செவ்வாய், 3 டிசம்பர், 2019

தேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூது!

தேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூது!மின்னம்பலம் : மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, தேர்தலை நிறுத்துவதற்கு திமுக தரப்புக்கு, அதிமுக தரப்பு தூது விட்டுள்ளது
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதையே முன்வைத்து மாநிலத் தேர்தல் ஆணையத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிலேயே குழப்பம் நிலவுகிறது.
தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுகுறித்த நகல்கள் ஊடகத்தினருக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதும் படித்துப் பார்த்த மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
அறிவிப்பில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி, இதன் அடிப்படையில் தேர்தலை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். அந்த அறிவிப்பின் நகல் நமக்கும் கிடைத்தது.

அறிவிப்பில் என்ன குளறுபடி?
மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், “ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27.12.2019 அன்று வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,257 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30.12.2019 அன்று வாக்குப் பதிவு நடைபெறும் எனக் கூறியுள்ளது.
அதுபோலவே கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் நான்கு விதமான வண்ண வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பில் தெளிவாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், எந்த தேதியில் நடைபெறும் என்பதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முதல் கட்டத்தில் நடைபெறுமா அல்லது இரண்டாவது கட்டத்தில் நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இதைத்தான் திமுக வழக்கறிஞர்களிடம் எடுத்துச் சென்ற அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள், ‘தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிலேயே குழப்பங்கள் உள்ளன என்று கூறி நீதிமன்றத்தை அணுகுங்கள். இதைக் காரணம் காட்டி தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல உள்ளாட்சித் தேர்தல் நடந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்துவிட்டால், அதன்மூலம் தங்களுக்கு வரும் வளம் குறைந்துவிடும் எனக் கருதிய அதிமுக மாவட்டச் செயலாளராகப் பதவி வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், மேற்சொல்லிய தகவலை அப்படியே தங்கள் பகுதியிலிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.
திமுக வழக்கு
இதனிடையே கடந்த நவம்பர் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகிய திமுக, “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்” என்று மனுத் தாக்கல் செய்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னரே இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. அதன்படி நாளை மறுநாள் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது உள்ளிட்ட அதிமுக தரப்பினர் தங்களிடம் சொன்ன குளறுபடிகளைக் காரணம் காட்டியே தங்கள் தரப்பு வாதங்களை திமுக முன்வைக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை: