புதன், 1 மார்ச், 2023

சிறப்புபள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்!

 Kalaignar Seithigal -  Prem Kumar  :   சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்வைத் திறன் பாதிப்பு, காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் தனது 70ம் பிறந்தநாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினர்.
முன்னதாக அச்சிறப்பு பள்ளி மாணவர்கள் மேல தாளங்கள் முழங்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். பின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி குறித்த அப்பள்ளி மாணவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதை பார்த்து ரசித்து கவனித்த முதலமைச்சர், அம்மாணவர்களுக்கும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


உங்கள் வாழ்த்துகளுக்கு ஈடு எதுவும் கிடையாது: சிறப்புபள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்!
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :- “நான் உரையாற்ற வேண்டும் என்று அறிமுகப்படுத்தி பேசிய சகோதரி அவர்கள், வீரஉரையாற்ற போகிறேன் என்று சொன்னார், ஆனால் நான் வீரஉரையாற்ற வரவில்லை, பாசஉரையாற்ற வந்திருக்கிறேன்.

நீங்கள் என் மீது கொண்டிருக்கக்கூடிய அன்பு, என் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, அதேபோல் நான் உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய பாசம், அன்பு, அந்த உணர்வோடு உங்களுக்கு நன்றி சொல்ல, உங்களுடைய வாழ்த்துகளைப் பெற, நான் இங்கு வந்திருக்கிறேன்.

1984-லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த பள்ளிக்கு உங்களை காண நான் வருவதுண்டு. ஆனால் தொடக்கத்தில் பிறந்தநாள் அன்று வருவேன். இப்பொழுது எல்லாம் பிறந்தநாளுக்கு முதல் நாளே உங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன். காரணம், பிறந்தநாள் அன்று வந்தால் நீண்ட நேரம் உங்களிடத்திலே இருந்து உங்களுடைய கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, தொடர்ந்து நீண்ட நேரம் பெற முடியாது, வேகவேகமாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை.

அதனால் தான் முன்கூட்டியே முதல் நாளே வந்து, ஆறஅமர உங்களிடத்திலே உட்கார்ந்து, உங்களுடன் உரையாடி, கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, உங்கள் வாழ்த்துகளை பொறுமையாக பெற்று செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் முன்கூட்டியே வந்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் நான் சொல்வது உண்டு, எனக்கு நாளை 70-வது பிறந்தநாள். நான் பல நேரங்களில் சொல்வதாண்டு, ஆண்டிற்கு இரண்டு முறை, மூன்று முறை பிறந்தநாள் வரக்கூடாதா, வந்தால் அடிக்கடி உங்களை வந்து பார்க்கலாமே. அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று நான் பலமுறை ஏங்கியதுண்டு. ஆனால் அப்படி வந்தால் வயது அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

எது எப்படி இருந்தாலும், உங்களை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பெரிய மகிழ்ச்சியான உணர்வு, இங்கே வாழ்த்துகளை மட்டும் அல்ல இங்கே வரவேற்புரை ஆற்றியபோதும் சரி, எனக்கு வாழ்த்து சொன்ன போதும் சரி, கலை நிகழ்ச்சிகள் மூலமாக பாடல்கள் ஒலித்த நேரத்திலும் சரி, நீங்கள் வாழ்த்து மட்டும் அல்ல, ஏறக்குறைய 22 மாதங்களாக நடந்து கொண்டு இருக்கக்கூடிய நம்ம ஆட்சி, நான் என்னுடைய ஆட்சி என்று சொல்ல மாட்டேன், நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி, அந்த ஆட்சியில் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் பட்டியல் போட்டீர்கள், ஓ! நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்று எனக்கே வியப்பாக இருக்கிறது.

அந்த அளவிற்கு நீங்கள் அதை எல்லாம் நினைவுப்படுத்தி, வரிசைப்படுத்தி, மனதில் வைத்துக் கொண்டு, நாங்கள் மறந்தாலும், நீங்கள் மறக்காமல், இங்கே சுட்டிக்காட்டியதை நான் எப்படி கருதுகிறேன் என்றால், இன்னும் நிறைய செய்ய வேண்டும், இன்னும் உங்களுடைய பாராட்டை பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலே நாம் இங்கே நடத்திக் கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு செய்தியை கூட நான் அடிக்கடி சொல்வதுண்டு. நான், இந்த பள்ளிக்கு பல பொறுப்புகளிலிருந்து வந்திருக்கிறேன். 1984-ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றால், எம்.எல்.ஏ.-வாக வந்திருக்கிறேன், சென்னை மாநகர மேயராக வந்திருக்கிறேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் வந்திருக்கிறேன், எதிர்கட்சி தலைவராகவும் வந்திருக்கிறேன், இன்றைக்கு முதலமைச்சராக வந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் வருவேன், எல்லா ஆண்டும் வருவேன், அந்த பாசம் எனக்கு உங்களிடம் இருக்கிறது, இந்த சிறுமலர் பள்ளியை பொறுத்தவரைக்கும் நான் அந்த பாசத்தை பெற்றிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, நான் எத்தனை பொறுப்புகளில் இருந்தாலும், எத்தனை நிகழ்ச்சிகளுக்கும் சென்றாலும், அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது பொதுவான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலே கிடைக்கின்ற சிறப்பைவிட, அதிலே கிடைக்கின்ற பெருமையைவிட, அதிலே கிடைக்கின்ற மகிழ்ச்சியைவிட, இங்கே வருகிறபோது தான் நான் அதிகமான பூரிப்பை, மகிழ்ச்சியை பெறுவதுண்டு.

அந்த வகையிலே தான் நீங்கள் தெரிவித்திருக்கக்கூடிய வாழ்த்துகளை, உற்சாகத்தை உங்களுடைய நம்பிக்கையை என்றும் மனதில் வைத்துக்கொண்டு, என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, மீண்டும் உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது, அதை யாரும் மறுக்க முடியாது, அப்படி ஈடு இணையற்ற உங்களுடைய வாழ்த்துகளை பெற்ற நான், மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: