செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

தமிழ் சினிமா கந்து வட்டி... சதுரங்க வேட்டைகளால் ..

minnambalm கேபிள் சங்கர் : சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, எனப் பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கின்றன என்று தெரிந்து அவை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்றுவிடும் தயாரிப்பாளர்கள் இருக்கும் இதே திரையுலகில்தான், ‘இதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.. ஆனா அது ஏன் என் படத்துக்கு மட்டும் கேட்டு வர மாட்டேன்குறாங்க’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கும் இடம்தான் தமிழ் சினிமா.
அப்படிப்பட்ட ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு “உங்க படம் பத்தி கேள்விப்பட்டேன். இந்தி ரைட், தெலுங்கு ரைட் வாங்கிக்கிறோம்” என்று போன் வந்தால் எப்படி இருக்கும் அந்த தயாரிப்பாளருக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை சந்தோஷம் புரைக்கேறிக் குதித்தார். “என்ன விலை?” என்று கேட்டது எதிர் முனை. இவருக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. “மார்கெட்டுல நம்ம படம் பத்தி நல்ல பேச்சு இருக்கு. இந்திக்கு ஒரு பத்து ரூபா கேட்டுட்டு இருக்கேன்” என்று தயக்கத்தோடு, இன்னும் ஜாஸ்தியா சொல்லியிருக்கலாமோ, இல்லை ஜாஸ்தியா சொல்லிட்டோமோங்கிற குழப்பத்தோட பதில் சொல்ல,
“சரி.. விடுங்க.. வேணும்னா நான் தெலுங்கும் சேர்த்து எடுத்துக்குறேன். 14 ரூபா ஓகேவா” என்றார்.

இதுக்கு ஏழு அதுக்கு ஏழு அடிச்சோம்டா லக்கி ப்ரைஸ் என்று நினைத்தாலும் “இல்லீங்க 17னா ஓகே” என்று கொஞ்சம் கொத்து காட்டினார்.
“சரி விடுங்க 15 ஓகே பண்ணுங்க.. அதுக்கு மேல முடியாது. எங்களுது மும்பை கம்பெனி. மாசத்துக்கு இத்தனை படம்னு நாங்க லிஸ்ட் போட்டுத்தான் எடுப்போம் உஙக படம் சாட்டிலைட் போயிருச்சுங்களா?”
“இல்லை பேசிட்டிருக்கோம்” - கெத்து!
“இந்த மாசம் டார்கெட்டுல சாட்டிலைட் ஒரு படம் பாக்கி இருக்கு சோ.. தெலுங்கு, ஹிந்தி ரைட்ஸ் ஒரு 15. சாட்டிலைட் ஒரு 25 ஓகேவா.. மொத்தம் 40. இருபது ரூபா உங்க அக்கவுண்ட் டீடெயில் எல்லாம் அனுப்புங்க.. உங்க படத்தோட டீடெயில் எல்லாம் வாட்சப்புல அனுப்புங்க.. ஒரு அரை அவர்ல உங்க அக்கவுண்டுக்கு 50 பர்செண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிருவோம். மீதி பணம் நாளைக்கு எங்க ஆபீஸுலேர்ந்து ஆளுங்க வந்து அக்ரிமெண்ட் போட்டப்புறம் ட்ரான்ஸ்பர் பண்ணிருவோம்... உங்க படத்து மேல ஏதும் பைனான்ஸியல் ப்ரச்சனை இல்லைங்கிறத தெரிஞ்சதுனாலத்தான் சொல்லுறோம். ஓகே...”
என்றதும் தயாரிப்பாளர் மயக்கம் போடாத குறைதான். உடனடியாய் தன்னுடய டீடெயில் எல்லாவற்றையும் அனுப்பி வைத்தார். அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அந்த ஆளிடமிருந்து போன். “சார்.. உங்க கிட்ட ஜிஎஸ்டி இல்லையா?” என்ற குரலில் அதிர்ச்சி இருந்தது.
“இல்லீங்க.. படத்துக்கு எல்லாமா ஜிஎஸ்டி கட்டணும்?”
“எனி பிஸினெஸ் ஜிஎஸ்டி இஸ் மஸ்ட் சார்.. ஆஹா.. இப்ப உங்களோட நான் பிஸினெஸே பண்ண முடியாது. நீங்க இப்ப அப்ளை பண்ணாலும் இருபது நாளாவது ஆகும். என்ன பண்ணலாம்?” என்று எதிர் முனை அமைதி காத்தது.
இங்கே தயாரிப்பாளர் போனை மூடிக்கொண்டே பக்கத்திலிருந்த ப்ரொடக்ஷன் மேனேஜரிடம் “என்னயயா ஜிஎஸ்டி எடுக்க சொல்லவேயில்லையே?” என்று கடிந்துகொண்டே “வேணும்னா ஒரு 10 பர்செண்ட் பிடிச்சி வச்சிக்கங்க. நான் இருபது நாள்ல ஜிஎஸ்டி எடுத்ததும் ட்ரான்ஸ்பர் பண்ணுஙக” என்றார்.
“இல்லீங்க அதெல்லாம் சரிப்படாது. சரி ஒண்ணு பண்றேன் உங்களுக்காக. ஏன்னா இந்த மந்த் டார்கெட்டை நான் முடிக்கணும். ஸோ.. ரிஸ்க் எடுத்து ட்ரான்ஸ்பர் பண்ணுறேன். அதுக்கு முன்னாடி நான் அனுப்பப் போற 20 லட்சத்துக்கு 2 பர்சண்ட் எனக்கு சார்ஜ் பிடிப்பாங்க. சோ, நீங்க எனக்கு அதுக்கான யு.டி.ஆர். நம்பரை கொடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிருவேன். பண்ணிட்டு சொல்லுங்க” என்று போனை கட் செய்துவிட்டார்.
மேனேஜர் ஏல்லாவற்றையும் கேட்டு விட்டு. “சார். பொருளு நம்முளுது. அவன் வாங்கப் போறான். மீடியேட்டர் எல்லாம் வச்சி வித்தாக்கூடா வித்த காசு வந்ததுக்கு அப்புறம்தான் அவனுக்கான கட்டிங் கொடுக்குறது வழக்கம். இங்க எல்லாமே உல்டாவா இல்ல இருக்கு. எனக்கு ஜிஎஸ்டி வேணும்னா தெரியாம இருக்கலாம். பட் சினிமா தெரியும்” என்றார்.
”அவன் யூ.டி.ஆர்.தானே கேட்டான்?”
“சார்... அவன் அக்கவுண்டுக்கு அனுப்புன உடனேதான் யுடிஆர் நம்பர் வரும். யு.டி.ஆர். நம்பர் வந்திருச்சுன்னா நம்மால அக்கவுண்டுல இருக்கிற பணத்தை ஸ்டாப் பண்ண முடியாதுங்க. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. சதுரங்க வேட்டையில நம்ம வினோத் சொன்னா மாதிரி, ஒருத்தன ஏமாத்தணும்னா அவனோட ஆசையை தூண்டணும்னு சொல்வாரு. அதுபோல இவன் நம்ம ஆசைய தூண்டிட்டான். அடுத்த ஏமாறறதுதான் மிச்சம்.”
அப்போது ஒரு மெசேஜ் வந்தது. அது ஒரு கார்பரேஷன் பேங்க் அக்கவுண்ட் விவரம். “என்னய்யா அக்கவுண்ட் நம்பர் எல்லாம் கரெக்டாதானே இருக்கு, ஏதோ கார்பரேட் கம்பனி போல... ஏர் மீடியா நெட்வொர்க்னு எல்லாம் இருக்கே?”
அடுத்த முறை போன் வரும்போது தன் அத்தனை சந்தேகங்களோடு தயாரிப்பாளர் “தம்பி... பொருளு என்னுது. நான் எதுக்கு உங்களுக்கு பணம் அனுப்பணும். நீங்க ஒண்ணு பண்ணுங்க... ஒர் ரூவாவை எனக்கு அனுப்புங்க. அதிலேர்ந்து உங்க 2 பர்செண்ட நான் திரும்ப அனுப்புறேன். நாளைக்கு அக்ரிமெண்ட் போடும்போது மொத்த பணத்தையும் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கலாம்” என்றவுடன். கொஞ்சமும் அசராமல் “இன்னையோட மந்த்லி டார்கெட் முடிஞ்சுருங்க.. உங்களுக்கு அடுத்த மாசம் இதே ஆபர் கொடுப்பமா இலல்யான்னு தெரியாது. யோசிச்சிக்கங்க” என்றது எதிர் முனை..
“இல்லீங்க. ஆபர் போனா பரவாயில்லை. அடுத்த மாசம் நீங்க சொல்லுற ஆபரை சொல்லுங்க. சம்மதம்னா பிசினெஸ் பண்ணுவோம்” என்றதும் கட் ஆன போன் தான் திரும்ப எடுக்கப்படவேயில்லை.
இது கதையல்ல; நிஜம். சமீபகாலமாய் தமிழ்த் திரையுலகில் நடந்து கொண்டிருக்கும் நிஜம். மேலே சொன்ன கம்பனி அக்கவுண்ட் டீடெயில்கூட உண்மைதான். ஆர்வக்குட்டி தயாரிப்பாளர்கள் பலர் இப்படி ஏமாந்துள்ளார்கள்.
தமிழ் சினிமா கந்து வட்டிகளால் மட்டுமே நடக்கவில்லை. இம்மாதிரியான ஏமாற்றுக்காரர்களுக்காகவும் நடக்கிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள: sankara4@gmail.com)

கருத்துகள் இல்லை: