வெள்ளி, 3 மார்ச், 2023

எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

 மின்னம்பலம் - christopher  :  எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்
கழகத்தின் ஒற்றுமைக்கு யார் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்களை தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,575 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களை சந்தித்தார்.


அவர் பேசுகையில், “ஈரோடு இடைத்தேர்தலில் தோற்றது எங்களுக்கு மனவேதனை அளித்துள்ளது. ஒத்துப்போக வேண்டும் என்ற உணர்வோடு கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக எடப்பாடியும் அவரது தரப்பினரும் ஒற்றுமைக்கு உலை வைத்தார்கள்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்த தலைமையை மாற்றி பொதுச்செயாலாளர் பதவியை பெற முனைந்தார்கள். கழக உறுப்பினர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்சியின் அடிப்படை விதியை மாற்றினார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஓபிஎஸ்சையும், மூத்த உறுப்பினர்களையும் உதாசீனப்படுத்தினார்கள்.

இந்த இடைத்தேர்தல் வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரட்டை இலை சின்னத்தை வழங்கி அதிமுக தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தார்கள். அந்த தீர்ப்பை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் அந்த தீர்ப்பின்படி எடப்பாடி தரப்பினர் நடந்துகொள்ளவில்லை. இதனை அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தோம். பொதுக்குழு வேட்பாளர்களின் பட்டியலை பெற்று ஒருவரை அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக வாக்கெடுப்பு நடத்தி அவர்களே வேட்பாளரை அறிவித்தார்கள். அதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் கிடைத்தால் போதும் என்ற வகையிலே இருந்தோம். அதேபோல இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதற்கு பிறகு எங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்று, இரட்டை இலைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் உழைக்கின்றோம் என்று கூறியும், ஓபிஸ் மற்றும் அவரது தரப்பினர் என யாரையுமே எடப்பாடி ஒரு மரியாதைக்கு கூட கூப்பிடவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் அங்குள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூட தேர்தல் பணியில் ஈடுபடுத்தவில்லை. எனினும் எங்களால் முடிந்த ஒத்துழைப்பை தந்தோம்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்தபட்சம் டெபாசிட் ஆவது பெற முடிந்தது என்பதுதான் இத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு ஆறுதலான விஷயம்.
இவ்வளவுக்கும் காரணம் எடப்பாடியின் ஆணவப்போக்கு, சர்வாதிகாரப் போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாத மனநிலை தான். இதன் காரணமாகத் தான் அதிமுக இடைத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

எடப்பாடி எப்போது முதலமைச்சராக பொறுபேற்றாரோ, அப்போது முதல் நடந்த தேர்தல்களில் எல்லாம் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை இழந்தோம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றியை இழந்தோம். இப்போது கட்சியை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. கழகத்தின் ஒற்றுமைக்கு யார் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: