வியாழன், 20 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: வீடுகளில் கறுப்புக் கொடி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: வீடுகளில் கறுப்புக் கொடி!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.
கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 15) ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மூன்று வாரங்களில் ஆலையைத் திறப்பதற்கான அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பல்வேறு கட்சிகளும் மக்கள் நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நேற்று (டிசம்பர் 19) காலை முதல் தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. தூத்துக்குடி பாத்திமா நகரில் உள்ள சில வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றச் சென்ற மக்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், கறுப்புக் கொடி ஏந்தியபடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற 21ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் எச்சரிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் சிலர் வன்முறையைத் தூண்ட முயற்சி மேற்கொண்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்தார். நேற்று (டிசம்பர் 19) தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, “ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் சில குழுக்கள் வன்முறையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால், பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆலையை நிரந்தரமாக மூடும் நிலைப்பாட்டில்தான் தமிழக அரசு உள்ளது. அதனால், இயல்பு நிலை தொடர்ந்திட மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை: