BBC -முரளிதரன் சாசிவிஸ்வநாதன்: சென்னை குரோம்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரது வீட்டின் வாயிலை நகராட்சியைச் சேர்ந்தவர்கள் தகரத்தை வைத்து முழுமையாக மூடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? சென்னை குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் இருக்கிறது 'பாதல் பேலஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு உள்ள 'பி பிளாக்'கில் வசித்து வருகிறார் ஹேம்குமார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 14 தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரெலோ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அன்று மாலையில் அவரது வீட்டிற்கு வந்த பல்லாவரம் நகராட்சியைச் சேர்ந்தவர்கள், வீட்டு வாயிலை முழுமையாக மறைக்கும்படி தகரத்தை அடித்து மூடுவதைப் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.">இதனால், "அவசர தேவைக்கு எங்களால் வெளியே செல்ல முடியவில்லை" என ஹேம்குமார் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அந்தத் தகரம் அகற்றப்பட்டது. அவர்கள் பேச மறுத்துவிட்டனர். "அவர்கள் நேற்றே தகரத்தை அகற்றிவிட்டனர். இதைத் தயவுசெய்து பெரிதாக்காதீர்கள்" என்று மட்டும் கூறினர்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, கொரோனா பாதித்தவர்களின் வீட்டை இப்படி மூடும்படி விதிகள் உள்ளனவா என பல்லாவரம் நகராட்சியின் ஆணையர் மதிவாணனிடம் கேட்டபோது, "அந்த வீட்டில் உள்ளவருக்கு கொரோனோ தொற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. 15ஆம் தேதி அவர் ரெலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த வீட்டில் 5 நபர்கள் இருந்தனர். இதில் இரண்டு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பல்லாவரம் நகராட்சியைப் பொறுத்தவரை, இம்மாதிரி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராமல் தடுக்க வேண்டும். அந்த வீடு சாலை மீது இருந்தால், பாதி அளவுக்கு தடுப்பு அமைக்கப்படும். இந்த வீட்டில் அப்படி பாதியளவுக்கு தடுப்பு அமைக்காமல் முழுமையாக மூடிவிட்டார்கள் போலிருக்கிறது. விவகாரம் வெளியில் வந்ததும் அதனை அகற்றச் சொல்லிவிட்டோம். அவ்வளவுதான்" என்று தெரிவித்தார்.
பல்லாவரம் நகராட்சியைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடு தனி வீடாக இருந்தால், வீட்டின் வாசல் பாதியளவுக்கு மூடப்படும் என்றும் அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால் அந்த ப்ளாக்கின் வாசல் அல்லது குடியிருப்பின் வாசல் மூடப்படும். பல்லாவரம் நகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,100 வீடுகள் இதுபோலத்தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்.
"இந்தக் குறிப்பிட்ட வீட்டில் தொற்று ஏற்பட்டதும் இதுபோல பாதியளவுக்கு அடைப்பதற்காகச் சென்றபோது, அந்த அபார்ட்மென்டில் இருந்தவர்கள், அவர்கள் வீட்டை அடைக்க வேண்டாம். வீட்டில் இருந்து யாரும் வெளியேறாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். அதனால் நாங்கள் வீட்டையோ, அபார்ட்மென்டையோ அடைக்காமல் திரும்பிவிட்டோம். இந்த நிலையில், சென்னையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த அபார்ட்மென்டிற்குச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம் கொரோனா வந்தவர் வீட்டை அடைக்கவில்லையென அந்த அபார்ட்மென்ட் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் நோயால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து 24ஆம் தேதியன்று வீடுதிரும்பிவிட்டார். ஆனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பிடத்தை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்பதால் 27ஆம் தேதிவரை அந்த வீட்டை தனிமைப்படுத்த வேண்டும். ஆகவேதான் வீட்டை அடைக்க உத்தரவிடப்பட்டது" என்று தெரிவித்தார் மதிவாணன்.
இம்மாதிரி முழுமையாக அடைத்தால் வீட்டில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் வெளியேறுவது எப்படி எனக் கேட்டபோது, "அவை லேசாகத்தான் அடைக்கப்பட்டிருக்கும்; தள்ளினால் திறந்துவிடும். எனவே வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம்" என்கிறார் மதிவாணன். இருந்தபோதும் இப்படி இடைவெளியின்றி யார் வீட்டையும் நாங்கள் அடைக்கச் சொல்வதில்லை; ஒருவேளை முழுமையாக அடைத்துவிட்டு, பாதியை பிரிக்க அவர்கள் நினைத்திருக்கலாம். அதற்குள் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
இந்த விவகாரத்தை சமூகவலைதளங்கள் மூலம் வெளியில் கொண்டுவந்த அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரன், 'சில இடங்களில் வீடுகளை அடைப்பதே இல்லை. சில இடங்களில் முழுமையாக அடைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த குடியிருப்பு ஒன்றில், கொரோனா வந்தவரே வெளியில் சென்று வருகிறார். அப்படியானால், யார் வீட்டிற்கு எப்படி அடைப்பது என்பதை எப்படி முடிவுசெய்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
பாதல் பேலஸின் அசோஷியனைச் சேர்ந்தவர்கள்தான் அடைக்கச் சொன்னதாக நகராட்சி ஆணையர் கூறும் நிலையில் அது குறித்து, அங்கிருந்தவர்களிடம் பேச முயன்றபோது அவர்கள் பேச விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக