dinamalar.com : சென்னை: கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் பாடங்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கு பயனளிப்பதாக இல்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.
செமஸ்டர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும், முதல்வரும் கணக்கில் எடுத்து கொண்டு, இந்த முடிவை எடுத்திருப்பதும், ஊரடங்கால், செமஸ்டர் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.
செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். என்ற நிலையில் ஊரடங்கு, மார்ச் 24ல் அறிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரணம் பாதிக்கப்பட்டதால், பலர் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. பேரிடர் நெருக்கடியில் தேர்வு கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதல்வர் இபிஎஸ் கை கழுவியிருப்பது மிகுந்த வேதனை அளித்துள்ளது. செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போன மாணவர்களை கண்டுகொள்ளாமல், இப்படியொரு பாரபட்சமான முடிவினை எடுத்து முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால், பல கல்லூரிகளில் உள்ள பல மாணவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். அவர்களின் பெற்றோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக