புதன், 19 ஜூலை, 2017

கோயம்பேடு சந்தை : சீல் வைக்கும் அதிகாரிகள்!


கோயம்பேடு சந்தை : சீல் வைக்கும் அதிகாரிகள்!

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து கோயம்பேடு கடை வியாபாரிகள் சிலர் தாமாக முன் வந்து சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் சுமார் 2325 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 729 கடைகள் இரண்டரை கோடி வரை சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை-20 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளை மூடி சீல் வைத்து அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரி திவாகர், கூடுதல் ஆணையர் நடராஜன், கதிரேசன் தலைமையில் 34 அதிகாரிகள் இன்று ஜூலை-19 ஆம் தேதி கோயம்பேடு சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம். இன்று மாலைக்குள் சொத்து வரி செலுத்தவில்லையெனில் காவல்துறை உதவியுடன் கடையை மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
கடைகள் மூடி சீல் வைக்க உத்தரவிட்டதால் கடைக்காரர்கள் சிலர் தாமாக முன் வந்து காசோலை மூலமாகச் சொத்து வரி செலுத்தியுள்ளனர். அதிகாரிகளும் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்குச் சென்றும் வசூலில் ஈடுபட்டனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ரூ. 2,48,23,891 சொத்து வரி பாக்கியாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சந்தை நிர்வாக கமிட்டியிடம் 320 கடைகள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மீது நாளை ஜூலை-20 ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: