செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்டதுறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது.
vinavu :பணி நிரந்தரத்துக்காக துணை பேராசியரிடம் 30 லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் ஆ.கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 03.02.2018 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இப் பல்கலை கழகத்துக்கு 10-வது துணைவேந்தராக 2016 மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.> துணை வேந்தர் கணபதி< 2016 ஆண்டு பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 84 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
ஒரு பேராசிரியருக்கு 6௦ லட்சம் ரூபாய் என பேரம் பேசி தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா இறக்கும் வரை ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்ததால் உயர்கல்விச் செயலாளர் முதல், முதலமைச்சர், உயர்கல்விதுறை அமைச்சர் என முறையாக ஊழல் ராஜ்ஜியம் சென்று கொண்டிருந்தது.
ஜெயலலிதா இறந்தப்பின் மன்னார்குடி மாஃபியா சசி கும்பலுக்கு ஊழல் பங்கு சென்றடையவில்லை என்பதால் கணபதி செய்த பணிநியமனத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் உயர்கல்வித்துறை ஈடுபட்டது. அவசர கடிதம் அனுப்பப்பட்டது. பதிவாளர் ஃபேக்ஸ் ஐ நிறுத்தி வைத்து தாமதமாகவே கொடுத்ததாகவும், அதனால் பணிநியமனம் செய்துவிட்டதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்போதைய பதிவாளர் பி.எஸ்.மோகன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் துணைவேந்தர் கணபதிக்கும் நேரடியான பேச்சுவார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டது. முடிவாக அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதில் முறைகேடுகளை முறையாக செய்துகொள்ள பணிக்கப்பட்டது.
உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்ட துறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது. இதனால் இங்கு மாணவர்களுக்கு வேறுதுறை பேராசிரியர்கள் நடத்தும் பாடம் தெளிவாக உள்வாங்கி கற்றுக்கொள்ள முடியவில்லை. உள்ளே சென்று கல்வி சம்பந்தமாக பேராசிரியரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லி புரியவைக்க அவர்களால் இயலவில்லை என்கின்றனர் மாணவர்கள்.
துணைவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து உதவிப் பேராசிரியர்கள் 112 பணியிடங்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொருவரிடமும் 30 முதல் 60 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நியமித்துள்ளார். இதற்குமுன்னர் இருந்த துணைவேந்தர் ஜேம்ஸ்பிட்சை கொங்கு வேளாள கவுண்டர் ஆதிக்க சாதியினரையே நியமித்ததாகவும் தற்போது கணபதி அவ்வாறு செய்யவில்லை என்பதால், இவருக்கு எதிராக பல்கலைகழகத்துக்குள்ளேயே ஆதிக்க சாதியின் பேராசிரியர்களை இவருக்கு எதிராக இருக்கும் பொது சுரேஷ் என்ற உதவிபேராசிரியர் நியமனத்தில் பேசியதொகை ஒப்படைக்கும்படி தொல்லை கொடுத்தால், அவருக்கு பணம் கொடுக்கும் போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சையும் இதே போன்று ஊழலில் ஈடுபட்டது, வெளிப்படையாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பது என்று மாவிலும் கொள்ளை! பனியாரத்திலும் கொள்ளை! அடித்து செயல்பட்டது ஊடகங்களால் அம்பலமானது. ஆனால் முறையாக ஊழலில் பங்கு அதிகார வர்க்கத்துக்கு ஆளும் கட்சிக்கும் சென்றுள்ளது. துணைவேந்தர் கணபதி அவ்வாறு செய்யாததும் கூடுதலான ஆதிக்கசாதியின கவுண்டர்களை நியமித்ததாகவும், கைது நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள்.
துணைவேந்தர் நியமனம் ஆளுநர் பார்வையிலும், ஊழல்களிலும் உயர்கல்வி செயலர் என்று அனைவர் முன்னிலையில் தான் நடக்கிறது. பொறுப்புக்கு வந்தவுடனே மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை திருடி மாணவர்களுக்கு வஞ்சகம் செய்து கொள்ளையடிப்பது முதல் வழமையாக நடந்துள்ளது.

பாரதியார் பல்கலைகழகம்
துணைவேந்தர் கணபதியின் திருட்டு அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த வண்ணமே உள்ளது. 300 மையங்களில் தலா 10 லட்சம் வசூல் செய்து கொண்டு தொலைதூரக்கல்வி மையத்திற்கு பல்வேறு வெளிமாநிலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் நடத்துவதற்கு அனுமதி அளித்தது, சிண்டிகேட் தேர்தல் முறையிலும் முறைகேடு, என கடந்த காலத்தில் ஊடங்களில் சந்தி சிரித்தது ஏராளம்.
துணைவேந்தர் கணபதியின் ஒருவர் மட்டும் அடித்தகொள்ளை அல்ல. கல்வித்துறை அடி முதல் நுனி வரை ஊழல்மயப்பட்டு அழுகி நாறுவதன் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே. ஒரு பல்கலைகழகம் வருங்கால சமூகத்தை உருவாக்க கூடிய மாணவர்களை உற்பத்திசெய்து அனுப்பகூடிய இடத்தில இருக்கிறது. மாணவர்களை சிந்தனை ரீதியாகவும் செயல்ரீதியாகவும், ஊழல்மய பாதிப்பால் கல்வி முடித்து சமூகத்தில் வாழும்போது அத்தகைய பண்புகளை சமூகத்தில் இறக்குமதி செய்வார்கள். சமூகம் சீரழியும் இது மிகப்பெரிய பேராபத்து.
இதுநாள்வரை கொள்ளை சம்பவம் நடக்காதது போலவும் தற்போதுதான் நடந்தது போலவும் அதிரடியாக கைது செய்து ஊழல்வாதிகளை தண்டிப்பது போல நாடகம் நடத்தும் பாடையில் உள்ள அரசு. இந்நாடகத்திற்கு பின்னே ஆளும்வர்க்கம் நலன் இருக்கிறது. அது என்னவென்றால் மருத்துவத்துறையில் நடந்த ஊழலை சுட்டிக்காட்டி நம்மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இதே போல பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கும் இதன் வழிகாட்டியாக உள்ள (UGC) ஒழுங்காக செயல்படாமல் முறைகேடுகள் நடப்பதால் அதை கலைத்துவிடலாம். கலைத்துவிட்டு உயர்கல்வி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை HEERA (Higher Education Empowerment Regulation Agency) உருவாக்க போவதாக புதியகல்விகொள்கை திட்டத்தின்படி ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே இதுபோன்ற கைது அரசின் நிகழ்ச்சிநிரலில் உள்ள திட்டத்தை மக்கள் மீது திணிப்பதற்கும் நியாயப்படுத்தவும் பயன்படும்.
இவர்கள் உருவாக்கும் HEERA எனும் ஆணையத்தில் ஊழலில் ஊறித் திளைத்திருகின்ற அரசு அதிகாரிகள் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு கல்வி நிறுவன முதலாளிகள் தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இடம்பெறுவர். பேராசிரியர்கள், கல்வியாளர்கள் யாருக்கும் இங்கு இடமில்லை இனி பாடத்திட்டம், கட்டணம் என அனைத்தையும் ஆணையம் தான் தீர்மானிக்கும். ஆகவே இங்கு ஊழலும் ஒளியாது. கல்வியில் இந்துத்துவ சிந்தனையும் கார்ப்பரேட் அடிமை புத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் புதிய கல்வி கொள்கை நேரடியாக அமுல்படுத்தப்படும்.
எனவே எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் பாடையில் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை சவக்குழியில் புதைக்கின்ற விதமான போரட்டத்தை நடத்த வேண்டும். அதே வேளையில் கல்விநிலையங்களால் முடிவெடுக்கும் அதிகாரம், நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய சின்டிகேட்களை கட்டியமைக்க வேண்டும். அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சியிருக்கும் ஒரே வழி இதுவே…
செய்தி – நேரடி கள ஆய்வு
மக்கள் அதிகாரம்
கோவை

கருத்துகள் இல்லை: