வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை; நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை; நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு .dailythanthi.com/ :எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.        அத்துடன் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முதல்-மந்திரிகள் முடிவு செய்து உள்ளனர். 

 புதுடெல்லி, மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.   கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை தள்ளிவைக்குமாறு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.



நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் நீட் மற்றும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக கடந்த திங்கட்கிழமையும், நேற்று முன்தினமும் பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். அதில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பும் வரை இந்த நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்குமாறு கல்வி அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், நுழைவுத்தேர்வு, கொரோனா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), உத்தவ் தாக்கரே (மராட் டியம்) அசோக் கெலாட் (ராஜஸ்தான்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), புபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), வி.நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், புதிய தேசிய கல்வி கொள்கையை குறை கூறியதோடு மாணவர்கள் பிரச்சினையிலும், நுழைவுத் தேர்வுகள் விவகாரத்திலும் மத்திய அரசு அலட்சியமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என்று கூறிய அவர், தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பான நேரத்தில் தேர்வுகளை நடத்துவதுதான் நல்லது என்றும் அவர் கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் அணுகுமுறையை குறை கூறிய அவர், ஜி.எஸ்.டி. வரி பாக்கியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மாணவர்கள் அச்சமின்றி நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கான சூழ்நிலை உருவாகும் வரை இந்த தேர்வுகளை தள்ளிவைக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகளும் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். இதே கருத்தை உத்தவ் தாக்கரேவும் தெரிவித்தார்.

அமரிந்தர் சிங் பேசுகையில், நாம் அனைவரும் இணைந்து நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் தொடர்பாக வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அவர்களுடைய கருத்துகளுக்கு மற்ற முதல்-மந்திரிகளும் ஆதரவு தெரிவித்தனர். எனவே எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை: