ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

சு.சாமி: தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்காது ,,, தமிழிசை கோபமாம்

பாஜகவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி
மின்னம்பலம்: பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே சுப்பிரமணியன் சுவாமி கூறிவருவதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதியில் அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகம் தண்ணீர் தர மறுத்த நிலையில், நீரைப் பெறுவதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசுக்குக் கடிதமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 4) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி, "தமிழகத்திற்குக் காவிரி நீர் நிச்சயமாகக் கிடைக்காது. மாற்று ஏற்பாடுகள் மூலம் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.
சுப்பிரமணியன் சாமியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்துத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்காது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுவது எங்களுடைய கருத்து அல்ல. அவருடைய கருத்துக்கள் அனைத்தும் தனிப்பட்ட கருத்து ஆகும். அவர் தனிப்பட்ட முறையிலேயே கருத்தைச் சொல்லிப் பழக்கப்பட்டவர். தமிழகத்திற்குக் காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்பதில் பாஜகவிற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக நாங்கள் போராடிவருகிறோம். அதேநேரத்தில் தமிழகத்திற்கு கோதாவரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு மாபெரும் திட்டத்தைக் கொண்டுவந்துகொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
"சுப்பிரமணியன் சாமி பாஜகவுக்கே எதிரான கருத்தைத்தான் கூறிவருகிறார். அப்படியிருக்கையில் அவருடைய கருத்தை எப்படி தமிழக பாஜகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: