.dinamalar.com :சென்னை : பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கான, 'பிசியோதெரபி' நேற்று துவங்கியது. கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி., மகன் சரண், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசினேன்; அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் இருந்து, 90 சதவீதம் மீண்டுள்ள அவர், சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிவருகிறார்.என் அப்பா குணமடைய அனைவரும் காட்டும் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பம் கடமைப்பட்டிருக்கிறது.அப்பா மீண்டுவர, தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர் விரைவில் மீண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த
பகிர்வுகளை தமிழில் வெளியிடச்சொல்லி பலர் கேட்கின்றனர். அப்பாவுக்கு நாடு
முழுவதும் ரசிகர்கள் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் பகிர்கிறேன். தமிழ்,
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அப்பா பாடியிருக்கிறார்.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு பகிர்வு என்பது அதிக நேரத்தை எடுக்கும்.
எனது
பகிர்வை புரிந்துகொண்டவர்கள், புரியாதவர்களுக்கு விளக்கம் அளியுங்கள்.
இதனால், இச்செய்தி பரவுவதுடன், நேர்மறை எண்ணங்களும் பரவும்.இவ்வாறு, சரண்
தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை வட்டாரம் கூறியதாவது: எஸ்.பி.பி.,யின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன. நுரையீரலின் இயக்கம், நேற்றைய நிலையைக் காட்டிலும் இன்று முன்னேற்றம் கண்டுள்ளது. இதேபோன்ற முன்னேற்றம், இன்னும் ஒரு வாரம் தொடருமானால், 'எக்மோ' கருவியை, விலக்கிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
'பிசியோதெரபி'கடந்த, 15 நாட்களாக அவர் படுக்கையில் இருப்பதால், சிறிய அளவில் பிசியோதெரபி' அளிக்கப்பட்டுவந்தது. தற்போது, நோய் தொற்று தவிர்க்கும் வகையில், 'ரோபோடிக்' உதவியுடன் 'பிசியோதெரபி' அளிக்கத்துவங்கி உள்ளோம்.
எஸ்.பி.பி.யின் அறையில், மெல்லிய ஒலியாக தன்வந்திரி ஸ்லோகம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலிசா தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தினமும் மாலையில் மருத்துவமனைக்கு வரும் வேத பண்டிதர்கள், கீழ் தள அறையில் வேதம், ருத்ரம் படிக்கிறார்கள்; அதுவும், 'லைவ்'வாக, எஸ்.பி.பி., அறையில் ஒலிபரப்பாகி வருகிறது.
மருத்துவக்குழுவினரின் தொடர் முயற்சிக்கும், அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வேண்டுதலுக்கும் கிடைத்த பலனாகவே, உடல்நிலை முன்னேற்றத்தை காண்கிறோம். இவ்வாறு, மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக