வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திருச்சி மாணவர் ரஞ்சித் ராக்கிங் படு கொலை ... 4 மாணவர்கள் கைது

ராக்கிங்: நான்கு மாணவர்கள் கைது!மின்னம்பலம்: திருச்சி மாவட்டத்தில் ராக்கிங் தொடர்பாக நான்கு மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நெருஞ்சலக்குடி ஊராட்சியில் ராமதாஸ் என்பவர் வசித்துவருகிறார். யானைப்பாகனான இவரின் மகன் ரஞ்சித் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று (பிப்ரவரி 8) பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ரஞ்சித், தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவனின் பெற்றோர் லால்குடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். லால்குடி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாணவன் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில், என்னுடன் பயிலும் சக மாணவர்கள் நான் பெண் மாதிரி இருக்கிறேன் என்று என்னை ராக்கிங் செய்து கொடுமைப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது மரணத்துக்குப் பொன் வசந்த், பிரகாஷ், ஹரி சங்கர், தனுஷ் ஆகியோர்தான் காரணம் எனக் கூறியிருந்தார்.
ஏற்கனவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்கள் , ராக்கிங் செய்து ரஞ்சித்தின் கையை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இனிமேல் அதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். தற்போது, மறுபடியும் அதே பிரச்சனையால்தான் ரஞ்சித் தற்கொலை செய்துள்ளார். அதனால், ரஞ்சித்தின் மரணத்துக்குக் காரணமான அந்த மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதுவரை உடலை நாங்கள் வாங்கமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நான்கு மாணவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
கல்லூரிகளில் ராக்கிங்கிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியிலும் ராக்கிங் காரணமாக ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: