தினத்தந்தி : மும்பை அருகே 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து
விழுந்தது. இந்த துயர விபத்தில் 70 பேர் உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று
கருதப்படும் நிலையில் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது.
மும்பை, >
மராட்டிய மாநிலத்தில் தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட்,
காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம்
இருந்தது. இந்த கட்டிடத்தில் சுமார் 45 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள்
திடீரென இடிந்து விழ தொடங்கியது. இதையடுத்து கீழ் தளத்தில் வசித்து வரும்
மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்தநிலையில் சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் இருந்து வெளியேறிய புழுதியால் அந்த பகுதியே புகை மண்டலம் போல
ஆனது.
தகவல் அறிந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட
இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பின்னர் மும்பையில் இருந்து
விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு
பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை அவர்கள் சுமார் 25 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் 17 பேர் காயம்
அடைந்தனர். மேலும் 70 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரோடு
புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மராட்டியத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இந்த துயர விபத்து
ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கிய கட்டிடம் கட்டப்பட்டு 10
ஆண்டுகள் மட்டுமே ஆனதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கட்டிடம் இடிந்து
விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக