செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

BBC : "தலித்" ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு மிரட்டல் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

கோவை : மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, சாதி ரீதியாக தான் தாக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுத்தொகுதியாக இருந்த இப்பகுதி, கடந்த உள்ளாட்சி தேர்தல் முதல், தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில், ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த  சரிதா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், "தலித்" சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பலரும் தன்னை மிரட்டி வருவதாக தெரிவிக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்த நாளில் இருந்து தொடர்ந்து பலவிதத்தில் என்னை மற்ற சாதியினர் மிரட்டி வருகின்றனர்.வெற்றி பெற்று பொறுப்பேற்ற பின்னர், என் மீதான தாக்குதல்களும், பொய் புகார்களும் அதிகரித்துள்ளன. 

மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள் பல இருந்தபோதும், மற்ற சாதியினர் தரும் பிரச்னைகளால் எல்லா வேலைகளும் தடைபடுகின்றன"

கடந்த 19 ஆம் தேதி, எனது அலுவலகத்துக்கு வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் என் மீது அடுக்க்கடுக்காக பல புகார்களை கூறினார். அத்துடன், 'நீ ஒரு சக்கிலியன் வகுப்பை சேர்ந்தவள், எனக்கு மரியாதை கொடுக்காமல் தலைவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்' எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார். இவர், தினமும் எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வந்து என்னை திட்டி வருகிறார்" என்கிறார் சரிதா.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தார்.

"பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னரே, நெகமம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அப்போது, அவரை எச்சரித்ததோடு அனுப்பிவிட்டனர். ஆனால், அவர் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி என்னை பணி செய்யவிடாமல் தடுக்கிறார்."


படக்குறிப்பு,

ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா

"பெயர் பலகையில் ஊராட்சி மன்ற தலைவராக எனது பெயரை எழுதுவதற்கும் அவர் தடைசெய்து வருகிறார். மேலும், மற்ற அலுவலர்கள் முன்பாக சாதிப் பெயரை சொல்லி திட்டுவதால், அவமானமாக உள்ளது. இனிமேல் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் நீ உட்கார கூடாது எனவும் என்னை மிரட்டியுள்ளார். நெகமம் காவல்நிலையத்தில் புகார் அளித்து பலனில்லை என தெரிந்ததால்தான், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளேன்" என்கிறார் சரிதா.

இவரின் புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியம் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், திங்கட்கிழமை மாலைவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து பாலசுப்பிரமணியம் தரப்பில் விளக்கம் கேட்பதற்காக அவரது மகன் யோகேஸ்வரனை தொடர்பு கொண்டோம்.

ஜே கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர்

"துப்புரவுப் பணியாளர்கள் நியமனத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா முறைகேடுகள் செய்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அவர் செய்துள்ள முறைகேடுகளை எனது தந்தை பாலசுப்பிரமணியம் திரட்டியுள்ளார். தன் மீதான குற்றங்களை மறைப்பதற்காகவே சரிதா பொய்ப் புகார் அளித்துள்ளார்" என்கிறார் பாலசுப்பிரமணியத்தின் மகன்.

ஊராட்சி மன்றத்தலைவர் மிரட்டப்பட்டது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசமாணி கூறுகையில், "அவரை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும்" என தெரிவித்தார்.

ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம் தலைமறைவாகியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: