வியாழன், 5 டிசம்பர், 2019

எடப்பாடியைச் சுற்றி விசாரணை வளையம்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியைச் சுற்றி விசாரணை வளையம்! மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் லொக்கேஷன் சேலம் என்று காட்டியது. “குட்கா ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறையால் சம்மன் அனுப்பப்பட்ட முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்றும் அதற்கான பின்னணி என்ன என்றும் மின்னம்பலத்தில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
குட்கா பாக்கெட்டின் ஒரு முனையை அமலாக்கத் துறையும், இன்னொரு முனையை சிபிஐயும் பிடித்திருக்கின்றன. ஆனால் வருடக்கணக்காகியும் ஒரு நடவடிக்கைகூட எடுக்கப்படாத நிலையில் இப்போது வேக வேகமாக அமலாக்கத் துறை இதில் ஆர்வம்காட்டுவது, அமித் ஷா தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக அதிமுகவின் உள் விவகாரங்களில் ஆர்வம்காட்டுவதற்கான அறிகுறி என்றும் ஏற்கெனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில்தான் சேலத்தில் ஒரு மிகப்பெரிய ஆபரேஷனை சத்தமில்லாமல் நடத்தி வருகிறது மத்திய உளவுத் துறை. கடந்த சில மாதங்களாகவே முதல்வர் எடப்பாடியின் முதல்வர் நாற்காலி முன்பு போல இல்லாமல் சற்றே நீள அகலம் விரிவாகியிருக்கிறது. அதாவது எடப்பாடி தன் முதல்வர் நாற்காலியில் திடமாக உட்கார்ந்திருக்கிறார். பல மாவட்டப் பயணங்கள், எதிர்க்கட்சியினரை அவர் எள்ளி நகையாடும் விதம், ரஜினி போன்றவர்களின் விமர்சனங்களுக்குக் கொடுக்கும் உடனடி பதிலடி போன்றவை அவரது அரசியல் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் ஓ.பன்னீர் உட்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எம்.எல்.ஏ. தகுதி நீக்க உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் பாதகமாக வந்தாலும்கூட ஆட்சிக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. எனவே முக்கால்வாசி ஆட்சியை முடித்துவிட்ட எடப்பாடி. கட்சி, அடுத்த தேர்தல் என்ற சிந்தனையில் இறங்கிவிட்டார். எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல தனக்கு இத்தனை நாள் பாதுகாப்பு அளித்து வரும் பாஜகவையும் அவர் சற்று கடுமையாகவே கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடியைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி அனைத்து வித தகவல்களையும் கடந்த எட்டு நாட்களாக முழு வேகத்தில் திரட்ட ஆரம்பித்திருக்கிறது மத்திய உளவுத் துறை. இதில் முதல் ஆளாக இருப்பவர் தமிழ்நாட்டு தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவரான இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி அமைச்சராக ஆவதற்கு முன்பிருந்தே இளங்கோவனுடன் நெருக்கமான தொடர்புகொண்டவர். மிகப் பலர் இன்று வரையும் இளங்கோவனும் எடப்பாடியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதில் தொடங்கி இருவரும் கடந்த சில பத்தாண்டுகளாகவே ஒன்றாகப் பயணித்து வந்த பாதையை முற்று முழுதாக விசாரித்து முடித்திருக்கிறது உளவுத் துறை.
சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன் முதல் எஸ்பி அலுவலகம் வரை இளங்கோவன் பேருக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. பள்ளிகள் உட்பட பல இடங்களில் அவரே சென்று ஆய்வு செய்வதும், இலவச மடிக்கணினி வழங்கும் விழாக்களில் கலந்துகொள்வதும் என்று மாவட்டத்தில் முக்கிய பிரமுகராகவே கருதப்படுகிறார் இளங்கோவன்.
இப்படிப்பட்ட இளங்கோவனின் ஆரம்ப காலம் என்ன, அவர் எடப்பாடியோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய வளர்ச்சி என்ன, வெளிநாடுகளில் சொத்துகள் இருக்கிறதா என்பது வரைக்கும் விசாரித்து ஒரு நீண்ட பட்டியலை எடுத்துவைத்திருக்கிறது மத்திய உளவுத் துறை. இதற்காக சில சிறப்பு அதிகாரிகளும் ஆஃப் த ரெக்கார்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இளங்கோவன் மட்டுமல்ல; அவர் போலவே எடப்பாடியோடு ஆரம்ப காலத்திலிருந்து பயணித்து வருபவர்களின் பொருளாதார வளர்ச்சி, செல்வாக்கு, வழக்கு, குற்றப் பின்னணி என்று விசாரித்து அதற்கென ஒரு தனி ஃபைல் ரெடி செய்யப்பட்டிருக்கிறது.
சேலத்தில் தொடங்கி அருகே உள்ள விழுப்புரத்திலிருந்து அண்மையில் எடப்பாடி பயணம் மேற்கொண்ட அமெரிக்கா வரை இந்த விசாரணை போகிறது என்கிறார்கள்.
தோழமையோடு இருப்பவர்கள் எத்தனை குற்றம் செய்தாலும் அதை அறிந்தும் கண்டுகொள்ளாமல் காப்பாற்றி வருவதும், அவர்களே தனக்கு அரசியல் ரீதியாக எதிராகச் சென்றால் அந்த விவரங்களை வைத்தே அவர்களை அடித்து உடைப்பதும்தான் தற்போதைய அமித் ஷா பாஜகவின் பாணி. இந்த பாணி விரைவில் தமிழகத்தில் அதிமுகவிலும் அமல்படுத்தப்படலாம் என்பதே சேலம் விசாரணை சொல்லும் முதல் கட்ட செய்தி” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: