செவ்வாய், 18 டிசம்பர், 2018

பொன் மாணிக்கவேல் பொய்வழக்கு போட மிரட்டல்? 13 போலீஸ் அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு .. நடவடிக்கைக்கு அரசு தயார்?

Tamilnadu Government mulls to take action against Idol wing chief Pon Manickavel tamil.oneindia.com - veerakumaran : சென்னை: சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்மாணிக்கவேல் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால் அவரது பணிக்காலத்தை ஒரு வருடம் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கும் பொன்மாணிக்கவேலுக்கும் நடுவே பகிரங்கமாகவே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் குழுவில் பணியில் இருந்த 60 போலீசார் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப் படுகின்றனர்.

இதையடுத்து வேறு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார் பொன் மாணிக்கவேல். இந்த நிலையில், தமிழக போலீஸ் டிஜிபியிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய 13 அதிகாரிகள் சேர்ந்து ஒரு புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் சட்டத்துக்கு புறம்பாக வழக்கு பதிவு செய்ய பொன் மாணிக்கவேல் தங்களை வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய அவர் வற்புறுத்தியதாகவும். அவ்வாறு பொய் வழக்கு போடாததால், தங்களை திட்டியதுடன், மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: