வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ரஜினி முதலில் கர்நாடகா சிஸ்டத்தை சரிசெய்யட்டும் ... ஜெயகுமார் ஆலோசனை!

கர்நாடகத்தில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்!மின்னம்பலம்: சிஸ்டம் சரியில்லை என்று கூறும்  ரஜினிகாந்த், முதலில் கர்நாடகத்தின் சிஸ்டத்தைச் சரிசெய்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கான பணிகளை வேகமாக மேற்கொண்டுவருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லையா, இந்தியாவில் சிஸ்டம் சரியில்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை, முதலில் இங்குதான் சரி செய்ய வேண்டும் என்று ரஜினி பதிலளித்திருந்தார்.

இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "காவிரி விவகாரத்தில் ரஜினி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடக அரசு நமக்கு சேர வேண்டிய நீரைக்கூடத் தர மறுக்கிறது. முதலில் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்குச் சென்று அங்கு சிஸ்டத்தை சரிசெய்து நமக்குச் சேர வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.
"ரஜினி எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார் எனத் தெரியவில்லை. எனவே அதனை ரஜினி முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறுவார்கள், ரஜினி பொறியியல் பட்டதாரியா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் சிஸ்டம் சரியாக இருந்த காரணத்தால்தான் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றோம். சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக உள்ளது, அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்ட அவர், ரஜினிகாந்த் பொத்தம் பொதுவாக சிஸ்டம் சரியில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார். யாராக இருந்தாலும் அதிமுகவை சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். எனவே அதிமுவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
"இங்கு மதச்சார்பற்ற அரசாங்கம் நடந்துவருகிறது. ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறுவதன் மூலம் மதச்சார்புள்ள அரசியலைக் கொண்டுவர நினைக்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். வட மாநிலங்களில் தீவிரவாதிகள் நிறையே பேர் உள்ளனர். ரஜினி அங்கு சென்று சிஸ்டத்தை சரி செய்யட்டும்" என்றும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: