வெள்ளி, 6 டிசம்பர், 2019

இழந்த அத்தனை உயிர்களுக்கும் நீதி கிடைக்கட்டும். நீதிமட்டுமே முதன்மையாய் இருக்கட்டும்.

சுமதி விஜயகுமார் : எந்த ஒரு மரணம் என்றாலும்
அது வேதனையை
தரக்கூடியதுதான். வயது முதிர்வு காரணத்தை தவிர பிற மரணங்கள் எதோ ஒரு விதத்தில் மரணித்தவரின் சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். உடல் நலம் இல்லாமல் அவர் இறந்து போயிருந்தால் கூட , ஒரு வேலை இப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ , அந்த மருத்துவரிடம் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ, இன்னும் கொஞ்சம் காலம் முன்னவரே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ என்று மனது பரிதவிக்கும். சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களோ இன்னும் வலி மிகுந்தவை. மண்ணிற்குள் போகிற உடல் என்றால் கூட அது சிறிது சேதம் ஆகிருப்பதை தாங்க முடியாது.
அப்பாவின் மரணம் எதிர்பாராதது. தங்கை மகள் திருமணத்திற்கு ஊரில் இருந்து வந்த அப்பா , விடுப்பு நாட்கள் முடிந்து அடுத்தநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும். நாளை ஊருக்கு செல்கிறேன் என்று எனக்கு whatsappல் தகவல் அனுப்பி இருந்தார்.
Happy journey என்று நான் அனுப்பிய மெசேஜ் தான் கடைசி. இரவு தொலைபேசியில் செய்தி வர, அதை ஏற்று கொள்ள ஒன்று இரண்டு இல்லை, சில மாதங்களே ஆனது. அம்மா வீட்டில் இருக்கும் பொழுது , அப்பா அழைப்பு மணி அடித்துவிட மாட்டாரா என்று ஏங்கியதுண்டு. அம்மா வீட்டில் இருந்த பொழுது கூட அவ்வளவாக தெரியவில்லை. ஊருக்கு வந்த பிறகு, கணவன் குழந்தைகள் இருந்த போது கூட அனாதை போல தோன்றியது. லேசான மனஅழுத்தம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மா ஊருக்கே போய் விடலாம் என்று கணவரிடம் கூற, வீட்டில் தனியாக இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். அதில் இருந்து மீண்டு வருவதற்கு முயன்ற பொழுதுதான் அரசியலில் ஆர்வம் ஏற்பட, 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய யோசித்ததுண்டு. முன்னமே அப்பாவை நன்றாக கவனித்திருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பாரோ என்னவோ என்று. அவர் மயங்கி விழுவதற்கு முன்பு தெப்பக்குளத்தில் இருக்கும் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் CCTVயில் அவர் பதிவாகி இருந்ததை பார்த்து அதை pen driveல் சேமித்து தர சொன்னேன். அவர் மரணத்தில் அவரின் கவனக்குறைவு தான் கரணம் என்ற பொழுதும் அதை மனது ஏற்றுக்கொள்ளவே இல்லை.
இது போல் அல்லாமல், வேறு ஒருவரின் தவறால் நாம் மிகவும் நேசிக்கும் ஒரு உயிர் பிரிந்தால் அதை ஏற்று கொள்வது எவ்வளவு கடினம் என்பது அதை அனுபபிபவர்களால் மட்டுமே உணர முடியும். இரண்டே வயதான சுர்ஜித் ஆள்துளையில் விழுந்த பொழுது தமிழ்நாடே ஸ்தம்பித்தது. ரோஜா என்ற 20 வயது தலித் பெண் ஆதிக்க சாதியானால் கொள்ளப்பட்டதும் , பிரியங்கா என்ற மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டதும், பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்து போன சுபஸ்ரீகும், கல்வி மறுக்கப்பட்டு இறந்து போன அனிதாக்களுக்கும், பாத்திமாக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை அவர்களின் பெற்றோர்கள் தாங்கி கொள்ள வேண்டும் என்று நினைப்பது அடி முட்டாள் தனம்.
மேற் குறிப்பிட்ட மரணங்களில் பிரியங்கா மரணத்திற்கு காரணமான குற்றவாளில்களை தவிர மற்ற எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. மீதம் உள்ளவர்களில் சுபஸ்ரீயை தவிர மற்ற அனைவரும் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை மக்கள். சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர் ஒரு அரசியல்வாதி என்பதால் மட்டுமே அவர் காப்பாற்ற பட்டார். மற்றவர்களுக்கு நீதி கிடைக்காதது ஏன் என்பது நாம் உணர்ந்திருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத காரணம் சாதி தான். ஒன்று ஒன்றாக இல்லை மொத்தமாக 17 உயிர்கள் போனாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு போதும் தண்டனை கிடைக்காது.
மேற்குறிப்பிட்ட அத்தனை உயிர்களுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயித்து இருக்கிறது இந்த அரசு. இதில் பலியான உயிர்களில் ஒன்றை தேர்வு செய்து அதில் நமக்கு உயிரானவரை பொருத்தி பார்ப்போம். நாம் அதிகம் நேசிக்கும் ஒருவருக்கு இது போல் ஒன்று நடந்திருந்தது, அதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்காமல் அதற்கு பதில் நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்தால் கூட சேமிக்க முடியாத அளவிற்கு இழப்பீடாக வழங்கினால் அதை வாங்கி கொண்டு இரவு நிம்மதியாக தூங்க முடியுமா.
7 வயது ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த்தை கைது செய்து பின்பு பிணையில் விடுவித்தது அரசு. வெளியில் வந்த தஸ்வந்த் தன் தாயை கொலை செய்துவிட்டு மீண்டும் கைதானான். அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வந்ததும் ஹாசினியின் அப்பாவை பேட்டி எடுக்க தொலைக்காட்சி காத்து கொண்டிருந்தது. நீதி வழங்கப்பட்டதை கேட்டதும் ஹாசினியின் தந்தை சிரிக்கவில்லை. நெஞ்சு வெடிப்பதை போல் கதறி அழுதார். அதீதமான எந்த ஒரு உணர்ச்சியும் கண்ணீரில் தான் முடியும். சிரிப்பு உட்பட. கோடி ருபாய் கொடுத்திருந்தாலும் அந்த கண்ணீரின் நிம்மதியை ஈடு செய்திருக்க முடியாது. வாழ்வதற்கு தான் காசுதேவை . நியாயமற்ற மரணத்திற்கு நீதி மட்டும் தான் தேவை.
இழந்த அத்தனை உயிர்களுக்கும் நீதி கிடைக்கட்டும். நீதிமட்டுமே முதன்மையாய் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை: