வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சவுக்கு : அந்த தேசிய கட்சி கோஷ்டிகளிலேயே இவரது கோஷ்டி சக்தி வாய்ந்தது.

அந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை.   யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் ?
மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது.   தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது.
டியர் மிஸ்டர் பாலகிருஷ்ணன்  என்று தொடங்கியது அந்தக் கடிதம்.  ஆர்.கே.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கேட்டிருக்கும் தொழில் கடனை, சிறப்பு நிகழ்வாகக் கருதி, தாமதமில்லாமல் உடனடியாகத் தரும்படி அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  அதன் கீழே மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு கையெழுத்திட்டிருந்தார்.
அந்த சிங்காரவேலு அப்போதும் நிதி அமைச்சராகத்தான் இருந்தார்.  எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் சிதறிக் கிடந்ததால், அவரது கட்சி தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது.   சிங்காரவேலுவைப் பற்றி தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தாலும், எந்த ஆதாரமும் வெளிவரவில்லை என்பதால், அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மத்திய அரசில் அவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.   தமிழ்நாட்டில் அந்த தேசியக்கட்சிக்கு இருக்கும் கோஷ்டிகளிலேயே இவரது கோஷ்டி சக்தி வாய்ந்தது.  இவர் மட்டும் இல்லாமல், இவரது மகனும் அந்தக்கட்சியில் பொறுப்பில் இருந்தான்.

ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அரசியலில் கொடிகட்டிப் பறந்தவர் சிங்காரவேலு.  லண்டனில் பொருளாதாரம் படித்தவர்.   முனைவர் பட்டம் பெற்றவர்.  மத்திய அரசில் அவர் ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.
இந்த ஆதாரம் சிங்காரவேலுவை ஆட்டம் காணச்செய்து விடுமே.. தொடர்ந்து அந்த பைலை ஆராய்ந்தேன்.
ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுக்கக் கூடாது என்ற லீகல் ஒபினியன் வந்த பிறகு இக்கடிதம் வந்திருக்கிறதா அதற்கு முன் வந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தேன்.   லீகல் ஒபினீயன் வந்த 28 நாட்கள் கழித்து மத்திய நிதி அமைச்சரின் கடிதம் வந்திருந்தது.
மத்திய அமைச்சரின் கடிதத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கு முன்பு மேனேஜராக இருந்த பாலகிருஷ்ணன் பதில் எழுதியிருந்தார். ஹானரபிள் பினான்ஸ் மினிஸ்டர் என்று தொடங்கி, ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று கொடுக்கப்பட்டிருந்த லீகல் ஒபினியனைப் பற்றி கூறி விட்டு, ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்படும் கடனை திருப்பி வசூலிக்க அவர்கள் அடமானமாக கொடுத்துள்ள சொத்துக்களின் மதிப்பு 50 கோடியைத் தாண்டாது, ஆனால் அவர்கள் கேட்பதோ 1200 கோடி என்றும், அந்த 50 கோடிக்கான சொத்தே நீதிமன்றத்தில் வழக்கில் சிக்கியுள்ளது என்றும், ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்பதையும் எழுதி, லீகல் ஒபினியனின் நகலை இணைத்திருந்தார்.
ஆனால் அதற்குப் பிறகு எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லை.  லோன் கொடுக்கக்கூடாது என்று எழுதியிருந்த அதே பாலகிருஷ்ணன், 12 நாட்கள் கழித்து, லோன் கொடுக்கலாம் என்று ஆபீஸ் நோட்டில் எழுதி கையெழுத்துப் போட்டிருந்தார்.  அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு, லோன் கொடுக்கலாம் என்று முடிவெடுத்ததற்கு ஆதாரமாக எந்த தகவலும் அந்த பைலில் இல்லை.  பைலின் அடியில் ஒரு உறையில் ஒரு சிடி இருந்தது.  சிடியின் மீது  எதுவும் எழுதப்படவில்லை.   ‘சிடியில் என்ன இருக்கும் ?’   கம்ப்யூட்டரில் உள்ள சிடி ட்ரைவில் சிடியை சொருகினேன்.  “லேட்டஸ்ட் எம்.பி.3 சாங்ஸ்” என்று ஒரு போல்டர் இருந்தது.  அதை திறந்தேன். அப்போது வெளியான படங்களின் பாடல்கள் பல்வேறு போல்டர்களில் இருந்தன. சினிமா பாட்டு சிடியைப் போயி எதுக்கு இந்த பைலில் வைக்கிறார்.   ச்சே  முதலில் பைலை சாஸ்திரி பவனில் ஒப்படைக்க வேண்டும்.  அந்த சிடியை பைலை விட்டு வெளியே எடுத்து, டேபிள் ட்ராயரில் போட்டேன்.
‘திடீரென்று பாலகிருஷ்ணன் எப்படி தன் முடிவை மாற்றிக்   கொண்டார் ?   ஏன் மாற்றிக் கொண்டார் ?   மிரட்டப்பட்டாரா ?  இல்லை உண்மையிலேயே அந்த நிறுவனம் சரியான நிறுவனம்தானா ?  சரியான நிறுவனமாக இருந்தால் ஏன் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை ? மொத்த பணத்தையும் சுருட்டி விட்டார்களா ?   மர்மமான ஒரு நிறுவனத்துக்கு நிதி அமைச்சர் ஏன் எழுத்துபூர்வமாக ஆதரவு தர வேண்டும் ?  அவருக்கும் இதில் பங்கு இருக்குமா ? அல்லது அவரது பினாமி நிறுவனமா ?’ என்று பல்வேறு கேள்விகள் சுழன்று கொண்டே இருந்தன.   எதற்கும் விடை கிடைக்கவில்லை.
என் உடலில் பதற்றம் தொற்றிக் கொண்டதை உணர்ந்தேன்.   என்ன செய்வது என்றும் புரியவில்லை.  சங்கத் தலைவர் கல்யாணசுந்தரத்தை கலந்தாலோசிக்கலாமா என்றால் தற்போது அவகாசம் இல்லை.  சாஸ்திரி பவன் செல்ல வேண்டும். எவ்வளவு பெரிய ஊழலாக இருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணமல்லவா ?   எப்படி இதுபோன்ற தவறுகள் நடக்க முடியும் ?  வங்கிகளில் வருடத்துக்கு இரண்டு முறை ஆடிட் நடக்குமே  !!
எப்படி இது நடந்தது ?
செல்போன் ஒலித்தது.  செல்லை எடுத்துப் பார்த்தால் ஜனனி.   எடுத்துப் பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே லேன்ட் லைன் அடித்தது.   செல்லை சைலென்ட்டில் போட்டுவிட்டு லேன்ட்லைனை எடுத்தேன்.
“வெங்கட்… ?”
“யெஸ்.”
“நான் சீப் விஜிலென்ஸ் ஆபிசர் வெற்றிச்செல்வன் பேசறேன்.  நாலு மணிக்கு வரேன்னு சொன்னீங்களே.. இன்னும் கௌம்பாம இருக்கீங்க.”
”சார்.. ஐ ம் அபவுட்டு ஸ்டார்ட் சார்.  30 மினிட்ஸ்ல அங்க இருப்பேன் சார்”
பரபரப்பு தொற்றிக்கொண்டது. மணி நான்கு ஆகிவிட்டிருந்தது.  யோசித்துக்கொண்டே நேரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டோமே.
பைலை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன்.  சம்பத்தை அழைத்தேன்.
“சம்பத்.   சாஸ்திரி பவன்ல இருக்க விஜிலென்ஸ் ஆபீசுக்கு போயிட்டு வந்துட்றேன். அந்த பைலை கேட்ருக்காங்க.   பாத்துக்கங்க“ என்று சொல்லிவிட்டு, வெளியே வந்து பைக்கை எடுத்தேன்.   முதுகில் இருந்த பையில், அந்த பைலை பத்திரமாக வைத்தேன்.   பைக்கை எடுத்து நேராக சாஸ்திரி பவனை நோக்கிச் சென்றேன்.
வண்டியை நிறுத்தி விட்டு, தரைத்தளத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் பேங்க் விஜிலென்ஸ் ஆபீஸ் எந்தத் தளத்தில் இருக்கிறது என்று தேடியபோது, நான்காவது தளத்தில் இருந்தது தெரியவந்தது.   லிப்ட் கூட்டமாக இருந்தது.  படியேறி மூன்றாவது தளத்தை அடைந்தபோது லேசாக மூச்சிறைத்தது.
‘இந்த சிகரெட்டைக் குறைக்க வேண்டும்.  32 வயதுதான் ஆகிறது.  இப்போதே இப்படி மூச்சிழுத்தால் என்ன செய்வது. எப்படியாவது சிகரெட்டை குறைக்க வேண்டும்.  பைலை வாங்கிக் கொண்டு என்ன கேட்பார்கள் ?   எனக்கு இது குறித்து எந்த விபரமும் தெரியாது என்பதுதானே உண்மை.   அதைச் சொல்லலாம்.   அவர்களுக்கும் தெரியும் அல்லவா.  நான் இப்போதுதானே இந்த ப்ரான்ச்சிற்கே வந்தேன்.   பாலகிருஷ்ணன் இருக்கும்போதுதானே இந்த கடனே வழங்கப்பட்டிருக்கிறது.  அவரை விசாரணைக்கு அழைப்பார்களா ?   அவர் இப்போது சென்னையில் இருப்பாரா ?  சொந்த ஊருக்குப் போயிருப்பாரா… எங்கே இருந்தால் என்ன ?  நம்மைத் தொல்லை செய்யாமல் விட்டால் போதும்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே… திடீரென்று மின்னல் போல ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்றியது.
‘இந்த பைலை எந்த நகலும் எடுக்காமல் அப்படியே கொடுத்து விட்டால் நாளை நமக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் எப்படி சமாளிப்பது.  இவர்களிடம் இந்த பைலின் ஒரிஜினலை அப்படியே கொடுத்தால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது ?   இவர்கள் ஒழுங்காக நடவடிக்கை எடுப்பார்கள் என்று என்ன நிச்சயம் ?   இவர்களிலும் ஒரு கருப்பு ஆடு இருந்தால் ?’
‘இந்த பைலை கேட்டு வாங்குவதே சிங்காரவேலுவிடம் கொடுப்பதற்காக இருந்தால் ?  மத்திய நிதியமைச்சராக இருக்கும் நபருக்கு இருக்கும் செல்வாக்கு கொஞ்ச நஞ்சமா ?  டாடா, அம்பானி, மிட்டல் என்று அத்தனை தொழிலதிபர்களும் சிங்காரவேலுவின் பாக்கெட்டில் அல்லவா இருப்பார்கள் ?  ஒட்டுமொத்த ஆதாரத்தையும் இவர்களிடம் கொடுத்து விட்டால் நாளை என்ன சொன்னாலும் நம்பமாட்டார்களே.’
மூன்றாவது தளத்திலிருந்து அப்படியே கீழிறங்கினேன்.  மணியைப் பார்த்தேன்.  நாலேமுக்கால் ஆகியிருந்தது.    லேட் ஆனது ஆகிவிட்டது.  மொத்த கோப்பையும் ஒரு நகல் எடுத்துக் கொள்வோம்.   அப்படியே கொடுப்பது நாளை நமக்கும் ஆபத்தாக முடியலாம் என்று முடிவு செய்து, சாஸ்திரி பவன் அருகில் இருந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்றேன்.
சாஸ்திரி பவனில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கின்றன.   ஏராளமான பொதுமக்கள் வந்து போகும் இடம் என்பதால், ஜெராக்ஸ் கடையில் கூட்டம் நிறைய இருந்தது.  எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும்.  ‘ஆனால் என்ன ?’
“மொத்த பைலையும் ஒரு காப்பி போடுப்பா“
“எத்தனை காப்பி சார் ?“
“ஒரு காப்பி போதும்பா“
அவன் அந்தக் கோப்பை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, எனக்கு முன்னால் வந்தவர்களுக்கு காப்பி போட்டுக் கொண்டு இருந்தான்.  ஓரமாகச் சென்று ஒரு தம் அடிக்கலாம் என்று தோன்றினாலும், அந்த பைலை அவன் பொறுப்பில் விட்டு விட்டுச் செல்ல மனம் வரவில்லை.  பொறுமையாக அனைவருக்கும் அவன் ஜெராக்ஸ் போட்டு முடித்து விட்டு, எனது பைலை எடுத்துப் போடும் வரை காத்திருந்தேன்.
செல்போன் அடித்தது.  மீண்டும் ஜனனி.  செல்போனை எடுத்துப் பார்க்கும் போது, ஜெராக்ஸ் கடைப்பையன் “சார் ஒன் காப்பி வாங்கிக்கங்க” என்றான்.    போன் பேசிக்கொண்டிருந்தால் பைலை சரிபார்க்க முடியாது என்று, சைலென்ட்டில் போட்டு விட்டு, ”குடுப்பா” என்று அவனிடம் அவற்றை பெற்றுக் கொண்டேன்.
அவன் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு, ஜெராக்ஸ் காப்பிகளை எடுத்து எனது பையில் தனியாக வைத்தேன்.   ஒரிஜினலை வாங்கி அனைத்துப் பக்கங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன்.  அனைத்தும் சரியாக இருந்தது.
‘ஒரு முக்கியமான விஷயத்தை டீல் செய்யும் போது, மனது ஏன் பார்ப்பவர்களையெல்லாம் சந்தேகப்படுகிறது ?  அந்தப் பையனைப் பார்க்கும்போது அவன் அந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கிறான் என்பது நன்றாகத் தெரிகிறது.  ஆனாலும் ஏன் இந்த சந்தேக புத்தி ? சந்தேகம் என்பதே மனித இயல்பா ?  இல்லை எனக்கு மட்டும் சந்தேகம் அதிகமாக இருக்கிறதா ?’
மூன்றாவது தளத்தை அடைந்தேன்.  இடது புறமாக பேங்க் விஜிலென்ஸ் அலுவலகம் இருந்தது.   உள்ளே நுழைந்ததும் கடைசி அறையின் வெளியே  வெற்றிச்செல்வன், சீப் விஜிலென்ஸ் ஆபீசர் என்ற பெயர்ப்பலகை இருந்தது.  செல்போனை சைலென்டல் போட்டுவிட்டுச் செல்லாம் என்று எடுத்தபோது, ஜனனியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
“ஐ வோன்ட் டிஸ்டர்ப் யு”.  ஏற்கனவே ஒரு மணிநேரம் தாமதமாகி விட்டது.   பதிலனுப்ப நேரம் இல்லை.  பிறகு அனுப்பிக் கொள்ளலாம்.
நேராக அந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  “கம் இன்” என்று குரல் வந்ததும் உள்ளே நுழைந்தேன்.
வெற்றிச்செல்வன், ஒரு அதிகாரிக்கே உரிய தோரணையோடு இருந்தார்.   முன்பக்கம் லேசான வழுக்கை.  மேஜையில் முருகன் படம் வைத்திருந்தார்.   ஐம்பதுக்கு மேல் இருப்பார்.   வெளிர் நீலச் சட்டைக்கு அவர் கரு நீலத்தில் அணிந்திருந்த டை பொருத்தமாக இருந்தது.
”வாங்க வெங்கட்.   சிட் டவுன். ”
”வாட் டூ யு வான்ட் டு ஹேவ்.  காபி ஆர் டீ”
”நத்திங் சார். ஜஸ்ட் நவ் ஹேட்.”
என் பையைத் திறந்து ஆர்.கே. என்டர்பிரைசஸ் பைலை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.  பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு, பைலைத் திறந்து பார்த்தார்.
அப்ளிகேஷனைப் பார்த்துவிட்டு, லீகல் ஒபினியனைப் பார்த்ததும் அவர் புருவங்கள் உயர்ந்தன.  அடுத்த பக்கத்தில் இருந்த நிதி அமைச்சரின் கடிதத்தைப் பார்த்ததும் கண்கள் வியப்பில் விரிந்தன. கடைசிப்பக்கம் வரை பார்வையிட்டு விட்டு, பைலிலிருந்து தலையை உயர்த்தி என்னைப் பார்த்து, ”இந்த பைல் வேற காப்பி இருக்குதா ?”    என்றார்.
”நோ காப்பி சார்.  நான் கூட காப்பி எடுக்கலை.  எப்படியும் நீங்க பைல் வாங்கினதுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் தருவீங்கன்னு காப்பி எடுக்காம வந்துட்டேன் சார்.  ஷுட் ஐ ரீட்டெயின் ய காப்பி  ? (Should I retain a copy ?)”
”நோ.. நோ.. ஜஸ்ட் கேட்டேன்.  பேங்க்ல காப்பி இருக்குமே ? ”
”அங்கயும் காப்பி இல்ல சார்.  இந்த ஒரிஜினலே ரொம்ப அர்ஜென்சியில தேடிக் கண்டுபிடிச்சோம்.”
அவர் டேபிளில் இருக்கும் பெல்லை அழுத்தி உதவியாளரை வரச்சொன்னார். வெள்ளைச் சீருடை அணிந்த ஒருவர் உள்ளே வரவும், அவர் டேபிளில் இருந்த லெட்டர் பேடில், சர சரவென்று நான்கு வரிகளை கிறுக்கி, வந்தவரிடம் கொடுத்து, ஹேமாகிட்ட இதக் குடுத்து,  ப்ரான்ச் மேனேஜருக்கு அட்ரஸ் பண்ணி, நான் எழுதியிருக்கற மாதிரி அக்னாலெட்ஜ்மென்ட் அடிச்சு எடுத்துட்டு வரச்சொல்லுங்க.” என்று அவரை அனுப்பி விட்டு என்னைப் பார்த்தார்.
”ம்ம்… தென்…  ஆர் யூ மேரிட். ? ”
”நாட் யெட் சார்”
”ஹவ் ஓல்ட் ஆர் யு ?”
”32 சார். ”
”தென் கெட் மேரிட் மேன்… வீட்ல சிஸ்டர்ஸ் இருக்காங்களா ? ”
”ஜஸ்ட் ஒன் சிஸ்டர் சார்.  ஷி ஈஸ் அல்ரெடி மேரிட்.  நாந்தான் தள்ளிப்போட்டுகிட்டு இருக்கேன் சார்.”   என்று நான் சொல்லி முடிக்கையில், அந்த உதவியாளர் டைப் அடித்த கடிதங்களோடு வந்தார்.
உரையாடலை அப்படியே நிறுத்தியவர் அந்தக் கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்து விட்டு, கையெழுத்திட்டார்.
இந்தாங்க.  ஓ.சியில கையெழுத்துப் போட்டுட்டு எடுத்துக்கங்க.   ஓ.கே.   என்று எழுந்து கை கொடுத்து விட்டு, தொலைபேசியை எடுத்தார்.  நான் அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன்.  ஆர்.கே என்டர்பிரைசஸ் தொடர்பான கோப்பை பெற்றுக் கோண்டதற்கான ஒப்புகை இருந்தது.
வெளியே வந்ததும் திடீரென்று களைப்பாக இருப்பது போலத் தோன்றியதால் நேராக வீட்டிற்குச் சென்றேன்.
அது வரை ஆர்.கே என்டர்பிரைசஸ் என் நினைவுகளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. படுக்கையில் விழுந்தவுடன் ஜனனி நினைவு வந்தது.   “ஐ யம் சாரி.  ஐ வாஸ் வெரி பிசி.” என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.  10 நிமிடங்கள் ஆனபின்னும் பதில் வரவில்லை.  “ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்.   ஐ ஹேட் டு கோ டு விஜிலென்ஸ் ஆபீஸ்.  ரியல்லி வெரி ஹெக்டிக் டுடே (Really very hectic today)” என்று மீண்டும் அனுப்பினேன்.
அவளிடமிருந்து எஸ்எம்எஸ் வரும் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டே, எப்போது உறங்கினேன் என்ற தெரியவில்லை.
காலையில் எழுந்து செல்போனைப் பார்த்ததும், ஜனனியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.   ஆபீசுக்கு நுழையும்போது ஆர்.கே.என்டர்பிரைசஸ் என்ற தொல்லை ஒழிந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.  பார்ப்போம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லையா என்று.
டேபிளின் மீது ஒரு கடிதம் இருந்தது.  ‘மணி 10.10தான் ஆகிறது. அதற்குள் காலையில் என்ன கடிதம் இது .. …’
“ட்யூ டு பெர்சனல் ரீசன்ஸ், ஐ மே கைன்ட்லி பி ட்ரான்ஸ்பர்ட் டு, ஹெட் ஆபீஸ்.” என்று எழுதி ஜனனி கையெழுத்திட்டிருந்தாள்.
தொடரும்.

கருத்துகள் இல்லை: