திங்கள், 5 பிப்ரவரி, 2018

வெளிநாடுகளுக்கு குடிபெயரும் கறுப்பு பண மில்லியனர்கள் / முதலைகள் ...2017ஆம் ஆண்டு மட்டும் 7,000... தேசபக்தர்கள்

மின்னம்பலம் :2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 7,000 பெரும் மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுபற்றி வெளியாகியுள்ள நியூ வேர்ல்டு வெல்த் அறிக்கையில், "சர்வதேச அளவில் பெரும் மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 7,000 பெரும் மில்லியனர்கள் வரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இது 2016ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 16 சதவிகிதம் கூடுதலாகும். 2016ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 6,000 பெரும் மில்லியனர்களும், 2015ஆம் ஆண்டில் 4,000 பெரும் மில்லியனர்களும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

உலகிலேயே சீனாவில் தான் அதிக அளவிலான பெரும் மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு சீனாவிலிருந்து 10,000 பெரும் மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் துருக்கியும் (6,000), நான்காவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்சு (4,000) ஆகிய நாடுகளும், ஆறாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது (3,000). இந்திய பெரும் மில்லியனர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, துபாய், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும், சீன பெரும் மில்லியனர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். மேற்கண்ட நாடுகள் வர்த்தக ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டிருப்பது பலரின் குடிபெயர்வுக்கு முக்கியக் காரணமாகவுள்ளது.
2017ஆம் ஆண்டில் குடிபெயர்ந்த பெரும் மில்லியனர்களில் அதிகமானவர்களில் ஆஸ்திரேலியாவுக்குத் தான் குடிபெயர்ந்துள்ளனர். சுமார் 10,000 பெரும் மில்லியனர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கடந்த ஒரு ஆண்டில் குடிபெயர்ந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சொத்து மதிப்பு 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 20 சதவிகிதமாகும். அடுத்ததாக அமெரிக்காவுக்கு சுமார் 9,000 பேர் கடந்த ஆண்டில் குடிபெயர்ந்துள்ளனர். கனடாவுக்கு 5,000 பேரும், துபாயிற்கு 5,000 பேரும் குடிபெயர்ந்துள்ளனர்.
செல்வம் மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் டாலர்களாகும். இந்தியாவில் 20,730 மல்ட்டி மில்லியனர்கள் உள்ளனர். இதில் உலகில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: