வியாழன், 5 டிசம்பர், 2019

9 மாவட்டங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு?

9 மாவட்டங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு?மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிற்பகல் 2 மணிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி கடந்த 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கையை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று திமுக மனுதாக்கல் செய்தது. இதுபோலவே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே திமுக சார்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று (டிசம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. சட்ட சிக்கல்களை நீக்காமல் ஊரக அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களைப் பிரித்து 9 புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படியிருக்க எதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பது விளக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே தேர்தலை அறிவித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் சொன்ன பணிகளை முடிக்காமல் தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டுக்கான பணிகளும் முடிக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “வார்டு மறுவரையறை பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யக்கூடியது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. இனி 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே வார்டு மறுவரையறை செய்ய முடியும். தற்போதைய நிலையில் வார்டு மறுவரையறை பணிகள், இடஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்துவிட்டது. வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டுவருவது மட்டும்தான் மீதமிருக்கும் வேலை” என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து வாதிட்ட திமுக தரப்பு, “தேர்தல் ஆணையம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும். உள்ளாட்சி அமைப்புகளில் பல பிரிவுகள் உள்ளது. அது ஒவ்வொன்றும் முக்கியமானதாகும். பட்டியலினத்தோர், பழங்குடியினர்கள், பெண்கள் என பல ஒதுக்கீடுகள் உள்ளன. எனவே புதிய மாவட்டமாக பிரிக்கும்போது இதில் பலவை அடிபட்டு போகும். இதனால் தான் இதை குளறுபடியான அறிவிப்பு என கூறுகிறோம்” என்று வாதிடப்படப்பட்டது.
மேலும், “உள்ளாட்சித் தேர்தல் நடந்து நிர்வாகிகள் வர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும். நாங்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால் அது நியாயமான முறையில் நடக்க வேண்டும் என எண்ணுகிறோம்” என்று திமுக விளக்கமும் அளித்தது.
இதனையடுத்து, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் குழப்பம் வராதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இத்தனை ஆண்டுகளாக ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பழைய மாவட்ட முறைப்படி பஞ்சாயத்து அமைப்புகள் இருக்குமா? அல்லது புதிய மாவட்டங்களின் கீழ் செயல்பட கூடிய பஞ்சாயத்து அமைப்புகள் இருக்குமா? என்று தேர்தல் ஆணையத்திற்கு அடுக்கடுக்காக பல கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு தரப்பு, “வார்டுகள் பிரிக்கப்படாத நிலையில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள்” என்று தெரிவித்தது.
இதனையடுத்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தமிழக அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியைப் பார்த்து, ‘புதிய மாவட்டங்கள் பிரிப்பின் மூலம் நீங்கள் உள்ளாட்சித் தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்துகிறீர்கள். பின்னர் சரியான முறையை பின்பற்றக் கூடாது என்கிறீர்கள். சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினர்.
பின்னர் நீதிபதிகள், “உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும். ஆனால், தேர்தலை ரத்துசெய்ய முடியாது” என்று கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மதியம் 2 மணிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: