வெள்ளி, 3 மார்ச், 2023

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி -

  BBC News தமிழ் : தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.
அந்த ட்வீட்டில், "தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன்.


பிகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசும்படி தலைமை செயலரையும் டிஜிபியையும் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், நிதிஷ்குமாரின் இந்த ட்வீட் அரசின் பல மட்டங்களிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதற்கு சற்று முன்பாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது.

அதில், "தமிழ்நாட்டில் இந்தி பேசுவோரும் வட இந்தியரும் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் பிற ஊடகங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதிலிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் பதிவிடப்படுகின்றன. இம்மாதிரி வதந்திகளை நம்பவோ, பரபப்பவோ செய்யாதீர்கள்."

"இவ்வாறு பரப்பப்படும் ஒரு வீடியோவில் காட்டப்படும் மோதலானது, தமிழ்நாட்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலானது. மற்றொன்று, கோயம்புத்தூரில் உள்ளூர் மக்களுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பானது."

"தமிழ்நாடு மிகவும் அமைதியான, பாதுகாப்பான மாநிலம். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பொது ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த ட்வீட்டில் காணப்படும் தகவல்கள், பொய்யானவை. தவறான கருத்தைத் தருபவை. இம்மாதிரியான போலியான தகவல்களை பரப்ப வேண்டாம். பரப்பினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு காவல்துறை தலைவர்" எனப் பதிவிடப்பட்டிருந்தது.

முகமது தன்வீர் என்பவரது ட்வீட்டை மேற்கோள்காட்டி இந்தப் பதிவை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டிருந்தது. தற்போது முகமது தன்வீர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

ஆனால், வீடியோவுடன் கூடிய மற்றொரு ட்வீட்டை வெளியிட்டிருக்கும் முகமது தன்வீர், இந்த வீடியோவுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.
அவர் அந்த ட்வீட்டோடு இணைத்திருக்கும் வீடியோவில், சில இளைஞர்கள் தாங்கள் இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அந்த வீடியோவோடு அவர் எழுதியிருக்கும் பதிவில், "தமிழ்நாடு காவல்துறையே, இவர்கள் பொய் சொல்கிறார்களா? பிகாரைச் சேர்ந்தவர்களும் இந்தி பேசுபவர்களும் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். என் மீது எஃப்ஐஆர் போடுவதாக பயமுறுத்துவதற்கு முன்பாக, பிகாரிகளை ஒடுக்கும் உங்கள் குண்டர்களை தடுத்து நிறுத்துங்கள். பிகார் காவல்துறையே, உங்களுக்கு இந்தி தெரியுமா? இதைக் கேளுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒரு தொலைபேசி உரையாடலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். "இந்த வலியைக் கேளுங்கள். அர்மான் தமிழ்நாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தமிழர்கள் எப்படி இந்தி பேசும் மக்களை ஒடுக்குகிறார்கள் என்பதை அவர் சொல்கிறார். பிகார் அரசும் பிகார் காவல்துறையும் தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களைப் போலச் செயல்படக்கூடாது. பிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு வீடியோவை வெளியிட்டு, அதில் "தமிழ்நாட்டில் இருந்து உயிர் பிழைத்து ஓடிவந்திருக்கும் தொழிலாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கடுத்த பதிவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், "தமிழக வேலை தமிழருக்கே, வட இந்தியரை வெளியேற்று" என்று கூறும் போஸ்டரைப் பகிர்ந்து இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இந்த முகமது தன்வீர் தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பிறகே, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ட்வீட் வெளியானது.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஒரு வீடியோவை வெளியிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லையென்றும் பரப்பப்படும் வீடியோக்கள் போலியானவை என்றும் விளக்கமளித்தார்.

இதற்குப் பிறகு பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற தகவல்களைப் பரப்பத் தொடங்கினர். ஹரி மாஞ்சி என்ற பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், "தமிழ்நாட்டில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார். வெட்கக்கேடு" என்று கூறியிருந்தார். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த படத்தையும் இணைத்திருந்தார்.

எம்.டி சிக்கந்தர் என்பவர், சாலையில் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோவை இணைத்து, ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.
அந்த ட்வீட்டில் "தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நாட்டில் சட்டம் என்பது இல்லையா? இந்த பயங்கரவாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்று கூறியிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் ஹைதராபாதில் நடைபெற்றது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.

யுவராஜ் சிங் ராஜ்புத் என்பவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் மிக மோசமான ஒரு படுகொலை சம்பவத்தின் வீடியோவைப் பதிவிட்டு, "தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்படும் நிலையில், நிதிஷ் அரசு வாய்மூடி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம்.

ஆனால், இதையெல்லாம்விட மோசமாக, இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த ட்வீட்களை நம்பி, தமிழ்நாட்டில் 12 பிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.

இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு பலரால் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், பிகார் அரசைத் தொடர்புகொண்டு தமிழக அரசின் சார்பில் உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டது.

இருந்தபோதும் தைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட ட்வீட் இரவு வரை நீக்கப்படாத நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த நாளிதழைத் தொடர்புகொண்டு பேசினர். பிறகு அந்த ட்வீட் ஒரு வழியாக நீக்கப்பட்டது.

பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர், இந்தப் பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட ட்வீட் தொகுப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
பாரம்பரியமான ஊடகங்களே இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட நிலையில், காவல்துறையின் தலையீட்டில் அந்தச் செய்திகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும், தனிநபர்கள் வெளியிட்ட பொய்ச் செய்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் இருக்கின்றன.

திடீரென தமிழ்நாடு குறித்து இதுபோன்ற போலித் தகவல்கள் ஏன் பரப்பப்படுகின்றன என்பதில் இதுவரை தெளிவு ஏதும் ஏற்படவில்லை

கருத்துகள் இல்லை: