திங்கள், 24 ஆகஸ்ட், 2020

இரட்டைத் தலைநகர்! பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பாகப்பிரிவினைத் திட்டம்! தமிழகத்தை குறி வைத்து

nakkheeran.in - இரா. இளையசெல்வன் :  தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றி அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் அனுப்பி வைத்துள்ளார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.இவரது தீர்மானத்திற்கு அரசியந்ல் கட்சிகள், சமுக அமைப்புகள், தொழிற் நிறுவனங்கள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு குரல்கள் அதிகரித்தாலும், அமைச்சர் உதயக்குமாரின் தீர்மானத்தின் பின்னbjpணியில் மத்திய பா.ஜ.க. அரசின் மெகா ப்ளான் இருப்பதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.   தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். மேற்கண்ட மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரியில் வெளியிட வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கரோனா நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.  


இதுகுறித்து அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் விவாதிக்க எடப்பாடி திட்டமிட்டிருந்த நிலையில்தான், முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்து பூதாகரமாகி அ.தி.மு.க. பெருந்தலைகளை பதட்டமாக்கி விட்டது. இருப்பினும் இது பற்றி விவாதிக்க, அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி ஆலோசனையும் நடந்தது. கட்சியின் ஆட்சி மன்ற குழுவைக் கூட்டி விவாதித்து அதனடிப் படையில் தேர்தல் ஆணையத்துக்கு தங்களது முடிவைத் தெரிவிக்க எடப்பாடி தீர்மானித் திருக்கிறார்.  

ops eps

 

இது ஒருபுறமிருக்க, தமிழகம் உள்ளிட்ட தென்மாநில தேர்தல்களை மையப்படுத்தி கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடையே பல ப்ளான்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தை மட்டுமே குறி வைத்து ஒரு அதிரடி அஜெண்டா ஆய்வு செய்யப் பட்டது என்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் நாக்பூர் தலைமையகத்தோடு தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். நம்மிடம் மனம் திறந்த அவர்கள், “தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்கிற அமைச்சரின் கோரிக்கையின் பின்னணியில் இருப்பதே ஆர்.எஸ்.எஸ்.தான். தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கை. அதனால்தான், தமிழக ஆர்.எஸ். எஸ். அமைப்பை தென்மண்டலம், வட மண்டலம் என இரண்டாக பிரித்து இரண்டு தலைவர்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தை பிரிப்பதில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவுக்கு தோதான அரசாங்கம், அண்மைக்காலம் வரை தமிழக ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் ஆர்.எஸ்.எஸ்.சின் கனவு நிறைவேறவில்லை.  

தற்போதுள்ள எடப்பாடி தலைமையிலான அரசு, மத்திய பாஜக அரசின் சொல்பேச்சை கேட்கும் அரசாக இருப்பதால், தங்களின் கொள்கையை நிறைவேற்றத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அடுத்த 7 மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து சில கருத்துகளை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தனர் டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.  

இதனையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ் நாத்சிங், நிதின்கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உள்ளிட்ட பாஜக-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடையே வீடியோ கான்ஃப்ரன்சில் நீண்ட ஆலோசனை நடந்தது. அப்போது, திராவிட கட்சிகளை பலகீனப்படுத்த தமிழகத்தை இரண் டாக பிரிக்க வேண்டும். இரண்டாக பிரிப்பதன் மூலம் சமூக ரீதியிலான அரசியலை பாஜக முன்னெடுக்கும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அல்லது கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும். அதனால், தமிழகத்தை பிரிப்பதற்கான திட்டமிடல் அவசியம் என ஆலோ சித்தனர். அதற்கு முன்னோட்ட மாகத்தான் இரண்டாம் தலைநகர் என்கிற கருத்துகள் இப்போது வேகமெடுத்துள்ளன.    

பொதுவாக, மாநில பிரிப்பு, மாவட்டங்கள் பிரிப்பு, மாவட்டம் மற்றும் தொகுதிகள் எல்லை வரையறை என அனைத்தையும் செய்வது வருவாய்த்துறைதான். அந்த வருவாய்த்துறை அமைச்சரே, இரண்டாம் தலைநகர் வேண்டும் என தீர்மானம் போடுகிறார் எனில் இதன் பின்னணிகளை கூட்டிக் கழித்துப் பாருங்கள். இரண்டாம் தலைநகர் பின்னணியில் இருப்பது, தமிழகத்தை இரண்டாக பிரிக்க நினைக்கும் பாஜகவின் நோக்கம்தான்'' என்கிறார்கள் அழுத்தமாக. வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மாநிலத்தை பிரிக்க வேண்டுமானால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்'' என்கிறார்கள்.   

டெல்லியிலுள்ள பாஜக தலைவர்களுக்கு நெருக்க மான அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. ஒருவரிடம் நாம் பேசியபோது, “மத்திய அரசு மீது எடப்பாடிக்கும் அவரை ஆதரிக்கும் அமைச்சர்களுக்கும் என்னதான் கோபமிருந்தாலும், டெல்லி சொல்கிற கட்டளைகளை ஏற்பவராகத்தான் எடப்பாடி இருக்கிறார். அதனால் தங்களுக்கு அனுசரணையான அரசு இருக்கும் போதே தங்களுக்கு சாதகமானவைகளை சாதித்துக் கொள்கிறது பாஜக. அந்த வரிசையில், மாநிலத்தை பிரிப்பதும் அடங்கியிருக்கிறது.   

தமிழகத்தை இரண்டாக பிரிப்பதன் மூலம் சட்டமன்றத்துக்குள் பாஜக நுழைய முடியும் என கணக்கு போடுகிறார்கள் பாஜக தலைவர்கள். இதற்காக, அவர்கள் போட்டுள்ள யுக்திகள் நிறைய இருக்கிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் 30 எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுக, தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தால் அது பல வழிகளில் குடைச்சலை கொடுக்கும் என யோசிக்கிறது பாஜக. அதனால் ஆட்சி அதிகாரத்திற்கு திமுகவை வர விடாமல் தடுப்பது அதில் ஒரு யுக்தி. அதற்கு தமிழகத்தை உடைத்து இரண்டு மாநிலங்களை உருவாக்கினால் திமுகவை வீழ்த்தி விடலாம் என கணக்கு போடுகின்றனர்.    

அந்த வகையில், தமிழகத்தை இரண்டாக பிரித்து சென்னையை தலைநகராக கொண்ட மாநிலத்துக்கு எடப்பாடி பழனிசாமியும், மதுரையை தலைநகராக கொண்ட மாநிலத்துக்கு ஓபிஎஸ்சும் முதல்வர்களாக வருவதன் மூலம் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மீண்டும் உடைவதை தடுக்கலாம் என்றும், அதேசமயம், அரசியல்ரீதியாக தி.மு.க.வையும் பலகீனப்படுத்தலாம் என்றும் எடப்பாடிக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு, மாநில பிரிப்புக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் தர டெல்லி முடிவெடுத்துள்ளது. அதன் பின்னணியில் எதிரொலிப்பதுதான் இரண்டாம் தலைநகர் விவகாரம்.   

மாநில பிரிப்புக்கு டெல்லி அழுத்தம் தந்தால் அதனை எடப்பாடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் நிராகரிக்க மாட்டார்கள். எங்க கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடமும் இதற்கு பெரிதாக எதிர்ப்பு இருக்காது. அதனால், தீர்மானம் எளிதாக நிறைவேற்ற முடியும். அதனால்தான் இரண்டாம் தலைநகர் என்கிற விசயத்தை கையிலெடுக்க வைத்து, அதற்கான ஆதரவையும் எதிர்ப்பையும் கவனிக்கிறது பாஜக. தேர்தல் நெருங்க நெருங்க இதன் வீரியம் அதிகரிக்கும்‘என்று டெல்லி அஜெண்டாவை சுட்டிக்காட்டுகிறார்.

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தலைமைக்கழக செய்தித்தொடர்பாளர் மருதுஅழகுராஜிடம் கேட்டபோது, "மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்வாக வசதிகளுக்காக, மாநிலங்கள் பிரிக்கப்படுவதும் அல்லது ஒரே மாநிலத்தில் இரண்டு தலைநகரங்கள் உருவாக்கப்படுவதும் நடக்கிறது. அந்த வகையில், தமிழகத்திற்கு இரண்டு தலைநகரம் வேண்டுமா அல்லது தமிழகமே இரண்டாக பிரிக்கப்படுமா, சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் உருவாக்கியது போல, நிர்வாக வசதிக்காக நிர்வாக தலைநகரம் உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆனால், எதன் அடிப்படையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என எனக்கு தெரியவில்லை!'' என்கிறார்.

 

uuuu

 

அமைச்சர் உதயக்குமாரிடம் தீர்மானத்தின் பின்னணி குறித்து கேட்டபோது, "தமிழகத்தின் மக்கள் தொகை பெருக்கம் சென்னையை நோக்கியே இருப்பது, நிர்வாக ரீதியாக அரசுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. அதனால் தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிகளுக்காகவும், வசதிகளுக்காகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பெருக்கவும் நிர்வாக தலைநகரம் அவசியம். ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நிர்வாக தலைநகரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் உள்வாங்க வேண்டும். எதிர்கால நிர்வாக நலன் கருதிதான் துறையின் அமைச்சர்ங்கிற முறையில் தீர்மானத்தைப் போட்டு முதல்வர், துணை முதல்வருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர வேறில்லை. அதேசமயம், தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் எதுவும் தீர்மானத்தின் பின்னணியில் நிச்சயமாக இல்லை'' என்கிறார் அழுத்தமாக.

 

உதயகுமாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் அத்தகைய நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் டெல்லி ஓனர்களுக்கு இருக்கிறதே

கருத்துகள் இல்லை: