tamil mirror : களனிவெளி, தலவாக்கலை, ஹொரணை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறந்த கொழுந்து பறிப்பவர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று (25) ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றது.
ஹேலீ்ஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் தோட்டக் கம்பனிகளின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரொஷான் ராஜதுரை ஆகியோரின் தலைமையில்
இப்போட்டிகள் இடம்பெற்றன.
களனிவெளி, தலவாக்கலை, ஹொரணை ஆகிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான 42 தோட்டங்களிலிருந்து 42 வெற்றியாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இதன் இறுதிப் போட்டி ரதல்ல தோட்டத்தில் 20 நிமிடங்கள் நடைபெற்றன.
இறுதிப் போட்டிக்கு வழங்கப்பட்ட அளவுகோல்களின்படி, தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா 10 கிலோ 450 கிராம் கொழுந்தைப் பறித்து முதலிடத்தைப் பிடித்து, 3 இலட்ச ரூபாய் பணப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.
37 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தாய் என்பதுடன், தொழிலாளியாக 7 வருடங்களாக வேலை செய்து வருகிறார்.
தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்களை தேயிலை தொழிலில் ஈடுபட வைக்கும் நோக்கில் வருடாந்தம் இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுவதாக பெருந்தோட்ட கம்பனியின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை இதன்போது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக