திங்கள், 17 டிசம்பர், 2018

ஆபிரிக்கா .. காங்கோ மக்களுக்கு ஒட்டு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை .. அவர்கள் புத்திசாலிகள்


BBC : 2001ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக காங்கோ ஜனநாயக குடியரசில் (டி ஆர் காங்கோ)புதிய அதிபருக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது. டி ஆர் காங்கோவின் தற்போதைய அதிபரான ஜோசப் கபிலா பதவி விலகுவதையடுத்து, சர்ச்சைகள் ஏதுமின்றி அந்நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, அந்நாட்டு தலைநகர் கின்சாசாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்நகரின் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்றில் இரண்டு மடங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமாகிவிட்டன.
இந்த தீ விபத்திற்காக காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த தேர்தலின் பிரசாரத்தின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதே முக்கிய வாதமாக இருந்தது. 


நாட்டின் அதிபராவதற்கான போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களான பெலிஸ், மார்ட்டின் பாயுலு ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாது தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்கப்போவதாகவும் கூறி வருகின்றனர்.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதரான நிக்கி ஹாலே, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், டி ஆர் காங்கோவின் தற்போதைய சூழ்நிலையை கண்டித்ததுடன், "பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான, வெளிப்படையான, எளிதாக வாக்களிக்கக்கூடிய" பழமையான வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
முந்தைய தேர்தல்கள் கடுமையான முறைகேடுகள் நடைபெற்ற காங்கோவில் இந்த தேர்தலாவது எவ்வித பிரச்சனையுமின்றி நடைபெறுமா என்று கவலையில் உள்ளனர்.
பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை அதிகளவு கொண்ட டிஆர் காங்கோவில், 6 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 500 தேசிய மற்றும் 715 மாகாண இடங்களுக்கு 34,900 வேட்பாளர்களும், அதிபர் பதவிக்கு 21 பேரும் போட்டியிடுகின்றனர்.தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்த குறைந்தது 105,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்த தேர்தலுக்காக பயன்படுத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
டி ஆர் காங்கோ தேர்தலில் பயன்படுத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒத்தவை ஏற்கனவே பெல்ஜியம், பிரேசில், இந்தியா, நமீபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் தேர்தலில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: