திங்கள், 27 பிப்ரவரி, 2023

டெல்லியில் உதயநிதி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?

BBC News தமிழ் : டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?
டெல்லி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் தமிழ்நாடு இல்ல டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்
டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு மாநில அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும் மரியாதை போல வரவேற்பும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.


தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்ட மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு வருவது இது முதல் முறையாகும்.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார்.

இதையொட்டி தமது பயணத்தை டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களுடனான அறிமுக நிகழ்வாகவும் பயன்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் தமது துறையுடன் தொடர்புடைய சில மத்திய அமைச்சர்களை சந்திக்க அவரது சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி ஆகியோர் முன்பே திட்டமிடப்பட்ட பல நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை கலந்து கொண்டுள்ளனர். இதனால், உதயநிதிக்கு நேரம் ஒதுக்கித் தர இயலாத தங்களின் நிலை குறித்து மத்திய அமைச்சர்களின் செயலர்கள் உதயநிதி அலுவலகத்திடம் விளக்கியுள்ளனர்.

அதே சமயம், உதயநிதி பிரதமர் நரேந்திர மோதியை செவ்வாய்க்கிழமை காலையில் சந்திக்க அவரது அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் இந்தத் தகவலை அமைச்சர் உதயநிதி அலுவலகமும் பிரதமர் அலுவலகமும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


டெல்லியில் அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள்

இந்த நிலையில், தமிழக அமைச்சரின் முதல் நாள் பயணத்தை 'பிஸி' ஆக வைத்திருக்கும் வகையில், அவரை டெல்லியில் உள்ள தமிழ் சங்கம், டெல்லி முத்தமிழ் பேரவை, டெல்லி தமிழ் கல்விக் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் அடுத்தடுத்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவை எல்லாம் உதயநிதிக்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவம், மாநில அமைச்சரவையில் அவரை முதல்வருக்கு நிகரான அல்லது அதற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தனர்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "உதயநிதி அமைச்சரான பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்ட அமலாக்கத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அத்துடன் திமுகவிலும் ஆட்சியிலும் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஆக உதயநிதியை திமுக தொண்டர்களும் அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்," என்கிறார்.

இதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குபேந்திரன் குறிப்பிடுகிறார்.
டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் சத்யசுந்தரம் டெல்லி முத்தமிழ் பேரவை தலைவர் என்ற அடிப்படையில் தமது சங்க நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

"உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு போன்றோர், தம்பியின் அமைச்சரவையில் நாங்களெல்லாம் பணியாற்ற விரும்புகிறோம் என பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். எனவே உயர் பதவியில் உதயநிதியை தயார்படுத்துவதற்கு அனைத்து காய்களும் நகர்த்தப்படுகின்றன," என்கிறார் குபேந்திரன்.

உதயநிதியை பிரதமர் நரேந்திர மோதி சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக பேசப்படுவது குறித்து அவரிடம் கேட்டோம்.

"தமிழ்நாட்டில் இருந்து செல்லும் தனிப்பட்ட அமைச்சரை பிரதமர் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகலாம். ஆனால், அமைச்சர் உதயநிதி அப்படி கிடையாது. அவருக்கு ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்ற பின்புலம் இருக்கிறது. அந்த வகையில் முதல் முறையாக அமைச்சரான பிறகு நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் பிரதமரை சந்திப்பதில் தவறு கிடையாது. அவருக்கு நேரம் ஒதுக்கி பிரதமரும் அவரை அங்கீகரித்திருப்பதாகவே பார்க்கிறேன்," என்கிறார் குபேந்திரன்.

அசாதாரண சந்திப்பு
இதைத்தொடர்ந்து, டெல்லியில் பணியாற்றி வரும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த மத்திய குடிமைப்பணி குரூப் 1 அதிகாரிகள் அமைச்சர் உதயநிதியை திங்கட்கிழமை மாலையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதான் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக தமிழகத்தில் இருந்து மாநில அமைச்சர்கள் டெல்லிக்கு அரசுமுறை பயணமாக வந்தால் அவர்களை டெல்லியில் உள்ள தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவாக சந்திப்பது கிடையாது. மாநில முதல்வர் வந்தால் மட்டுமே அத்தகைய பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படும்.

ஆனால், முதல் முறையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு சைரன் போலீஸ் வாகன பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது நிகழ்ச்சிகளை செய்தித்துறை அலுவலர்கள் மிக நெருக்கமாக கவனித்து ஊடகங்களிடம் தகவல் பரிமாறினர்.

முதல்வர் டெல்லிக்கு வரும்போது அவருக்கு டெல்லிவாழ் தமிழர்கள் விமான நிலையத்திலேயே, தமிழக பாரம்பரிய இசை கலைஞர்களின் நடனத்துடனும், மேள தாளத்துடனும் மரியாதை கொடுப்பர். அது உதயநிதிக்கு வழங்கப்படவில்லை. ஆனால், டெல்லி சிறப்புப் பிரதிநிதி நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்ல அதிகாரிகள் குழுவும் சென்றிருந்தது.

முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசின் உள்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து வந்தனர். 

கருத்துகள் இல்லை: