அதுமட்டுமல்லாது சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தியாகராய நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வேலைக்குச் செல்வோரும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பகுதியாக தியாகராயநகர் விளக்குகிறது. மாம்பலம் இரயில் நிலையத்தில் இறங்கி, தியாகராயநகர் பேருந்து பணிமனைக்கோ அல்லது பணிமனையிலிருந்து இரயில் நிலையத்திற்கோ செல்வது என்பது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல. ரெங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டியபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிகபகுதிக்கு வருவோரும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.
பல கோடிகளுக்கு வணிகம் நடைபெறும் பகுதியாக இப்பகுதி விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இப்பொழுதியை கடந்து செல்வதற்கு ஒரு வழி ஆகி விடும் என்றே சொல்லலாம். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும் வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர் மண்டலம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.4346 கோடியில் புதிதாக உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்துடன் மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர். அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இம்மேம்பாலம் சுமார் 282மீ நீளம் மற்றும் 22.70மீ அகலமுடையது. உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இருபுறமும் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சாலை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மற்றும் அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் இரயில் நிலையம் அருகே சந்திக்கடவு எண். 1க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப் ஒதுக்கீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மேம்பாலமானது கொளத்தூர் பகுதியை அண்ணா நகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இம்மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி,ஐ.சி.எப், அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயனடைவர்.
இம்மேம்பாலம் சுமார் 500மீ நீளம் மற்றும் 8.50மீ அகலமுடையது. ஐ.சி.எப். பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு, சாலைப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கொளத்தூர் பக்கம் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தியாகராயநகர் பகுதியில் நெரிசலை கணக்கில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தியாகராயநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் இரயில் நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயனிக்க ரூ.26.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் (SKY WALK) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நடைமேம்பாலம் 600மீ நீளம் மற்றும் 4.20மீ அகலமுடையது. இவற்றில் நடைமேம்பாலம், பேருந்து நிலைய படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (Escalator), மின்தூக்கி (Lift), இரயில்வே நிலைய இணைப்பு, ரங்கநாதன் தெருவில் படிக்கட்டுகள் ஆகியவை முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரயில்வே நிலையம் அருகில் மின்தூக்கி அமைக்கும் பணி, விளக்குகள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையம் அருகில் ஒப்பனை அறைகள், ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆகாய நடைமேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் பேசுகையில் “தினமும் தாம்பரத்தில் இருந்து தியாகராய நகர் பகுதிக்கு வேலைக்கு வந்து செல்கிறேன் ரயிலில் இறங்கி இப்பகுதியை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது அதேபோல் மாலையில் உரிய நேரத்தில் ரயிலை பிடிக்க இயலவில்லை 15 நிமிடங்கள் ரெங்கநாதன் தெருவை கடப்பதற்கு மட்டுமே ஆகிறது, இந்த நடைமேம்பாலம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது இது என்னை போன்றோருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்” என்கிறார்..
அதேபோல் தியாகராநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் கூறுகையில், இப்பகுதியில் 30ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன் தினமும் இவ்வழியாக வேலைக்கு செல்வோரும் கல்லூரி செல்வோர் என அனைவர மிகுந்த நெரிசல் தவிக்கின்றனர் மாம்பலம் -தியாகராயநகர் ஆகாய நடைமேம்பாலம் மூலம் நெரிசல் தவிர்க்கப்பட்டு பொதுமக்கள் எளிதில் பயணிக்கலாம். இதில் லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது என தெரிவித்தார்.
ஆட்டோ ஒட்டுநர் செல்வம் கூறுகையில் , “மாம்பலம் இரயில் நிலையம் - தியாகராயநகர் பேருந்து நிலையம் வரையிலான ஆகாய மேம்பால நடைபாதை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் நெரிசல் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும்” என்கிறார்.
தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு வருங்கால வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது மேம்பாலங்கள் அமைப்பது, மேம்பாலங்களுக்கு கீழ் பூங்காக்கள், செயற்கை நீருற்றுகள் அமைப்பது, ஓவியங்கள் வரைவது என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
வாகன போக்குவரத்திற்கு மட்டுமன்றி பொதுமக்கள் எளிதாக பாதுகாப்பாக கடக்கவும் நடைமேம்பாலங்கள் உரிய இடத்தில் அமைத்து மக்கள் நலனில் முன்னோடியாக அரசு திகழ்கிறது என்றால் அது மிகையல்ல..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக