செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஆசிரியர் வீரமணி பிறந்த நாள் அறைகூவல் : சமூகநீதி காக்க சமர்க்களம் காண வாரீர்!

Asiriyar K Veeramani : நாளை (2.12.2019) எனது 87ஆவது ஆண்டு பிறந்த நாள்
என் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்து வளர்ந்து பத்து ஆண்டு காலத்தின்பின், கருப்பையே வாழ்நாள் வண்ணமாக ஆக்கி, பொறுப்பை என் தலைவர்- அறிவு ஆசான் எனக்குத் தருவதற்கு முன் பிருந்தே, சிவப்பை-சிந்தனை எழுச்சியை, எனது மாணவப் பருவத்திலே கற்க வைத்தவர் எனது பள்ளி ஆசான் மானமிகு. ஆ.திராவிடமணி அவர்கள்!
எனக்கு மானமும் அறிவும் ஊட்டியவர் நமது ஞான சூரியன் தந்தை பெரியார் என்ற நிரந்தர அறிவு ஆசானே!
என் பொதுப்பணி தொடர, பெறாது பெற்ற அன்னை மணியம்மையார்
எனது பொதுப்பணி என்றென்றும் தொடர என்னைப் பெற்ற தாய் பிறந்த சில நாட்களில் மறைந்தாலும், வளர்த்துக் கடமையாற்றியவர்கள் எனது தந்தையும், வளர்ப்புத் தாயும் ஆன கிருஷ்ணசாமியும், பட்டம்மாளும் ஆவார்கள்.
ஆனால் அதற்குப்பின் - 63 ஆண்டுகளுக்கு முன் பெறாத பிள்ளையாக பெற்ற பிள்ளையைவிட, அதிகமான பாசத்தால் - கொள்கைப் பாசத்தால் - கட்டிப்போட்டு, கழகக் கடமைகள் இன்றளவும் தந்தை வழியில் தொடர்ந்து ஆற்றிட தயாரித்தவர் எனது உற்ற அன்னை மணியம்மையார் அவர்களேயாவார்தாய் மடியாக இருக்கும் என்றைக்கும் கொள்கைக் குடும்பத்தவர்கள்

தாயின் மடியையும், தாலாட்டையும் கேட்டறியாத என்னை தாலாட்டி, சீராட்டி, ஊக்கமும் உற்சாகமும் தந்து வருவோர் உலகம் முழுவதும் உள்ள எம் கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே!
ரத்த பாசத்தைவிட அந்தக் கொள்கைப் பாசமே எனது பாதுகாப்பு அரண் - ஏன் பலமும் கூட!
எனது மணவாழ்க்கைக்கூட!
எனது மணவாழ்க்கைக்கூட, எனது தலைவரும், அன்னையும் செய்த இயக்க ஏற்பாடு - பணி செய்வதற்கு மேலும் அரிய வாய்ப்பாக அமைந்த ஏற்பாடு!
எனது வாழ்விணையர் திருமதி மோகனா எனது இயக்க அறப்பணிக்கு மேலும் உதவிட, பல வகைகளில் “தன்னை இழந்து” என்னைப் பொதுப்பணிக்குப் பக்குவமாக்கும் ஊக்கச் செயலியாவார்!
எனது குருதிக் குடும்பமோ - ‘கொள்கைக் குடும்பமாய்’ அமைந்ததோடு, அவர்கள் இயக்கத்திற்கு என்றும் அவப்பெயர் ஏற்படுத்தாத என் அருஞ்செல்வங்கள்!
எனது மூச்சுக்காற்றை கருப்பையில் இருந்தபோது எனக்களித்த என்தாய் மறைந்தாலும், அதன் பிறகு என நிரந்தர சுவாசப்பை - தந்தை பெரியார் தான்! - இதைவிட வேறு பேறு உண்டா?
சமூகநீதி - பாலியல் நீதி, சமூக சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு - இவை களை லட்சியப் பயணத்தின் இலக்குகளாக்கிக் காட்டினார் எம் அறிவு ஆசான்!
பணி செய்து கிடப்பதே எம்பணி
அய்யாவுக்குப் பின் அன்னையாரும் விட்டுச் சென்ற எஞ்சிய பணிகளை துஞ்சாமல், அஞ்சாமல், தொடர்வதே எம் ஒரே பணி - 24 மணி நேரத்திலும் இந்த உறுதி - புரட்சிக் கவிஞர் எனது மணவிழாவில் சுட்டியது போல் - என்னை வீண் செயல் எதிலும் வீழ்த்தியதில்லை - இந்தப்பணி!
வாழ்த்தைவிட வந்து வீழும் வசவுகளை, எம் கொள்கைப் பயிர் வளர்க்க உரமாக்கும் துணிவை எம் அன்னை கற்றுத் தந்தார்!
“வளர்ச்சிப் பற்று, மானிடப்பற்று, அறிவுப்பற்று - இப்பற்றுகளைத் தவிர வேறு பற்றுக்கள் அற்றவர் எமது ஞானாசிரியர் தந்தை பெரியார்- இந்த தொண்டில் பழுத்த தூய தலைவர்!
எனவே அவரைப் பற்றினேன்; பற்றினோம். சமூகம் பயனடைகிறது; உலகம் அவர் வயப்படுகிறது! கலகம் தானே அவமானப்பட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது!
சொத்தைகளின் அவதூறு சொல்லாடல்கள்
“அவனுக்கென்ன பெரியார் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் நன்றாக அனுபவிக்கிறான்” என்று சொத்தைகளின் பொய்ச் சொல்லாடல்களைக் கேட்டுக் கேட்டு எமது கொள்கைத் தோழர் களான இளைஞர்கள் பல நேரங்களில் ஆத்திரப்படுவதுண்டு.
நானோ அதை மறுப்பதில்லை. அவர்களின் புரிதலுக்கும் நமது புரிதலுக்கும் உள்ள வேறுபாட்டை பலர் அறியார். எனது பதில் - விடை இதோ:
“ஆம் நன்றாக அனுபவிக்கிறேன் - உண்மைதான். அவர் தம் சொத்துக்களால் பெரிதும் இன்றும் நாளையும் கூட பயனடைந்து கொள்பவன் நான். ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அந்த சராசரி சாதாரணங்களுக்கு பணமும், நிலமும்தான் “சொத்துக்கள்”
எனக்கு அசையும் சொத்தும், அசையா சொத்தும் எது?
எமக்கோ, அசையா சொத்துகள் - பெரியாரின் லட்சியமும் அசையும் சொத்துகள் - ''தொண்டறம் தொடர தொல்லைகள் ஆயிரம் ஏற்று தொய்வின்றிக் களத்தில் நிற்கும் கருஞ்சட்டைக் கடமை வீரர்கள்!''
இவைகளை - இவர்களை நாளும், நான் அனுபவித்து மகிழ்கிறேன் - மகிழ்கிறோம். உலகத்தலைவர் எங்கள் ஆசான் - வரலாற்றில் என்றும் மறையாத மானுடத்தின் அறியாமை இருள்போக்கும் பகலவன் என்பதை உலகம் ஏற்கச் செய்வதைவிட எம் பணி வேறு ஏது?
நாம் பெற்ற கல்வி உரிமை பறி போகுமோ!
திராவிடர் இயக்கமும் தந்தை பெரியாரும் நம் களத் தளபதிகளான அறிஞர் அண்ணா, கலைஞரும் பெற்றுத் தந்த கல்வி உரிமைகள் களவுபோய் கொண் டுள்ளன.
உயிரையே பணயம் வைத்தாவது அறப்போர் தொடருவோம்!
எமது ஒடுக்கப்பட்ட சமூக, இனிவரும் இளைய தலைமுறையை, கல்விக்கண் அற்றவர்களாக்கிட திட்டமிட்ட சதிகளே-புதிய கல்விக்கொள்கை யால், ‘நீட்’ மற்றும் தொடர் தேர்வு என்ற ‘பன்னாடை’ முறைகளால் ஏற்படும் ஆபத்தைக் களைய அறப்போர் தொடங்க முழு ஆயத்தமாக வேண்டும்.
ஆயுதம் ஏந்தாத, அமைதிப் புரட்சியே அய்யா பெரியாரவர்கள் வழி!
தன்னை வருத்தி, சிறைக்குச் செல்லும் அரிய உயிரையும் பணயம் வைத்தாவது திராவிட சமூகத்தின் மானத்தையும், கல்வியையும், உத்தியோக உரிமைகள் என்ற சமுக நீதியையும், அடிப்படை உரிமைகளையும், பாலியல் நீதியையும் மீட்க களம் காண ஆயத்தமாவீர் தோழர்களே (தோழர்களே என்பது முப்பாலரையும் அடக்கியதே).
என் நலம் காத்து வாழ்நாள் நீட்சிக்குக் காரணமான டாக்டர் நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
சிறைவாசம் நமக்குப் புதிதல்ல! சமூகநீதிக் காக்க சமர்க்களம் காண வாரீர்! வாரீர்!
உங்கள் தொண்டன், தோழன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
1.12.2019

கருத்துகள் இல்லை: