வியாழன், 5 டிசம்பர், 2019

எனது குரலை அடக்க முடியாது: ப.சிதம்பரம்

எனது குரலை அடக்க முடியாது: ப.சிதம்பரம்மின்னம்பலம் : வெங்காய விலை உயர்வுக்கு எதிராக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மழையின் காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி குறைந்தது. போதிய வரத்து இல்லாத காரணத்தால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.120க்கு விற்பனையாகிறது ஒரு கிலோ வெங்காயம்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை இருப்பு வைக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் உபரியாக உள்ள இடங்களிலிருந்து பற்றாக் குறை உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார். மேலும் உணவில் தான் அதிகமாக வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வதில்லை. வெங்காயம் பற்றி அதிகம் கவலை கொள்ளாத ஒரு குடும்பத்தில் இருந்து தான் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த இரு மாதங்களாக வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிசம்பர் 5) காலை நாடாளுமன்ற வளாகம் முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் அதிர் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் வெங்காய விலையை குறைக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் பதாகைகள் ஏந்தியவாறு கலந்துகொண்டார்.
அப்போது, ”நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் சாப்பிடமாட்டேன் என்கிறார். அப்பாடியானால் அவர் அவகோடா சாப்பிடுகிறாரா?” எனக் கிண்டலடித்துள்ளார் ப.சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் நேற்று இரவு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நாடாளுமன்றத்துக்கு நான் திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்றத்தில் எனது குரலை அரசாங்கத்தால் அடக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: