கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பாஜகவோடு கூட்டு வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக ராகுல் காந்தி பேசினார் என்று தகவல்கள் வந்தன. அதற்கு குலாம் நபி ஆசாத், நான் பாஜகவோடு கூட்டு சேர்ந்துள்ளதை நிரூபித்தால் கட்சியை விட்டே விலகிவிடுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்டு 28 ஆம் தேதி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் ஒரு சதவிகிதம் ஆதரவு கூட இருக்காது. மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் பதவிகளுக்கு கட்சித் தேர்தலை எதிர்ப்பவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்களாகத்தான் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு கட்சியை வழிநடத்தினால் கட்சியின் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும், இல்லையெனில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியில்தான் அமரும்" என்று ஆசாத் கூறினார்.
மேலும் அவர், “தேர்தல் நடக்கும்போது அதில் போட்டியிடும் ஒருவர் ஒருவேளை 51 சதவிகிதம் வாக்குகள் வாங்கலாம். மற்ற போட்டியாளர்களுக்கு 10 அல்லது 15 சதவிகித வாக்குகள் கிடைக்கும். கட்சித் தலைவர் பதவியில் வெற்றி பெற்று பொறுப்பேற்கிற நபர், அதாவது 51 சதவிகித கட்சியினர் ஆதரவுடன் செயல்படுவார். ஆனால், இப்போது, தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சதவிகித கட்சியினர் ஆதரவு கூட இல்லை. இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடிக்கும் மற்றவர்கள் கடுமையாக உழைக்கும் போது கட்சியை பலப்படுத்த வேண்டும், அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்று நினைப்பார்கள். ஆனால் நியமிக்கப்பட்டுள்ள தலைவருக்கு 1% கட்சியினரின் ஆதரவு கூட இல்லை. உட்கட்சித் தேர்தல்கள்தான் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துகின்றன” என்று சோனியா காந்தியை நேரடியாகவே சாடியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் குறித்தும் பேசிய குலாம் நபி, “ கட்சியின் முக்கியமான தலைவர்களின் பரிந்துரையின் பேரில் மாநிலத்தில் ஒருவரை கட்சித் தலைவராக நியமிக்கிறார்கள். நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்க முடியும், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை நீக்க முடியாது. இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்டிருக்கிறார் குலாம் நபி. "எனது கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியிலேயே இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை" என்று அவர் கூறினார்.
மேலும், “எனக்கு தனிப்பட்ட லட்சியங்கள் இல்லை, ஆனால் எனது கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். நான் ஒரு முறை முதல்வராக இருந்தேன், மத்திய அமைச்சராகவும், சி.டபிள்யூ.சி உறுப்பினராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தேன். எனக்காக நான் எதையும் விரும்பவில்லை, நான் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை தீவிர அரசியலில் இருப்பேன். அதேநேரம் நான் கட்சித் தலைவராக இருக்க விரும்பவில்லை. ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் என்ற முறையில், கட்சியின் முன்னேற்றத்திற்காக கட்சிக்குள் தேர்தல்களை விரும்புகிறேன்” என்று ஏ.என்.ஐ.யிடம் கூறியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்.
ஆகஸ்ட் 24 ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில்... சோனியா, ராகுல் ஆகியோரைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சிப் பிரச்சினைகளை கட்சிக்குள்தான் பேச வேண்டும், ஊடகங்களில் பேசக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் குலாம் நபி ஆசாத் கட்சித் தேர்தல் நடத்துமாறு பகிரங்கமாக ஏ.என்.ஐ.க்கு பேட்டி கொடுத்துள்ளார். இது காங்கிரஸில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்திரப்பிரதேச காங்கிரசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக