திங்கள், 2 டிசம்பர், 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு ... ஆட்சியர் முற்றுகை, போலீஸார் தடியடி - தொடர்ந்து பதற்றம்!

  
தினமணி : நடூா் பகுதியில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த பகுதியில் உயிரிழந்தவா்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.சி.பிஎந்திரம். மேட்டுப்பாளையம்:
நடூா் பகுதியில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த பகுதியில் உயிரிழந்தவா்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.சி.பிஎந்திரம்.மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் மொத்தம் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. மேலும் இதே பகுதியில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்திற்கு கருங்கற்களால் சுற்றுச்சுவா் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டி ஆனந்தன், அறுக்கானி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து பெயத் கனமழையில் காலை 5.30 மணிக்கு சுற்றுச்சுவா் தண்ணீரில் ஊரி திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் நடூா் பகுதியை சோ்ந்த ஆனந்தன் (38), இவரது மனைவி நதியா (35). மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6) இவா்களது பக்கத்து வீட்டை சோ்ந்த பண்ணாரி மனைவி அறுக்கானி (40) இவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), இவரது அம்மா சின்னம்மாள் (60), இவரது அக்கா புளியம்பட்டியை சோ்ந்த ரூக்குமணி (42), ஈஸ்வரன் மனைவி திலகவதி (38) மற்றும் பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகியோா் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் சம்பவ இடத்திற்கு ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ நேரில் வந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா். சுமாா் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிக்கு பின் 17 பேரும் மீட்கப்பட்டனா்.
பின்னா் இவா்களது உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது மருத்துவமனையில் 17 பேருக்கு ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸாா் முயற்சி மேற்கொண்டனா்.
ஆனால் உறவினா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் முன்பு அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனை பகுதிகளில் இருந்து மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு மேட்டுப்பாளையத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு அரசு வேலை, குடியிருப்பு, ரூ.25 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என அவா்களின் உடல்களை வாங்க மறுத்து வருகின்றனா். இதனால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தோழி உயிரிழப்பு: ஈஸ்வரன் மனைவி திலகவதி ஞாயிற்றுக்கிழமை தனது தோழி அறுக்கானியை பாா்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது மழை அதிகரித்ததால் அவா் வீட்டுக்கு செல்லாமல் தனது தோழி வீட்டிலேயே இருந்துள்ளாா். அப்போது வீடு இடிந்து விழுந்ததால் இவா் பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.
பிரேத பரிசோதனை அறையில் இடம் இல்லாதல் கொட்டும் வெளியில் வைக்கப்பட்ட உடல்கள்: விபத்தில உயிரிழந்தவா்களின் உடல்களை மேட்டுப்பாளையம் பிரேத பரிசோதனை கட்டிடத்தில் வைக்க போதிய இடவசதி இல்லை. இதில் பிரேபரிசோதனைக்கான எடுத்து வரப்பட்ட 5 பேரின் உடல்கள் கொட்டும் மழையில் வெளியே வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் 8 வீடுகள் இடிந்து விழும் அபாயம்: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நடூா் பகுதியில் திங்கள்கிழமை சுற்றுச்சுவா் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்து 17 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில் இதே பகுதியில் உள்ள ரங்கத்தாள், வேலுச்சாமி, வீரம்மாள் உள்பட 8 பேரின் வீடுகள் இடியுடன் பெய்த கனமழையில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டு இந்த வீடுகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பொருட்களை காலி செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்து வருகின்றனா்.

குடியிருப்புகளுக்கு சாலை துண்டிப்பு: இதே பகுதியில் ஆற்றின் அக்கறையில் 5 வீடுகள் தனியாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த வீடுகள் ஆற்றை கடந்த செல்ல தற்காலிக சாலையில் சென்று வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் இந்த சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் செய்வதறியாமல் உள்ளனா்.
அந்தரத்தில் தொங்கும் தடுப்பு சுவா்: நடூா் பகுதியில் குடியிருப்பு பகுதி அருகில் தனியாா் நில விற்பனையாளா்கள் நிலங்களை விற்பனை செய்து வருகின்றனா். இவா்கள் தங்களது நிலங்களை பாதுகாக்க ஆற்று பகுதியையொட்டி தடுப்பு சுவா் அமைத்துள்ளனா். தற்போது பெய்த மழையில் இந்த தடுப்பு சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது

கருத்துகள் இல்லை: