திங்கள், 2 டிசம்பர், 2019

BBC :கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் - போராடும் வடமாநில இளைஞர்


கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார். கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் டோஹானா கிராமத்தில் இருந்து இது குறித்து பிபிசியின் கீதா பாண்டே செய்தி அளிக்கிறார்.
''நாத்திகர்'' என்று பொருள்படும் 'ATHIEST' எனும் ஆங்கிலச் சொல்லை இரண்டு கைகளிலும் பெரிதாக பச்சை குத்தியுள்ள 33 வயதான ரவிக்குமார், கடவுள் இல்லை என்பதை தனது ஆறு அல்லது ஏழாவது வயதில் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.
''ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கி வந்து லட்சுமியிடம் வேண்டிக் கொள்வார். ஆனால் ஒருபோதும் பரிசு விழுந்தது கிடையாது. ஒரு நாள் நான்கு பையன்கள் என்னை அடித்தபோது, கடவுள் கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவர் என்னைக் காப்பாற்றவில்லை,'' என்று அவர் கூறுகிறார்.

தலைநகர் டெல்லியில் இருந்து 250 கிலோ மீட்டர் (155 மைல்கள்) தொலைவில் டோஹனா என்ற கிராமத்தில் இரண்டு அறைகள் கொண்ட தனது வீட்டில் அமர்ந்திருக்கும் அவர் ''உயர் மதிப்புமிக்க சொத்து'' என குறிப்பிடும் சான்றிதழ் ஒன்றை காட்டினார். ''எந்த சாதியும், எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என்ற பிரிவைச் சார்ந்தவர் என அவருக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் அது.
e>ஹரியாணா மாநில அரசால் ஏப்ரல் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழில், உள்ளூர் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, ஒரு வாரம் கழித்து அதை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். ''தங்களது அதிகார வரம்பை மீறி'' சான்றிதழ் வழங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சான்றிதழைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அதைத் திருப்பித் தர மறுத்துவிட்ட ரவிக்குமார், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ''தன்னை ஒரு நாத்திகர் என கூறிக் கொள்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது'' என்று அரசியல்சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது என்றும், அதற்கான சான்றிதழாக சட்டபூர்வ ஆவணம் எதுவும் தேவையில்லை,'' என்றும் நீதிபதி கூறினார்.
கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு, வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வரும் ரவிக்குமார், இந்த முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று கூறுகிறார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் தமக்கு உதவுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
''இதற்கு ஒரு சான்றிதழ் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், எனக்கு அதற்கான தேவை உள்ளது'' என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். ''மக்களுக்கு அரசாங்கம் சாதி அல்லது மத சான்றிதழ் வழங்கும்போது, நான் நாத்திகர் என்று அடையாளம் காட்டும் சான்றிதழைப் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நானும் இந்த நாட்டின் குடிமகன்தான்'' என்கிறார் அவர்.
இந்தியாவில், மதம் மாறினால் மட்டுமே அவருக்கு மத சான்றிதழ் தேவைப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவினராக இருந்து, அரசுப் பணிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற விரும்புவோருக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
>ரவிக்குமாரின் குடும்பம் ஒடுக்கப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்தது. ஆனால் அரசின் சலுகைகள் எதையும் கேட்பதில்லை என்று அவர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார்.
தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த சான்றிதழைக் கோருகிறார்.
தனது பெயரின் இறுதியில் நாத்திகர் என சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பரில் அவர் சட்டபூர்வ நடவடிக்கையை ஆரம்பித்தார்.
மூன்று மாதங்கள் கழித்து, 2018 ஜனவரி 2ஆம் தேதி, அவருக்கு ஆதரவாக சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ''ரவிக்குமார் நாத்திகர்'' என பதிவு செய்து கொள்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது என அவர் தீர்ப்பளித்தார்.
பள்ளிக்கூட விலகல் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டைகளில் பெயரை மாற்றிக் கொண்ட பிறகு, ''எந்தச் சாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என சான்றிதழ் கோரி உள்ளூர் அதிகாரிகளை அணுகினார். அதன்படி சான்றிதழும் பெற்றார்.
ஆனால், இதுபற்றிய செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான போது, ''தங்கள் அதிகார வரம்பை மீறி'' செயல்பட்டிருப்பதாக அதிகாரிகள் உணர்ந்தனர். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கூறுவது தங்களுடைய பணி அல்ல என்று அவர்கள் கூறினர்.
சாதி இல்லாத நாத்திகர் என்று வேறு சான்றிதழ் தருவதாக உத்தரவாதம் அளித்து, அந்த சான்றிதழை திருப்பித் தருமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி, 33,000 இந்தியர்கள் தங்களை நாத்திகவாதிகள் என பதிவு செய்துள்ளனர். 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இது மிகவும் குறைவான எண்ணிக்கைதான்.
>இந்தியாவில் பெரும்பாலான விஷயங்களில் மதமும், மத அடையாளமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கடந்த தசாப்தத்தில் இந்து தேசியவாதம் அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான நாத்திகர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படுத்தாமல் அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு மாறாக ஏதும் பேசினால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம் - நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புறக்கணிக்கப்படலாம்.
கடவுள் இருப்பதை நிரூபிக்குமாறு அவர் வெளிப்படையாக சவால் விடுகிறார். மதத்தை விட்டு மக்கள் வெளியே வர வேண்டும் என்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
''கடவுள் இருக்கிறார் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை,'' என்று அவர் கூறுகிறார். ''ஏனெனில் கடவுள் கிடையாது. கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விஷயம். கடவுள் என்பது வெறும் வார்த்தைதான். அப்படி எதுவும் கிடையாது,'' என்றும் குறிப்பிடுகிறார் ரவிக்குமார்.
ஓரளவுக்கு மத நம்பிக்கை உள்ள குடும்பத்தில் ரவிக்குமார் வளர்ந்தார்: அவருடைய பெற்றோரும், தாத்தா பாட்டி குடும்பத்தினரும் இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள். மத விழாக்களின்போது கோவில்களுக்குச் சென்று, சடங்குகள் செய்யக் கூடியவர்களாக இருந்தனர்.
''என் தந்தை என்னை கோவில்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கே என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் அவருடன் நான் செல்வேன்,'' என்று ரவிக்குமார் தெரிவித்தார்.
தாங்கள் கடவுள் லட்சுமியை தீபாவளி நாட்களில் வணங்குவதாகவும், அதனால் தங்களுக்கு வளம் கிடைக்கும் என்றும் அவருடைய தாயார் கூறியுள்ளார். பகவத் கீதை படிக்கும் அவருடைய தாத்தா, பிரச்சனைகளில் சிக்கும்போது நம்மைக் காப்பாற்ற இறைவன் கிருஷ்ணர் வருவார் என்று கூறியுள்ளார்.
''மதம் மற்றும் சாதி வேறுபாடுகள் என்பவை அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி சுரண்டுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள்,'' என வளரும்போது அறிந்து கொண்டதாக ரவிக்குமார் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை என்று அவர் கூறினார். கோவில்கள், மசூதிகள் மற்றும் இதர மத வழிபாட்டுத் தலங்களுக்காக செலவிடும் தொகையை பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் உருவாக்க செலவு செய்வது நல்லதாக இருக்கும் என்று அவர் வாதம் செய்தார்.
நாத்திக சிந்தனை உடையவராக இருந்ததால் பள்ளி, கல்லூரிக் காலங்களில் புறக்கணிக்கப் பட்டுள்ளார். அந்தக் காரணத்தாலேயே வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளார்.
பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருடைய தொடர்பை துண்டித்துக் கொண்டனர். அவர் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதாக, அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவருக்கு, மத வழக்கத்தின்படி அல்லாமல் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தனக்கு பெண் கொடுக்க எந்தக் குடும்பத்தினரும் முன்வராத காரணத்தால், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
மகனின் நம்பிக்கையை அவருடைய பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தொழிற்சாலையில் தச்சு வேலை பார்க்கும் அவருடைய தந்தை இந்தர் லால், தனது மகனை மற்றவர்கள் நாத்திகர் என கூறுவதைக் கேட்டு வருந்தியிருக்கிறார். ''ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நான் வீட்டில் இருந்து வெளியேறினேன். ஆனால், பிறகு மனதை மாற்றிக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன்,'' என்று அவர் கூறினார்.
ஆனால் இப்போது அவரும் நாத்திகராக மாறிவிட்டார். ''அவன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதுகிறேன். இப்போது வீட்டில் மத சம்பிரதாயங்கள் எதையும் நாங்கள் செய்வது இல்லை. கோவிலுக்குச் செல்வதையும் நாங்கள் நிறுத்திக் கொண்டோம்,'' என்று அவர் தெரிவித்தார்.
'நாத்திகர்' என சட்டபூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக அவர் போராடி வருவது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்திகள் வெளியாகி வருவதால், சிறிதளவு பிரபலமாகிவிட்டார்.
''தொலைதூரப் பகுதிகளில் இருந்து பலர் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். சிலர் நேரில் வந்து சந்திக்கிறார்கள் - தாங்களும் நாத்திகர்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் போல தாங்களும் பெயரின் பின்னால் நாத்திகர் என சேர்த்துக் கொள்ள விரும்புவதாகக் கூறினர்,'' என்று ரவிக்குமார் குறிப்பிட்டார்.
உலகில் பிரச்சனைகளுக்கு வேராக மதம்தான் இருக்கிறது என்பதால், நாத்திகம் என்ற தனது கருத்து சரியானதாக அமைந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
''இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலுக்கு மதத்தை காரணமாகக் கூறுகின்றன. உலகம் மூன்றாவது உலகப் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் 24 மணி நேரமும் கெட்டவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கொலை செய்யவும், ஊனப்படுத்தவும் கத்திகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்துகிறார்கள். உலகில் அவ்வளவு துயரங்கள் இருக்கின்றன.''
''உலகைப் படைத்தது கடவுள் என்றால், இவ்வளவு கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை எதற்காக அவர் படைத்தார்,'' என்று ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார்.

கருத்துகள் இல்லை: