திங்கள், 17 டிசம்பர், 2018

அமைச்சர் தங்கமணி தங்கதமிழ்செல்வன் சந்திப்பு .. தினகரனின் அடுத்த விக்கெட் ?

டிஜிட்டல் திண்ணை:  தங்கத்தை சந்தித்த தங்கம்; தினகரன் அணியில் அடுத்த விக்கெட்டுகள்!மின்னம்பலம் : “தினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது.
ஒருவர் தங்க.தமிழ்ச்செல்வன் மற்றொருவர் கதிர்காமு. இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன்பு எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று, தங்க தமிழ்ச்செல்வனும், கதிர்காமுவும் காத்திருந்தார்களாம்.
கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வந்திருக்கிறார். இருவருடனும் தங்கமணி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார்.
அப்போது தங்கமணி, ’இப்படியே போனால் எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிங்க. உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்ய தயாராக இருக்கோம்.
உங்களுக்கு (தங்க தமிழ்ச்செல்வன்) முன்பே அமைச்சர் பதவி கொடுக்க அண்ணன் ரெடியாகத்தான் இருந்தாரு. தேர்தல் வந்தால், நீங்க போட்டியிட்ட அதே தொகுதிகளில் ரெண்டு பேரும் போட்டியிடுங்க. செலவை பற்றி கவலை வேண்டாம். நாங்க பார்த்துக்குறோம். ஜெயிச்சதும் உங்களுக்கு அமைச்சர் பதவி தேடி வரும். அதுக்கு நான் கியாரண்டி..’ என்று சொன்னாராம்.
அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், ‘நானும் சரி... கதிர்காமுவும் சரி... ரொம்பவே டீசன்ட்டா அரசியல் பண்றோம். ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து அரசியல் செஞ்சதாலதான் ஆரம்பத்துல இருந்தே எங்க மீது அவரு கோபத்துல இருக்காரு. இப்போ நாங்க அங்கே வந்தாலும் அவரு எங்களுக்கான மரியாதையை கொடுப்பாரான்னு தெரியாது. கட்சியில் எங்களை வளர விடுவாரான்னும் தெரியாது. அப்புறம் எந்த நம்பிக்கையில் நாங்க வர முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அமைச்சர் தங்கமணி, ‘உங்களை விட அதிகமா யோசிக்கிறவன் நான். உங்களை சந்திக்க வருவதற்கு முன்பே அண்ணன் ஓ.பி.எஸ்,கிட்ட பேசிட்டேன். அவரால உங்களுக்கு இனி எந்த சிக்கலும் வராது. அவருகிட்ட பேசிட்டோம். நீங்க நம்பி வரலாம்...’ என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பேச்சுப் போய்க் கொண்டிருக்க.. திடீரெனெ பன்னீருக்கு போன் போட்டுக் கொடுத்துவிட்டாராம் தங்கமணி.
‘நடந்தது எதையும் யோசிக்க வேண்டாம். நானும் அதையெல்லாம் மறந்துட்டேன். நீங்களும் மறந்துடுங்க. வாங்க எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம்...’ என்று பன்னீர் சொன்னாராம். ‘நான் எதுவும் தப்பா நினைக்கலைங்க...’ என்று தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு அத்துடன் மாறிவிட்டதாம். அதிமுகவில் இணைவதற்கு இருமனதாக தமிழ்ச்செல்வன் தலையாட்டிவிட்டு, ‘கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க...’ என்று கேட்டிருக்கிறார்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டது.
லீலா பேலஸ் ஹோட்டல் சந்திப்புக்கு பிறகு, தினகரனை சந்தித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது, சில விஷயங்களை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். ‘செந்தில்பாலாஜி திமுக பக்கம் போகப் போறாருன்னு 3 மாசத்துக்கு முன்பே உங்ககிட்ட சொன்னேன். அப்போ நீங்க, சின்னம்மாவை பார்க்கப் போனீங்க. ‘யாரு வேணும்னாலும் போகட்டும்’னு சின்னம்மாவே சொன்னதாக சொன்னீங்க. ஆனா சின்னம்மா அப்படி சொன்னாங்களான்னு எங்க எல்லோருக்கும் சந்தேகம் இருக்கு. அப்பவே செந்தில்பாலாஜியோட பேசி இருந்தால் இப்போ அவரு போயிருக்கவே மாட்டாரு...’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு தினகரனோ, ‘நான் என்னவோ சின்னம்மாகிட்ட பேசாமல் நானே வந்து சொன்ன மாதிரி சொல்றீங்க.... ‘ என்று கேட்டிருக்கிறார். ‘பல எம்.எல்.ஏ.க்கள் அப்படித்தான் நினைக்கிறாங்க...’ என்று தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அப்போதைக்கு தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாராம் தினகரன். அதன் பிறகுதான், தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசியது தினகரன் கவனத்துக்குப் போயிருக்கிறது.
பதறிப்போன தினகரன் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘சின்னம்மாவை பார்க்க நான் பெங்களூரு போறேன். நீங்களும் வாங்க. மற்ற எம்எல்ஏக்கள் யாரு வராங்களோ எல்லோரையும் கூட்டிட்டுப் போவோம்...’ என்று சொல்லி இருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தவே பெங்களூருக்கு அழைத்திருக்கிறார் தினகரன்.
இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை பார்த்திருக்கிறார். அப்போது, செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லையாம். சாதாரணமாக நலம் விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டாராம். 12 பேரும் வெளியே வந்த பிறகு தினகரன் மட்டும் 20 நிமிடங்கள் சசிகலாவுடன் தனியாகப் பேசிவிட்டு வந்திருக்கிறார். பெங்களூரு ஹோட்டலில் வைத்து தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தும் முயற்சியையும் தொடர்ந்து வருகிறார் தினகரன்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை: