புதன், 19 டிசம்பர், 2018

பன்னீரின் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கம் ..தினகரனுடன் ரகசிய உறவு - நீக்கப் பின்னணி!

மின்னம்பலம் :  “பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த சகோதரர்தான் இந்த ஓ.ராஜா.
இன்று காலை மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.ராஜா. தலைவர் பதவிக்கான போட்டி என்பது பலமாக இருந்தது. போட்டியை நேரடியாகச் சமாளிக்காமல் சில குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓ.ராஜா. இன்று நடந்த தேர்தலில் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட துளசி என்பவர் ஆதாரங்களுடன் முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். முதல்வரின் தனிச் செயலாளரான ஜெயஸ்ரீதான் அவருடன் பேசியிருக்கிறார். அப்போது, ‘என்ன நடந்துச்சு என்பதை ஆதாரங்களுடன் நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். இதை முதல்வரிடம் உடனடியாகச் சொல்லுங்க. இல்லைன்னா நான் திமுக கவனத்துக்குக் கொண்டு போவேன். அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..’ என்று சொல்லியிருக்கிறார். ஜெயஸ்ரீயும் உடனடியாக இந்தத் தகவல்களை முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

மதுரையில் பால் உற்பத்தியாளர் சங்கத் தேர்தலில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு, துணை முதல்வர் பன்னீரை வரச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக எனக்கு ஆதாரத்துடன் புகார் வந்திருக்கு பாருங்க... இதுல சம்பந்தப்பட்டிருப்பது உங்க தம்பி என்பதால்தான் உங்ககிட்ட சொல்றேன். ஆதாரங்கள் எல்லாமே சரியாக இருக்கு. இதில் நாம அமைதியாக இருந்தால், எதிர்கட்சியினர் சும்மா இருக்க மாட்டாங்க. நம்ம ஆட்சிக்கே உங்க தம்பியால மிகப்பெரிய நெருக்கடி வந்துடும். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்துதான் ஆகணும்...’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு துணை முதல்வர் பன்னீரோ, ‘ கூப்பிட்டு விசாரிப்போம். அதுக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம்...’ என்று சொன்னாராம். அதற்கு எடப்பாடியோ , ‘ வாய் வழியாகப் புகார் வந்திருந்தால் நீங்க சொல்றபடி கூப்பிட்டு விசாரிக்கலாம். இதில் ஆதாரங்கள் எல்லாமே சரியாக இருக்கு. விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கலைன்னா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்...’ என்றாராம்.
பன்னீர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எதிர்க்கட்சி என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும்... நான் அவரைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன்..’ என்று விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார். எடப்பாடியும் விடவில்லையாம். ‘ நீங்க உங்க தம்பி என்பதற்காகப் பார்க்குறீங்க. ஆனால், அவரால நம்ம ஆட்சிக்கே ஆபத்து வரும். அதனால நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. அந்தத் தேர்தல் செல்லாது என்பதை உடனே அறிவிக்கணும். அத்துடன் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கணும்..’ என்று எடப்பாடி சொல்ல... ஆடிப்போய்விட்டாராம் பன்னீர்.
‘தேர்தலை ரத்து செய்றது ஓகே... எதுக்கு கட்சியிலிருந்து நீக்கணும்?’ என்று கேட்டிருக்கிறார் பன்னீர். ‘முறைகேடாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றவரை எப்படிக் கட்சியில் வைத்திருக்க முடியும்? அவரை நீக்கித்தான் ஆகணும் என்பதில் நான் உறுதியாக இருக்கேன்... நீங்க சம்மதிச்சுத்தான் ஆகணும்..’ என்று எடப்பாடி சொன்னதுடன் மட்டுமல்லாமல், பன்னீரின் பதிலுக்குக் காத்திருக்காமல் ஓ.ராஜாவைக் கட்சியிலிருந்து நீக்கும் கடிதத்தைத் தயார் செய்யச் சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் ஓ.ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான கடிதம் தயாராகியிருக்கிறது. அங்கேயே வைத்துப் பன்னீரிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனப் பன்னீரும் பழனிசாமியும் கையெழுத்துப் போட்ட அறிக்கைதான் மாலையில் வெளியானது. கையெழுத்துப் போட்டதும் அங்கே நிற்காமல் கிளம்பிவிட்டாராம் பன்னீர்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. ”முதல்வர் கையிலிருந்த ஆதாரம் இதுதான்..'8 டைரக்டர்கள் சேர்ந்துதான் கூட்டுறவுச் சங்கத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதில் 5 பேர் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்களோ அவரே தலைவர். 8 பேரில் மூன்று பேர் தினகரன் அணியில் இருக்கிறார்கள். அந்த மூன்று பேரின் வீட்டுக்கும் ராஜா போயிருக்கிறார். மூன்று பேரிடமும் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். தினகரனிடமும் இது தொடர்பாக ராஜா பேசியதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு அந்த மூன்று டைரக்டர்களும் ராஜாவுக்கு ஆதரவாக வாக்களித்ததிருக்கிறார்கள். இது அத்தனையும் ஆதாரங்களுடன் எடப்பாடி கையில் இருந்திருக்கிறது.
தம்பியை நீக்குவதற்கு கையெழுத்துப் போட்டாலும் பன்னீரின் டென்ஷன் குறையவே இல்லையாம். ‘என் தம்பியை என்னை வெச்சே நீக்க வெச்சுட்டாங்க... என்னையும் என் குடும்பத்தையும் எப்படி ஓரங்கட்டலாம்னு எடப்பாடி பார்த்துட்டு இருந்தாரு. அதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிடுச்சு. இவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க மேல எவ்வளவு பிரச்னைகள் வந்துச்சு. யாரு மேல என்ன நடவடிக்கை எடுத்தாரு? என்னோட குடும்பம் என்பதால் பிரச்னை பண்றாரு. அவன் மேலயும் தப்பு இருக்கிறதால நான் வாய் திறக்காமல் இருக்கேன்...’என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் பன்னீர்.
சென்னையில் இருக்கும் தனது மகன் மூலமாகத் தம்பியிடம் பேசியிருக்கிறார் பன்னீர். ‘நான் எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவே இல்லை. எல்லா ஆதாரங்களையும் கையில் வெச்சுக்கிட்டு எடப்பாடி கேட்கும் போது என்னால பதில் சொல்லவே முடியலை. இப்போதைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இரு. அப்புறம் பார்த்துக்கலாம்..’ என்று சொல்லிச் சமாதானப்படுத்தியிருக்கிறார். ராஜா எந்தப் பதிலும் சொல்லவே இல்லையாம். ‘இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைக் கட்சியை விட்டு நீக்கியதாக அறிவிப்பு வரும்.’ என்று தம்பிக்குச் சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார் பன்னீர்.

கருத்துகள் இல்லை: