாவுக்குப் புறப்படும் தறுவாயில் தனது பின்னவர்களுக்கு விட்டுச்சென்ற வழி காட்டியின் சுருக்கம் இது. அவர் யாழ்ப்பாணம் திரும்பும்வரை மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் தற்காலிக ஆணையாளராகப் பணியாற்றிய வேளையில், அதாவது 1714-ல் ஒல்லாந்தரின் இந்திய ஆள்புலத்து ஆளுநராகப் பதவியுயர்வு பெற்றபடியால், அவர் யாழ்ப்பாணம் திரும்ப வில்லை. 1724-ல் ஓய்வுபெற்று, தாயகம் திரும்பாமல், பற்றேவியா சென்று, அங்கேயே வாழ்ந்து, 1728- அவர் இயற்கை எய்தினார்.

Memoir of Hendrick Zwaardecroon Commandeur of Jaffnapatam (afterwards Governor-General of Nederlands India) 1697. FOB THE GUIDANCE OF THE COUNCIL OT JAFFNAPATAM DURING HIS ABSENCE AT THE COAST OF MALABAR

Translated by SOPHIA Dutch Translator with an Introduction and Notes by the Government Archivist. COLOMBO: H. C. COTTLE GOVERNMENT PRINTER CEYLON 1911.

தாய்வீடு இதழிலிருந்து
ஆக்கம் mani.v@thaiveedu.com

கருத்துகள் இல்லை: