வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

பாஜகவில் முதல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!

 

பாஜகவில் முதல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். தனது 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகத் தெரிவித்த அவர், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியது.               இந்த நிலையில் டெல்லியில் கடந்த 25ஆம் தேதி பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு நேற்று கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டுக்கு மாற்றுப்பாதை தேவை. தமிழ்நாட்டில் பாஜக முக்கியமான சக்தியாக உருவெடுக்கும். தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை” என்று தெரிவித்தார். தமிழ்நாடு கடந்த 20 வருடங்களில் வளர்ச்சி இல்லாமல் நின்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் கூறி அண்ணாமலை, பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 143, 341, 269, 285 ஆகிய பிரிவுகளின் கீழும், தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த பிறகு நடந்த முதல் நிகழ்விலேயே அண்ணாமலை மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

எழில்

கருத்துகள் இல்லை: