
பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட மு.க.ஸ்டாலினின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
* கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக அதிகரித்திட வேண்டும்.
* புதிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.
* பொது தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க ஆணையிட வேண்டும். 27 சதவீத இடஒதுக்கீட்டினை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்துவதுடன், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரித்திட வேண்டும். மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த உள்ள விதம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.
* மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மேலும் தாமதம் செய்யாமல் விரைவுபடுத்தி முடித்திட வேண்டும்.
* தமிழ்நாட்டில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டங்களை நிறைவேற்றிட நிதியுதவி அளித்திட வேண்டும். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்திட வேண்டும்.
* தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக உடனே அறிவித்து தமிழுக்கு உரிய அந்தஸ்தை அளிக்க வேண்டும்.
* சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சென்னை-சேலம் 8 வழிச்சாலை போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மகளிருக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவினை மேலும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
* ஈழத்தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்திய மீனவர்கள் மீது அதிகரித்துள்ள தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள 7,825 கோடி ரூபாய் நிதியினை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக