விகடன் :'என் பொண்ணை நெனைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அதேசமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைங்க இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகளும் போக்கிரிகளும் நாட்டை நாசம் பண்றாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்ய முடியாத போலீஸ்தான், என் மகளைக் கைது பண்ணி குண்டாஸ்ல அடைச்சிருக்கு. என் பிள்ளை சிறையில் என்ன பாடுபடுமோனு நினைக்கிறப்போ மனசு கெடந்து அடிச்சுக்குது. மூலையில் உட்கார்ந்து ஓ....னு அழணும்போல இருக்கு. ஆனால், வளர்மதி அம்மாவா யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் தூசிக்குச் சமம். குண்டாஸ் மட்டுமில்லே, வேற எந்தச் சட்டம் போட்டு ஒடுக்கினாலும் நியாயத்துக்கான என் மகளின் போராட்டம் ஓயாது” எனத் தெளிவாகப் பேசுகிறார் கமலா. அரசுக்கு எதிராகக் கலகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டாஸில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியின் தாயார் கமலா.
சேலம் மாவட்டம், வீராணத்தை அடுத்து இருக்கிறது பள்ளிகொடுத்தானூர். அமைதியான விவசாய பூமி, மீடியாக்கள் படையெடுப்பால் பரபரப்பு பூமியாக மாறியுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் வளர்மதி பிறந்த பூமி. பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஜெர்னலிஸம் படிக்கும் வளர்மதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி முடித்தவர். விவசாயத்தை நேசிக்கும் மனுஷி. கம்யூனிச சிந்தனைகளில் கரைந்த இளைஞி. வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டிருப்பது தமிழக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அமைப்புகள் வளர்மதிக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளன. இந்தப் பரபரப்பு நிறைந்த சூழலில், அவர் ஊருக்குச் சென்றோம். கொஞ்சமும் கலங்காமல் கம்பீரமாகப் பேசுகிறார்கள் வளர்மதியின் பெற்றோர்.
“அவளை என் பொண்ணுனு சொல்றதைவிட, வளர்மதியின் அம்மா நான் எனச் சொல்லிக்கிறதில்தான் பெருமையா இருக்கு. சின்ன வயசிலிருந்தே அவளுக்குப் பொய் சொல்றது பிடிக்காது. தப்பான செய்கைகளை அடியோடு வெறுக்கிறவள். எல்லா விஷயத்திலும் சரியா நடந்துக்கணும்னு சொல்வாள். எனக்கு மொத்தம் மூணு குழந்தைங்க. ரெண்டுப் பசங்களுக்கு நடுவில் பொறந்த தங்கமான பொண்ணு வளர்மதி. நல்லா படிப்பா. பேச்சுப் போட்டிகளில் பரிசு வாங்கிட்டு வருவா. கலெக்டர், எம்.எல்.ஏ., எனப் பலரும் பாராட்டியிருக்காங்க. நான் பள்ளிக்கூடம் பக்கமே போகாதவள். அதனால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஹோட்டல் கடை, தறி வேலைனு வயித்துக்கான பொழப்பு மாறிக்கிட்டே இருக்கும். நிலையில்லாத வாழ்க்கை. பிள்ளைங்களை எப்படியும் படிக்க வெச்சு முன்னேற்றிவிடணும்னு உறுதியா இருந்தேன், குறிப்பா, வளர்மதியை. ஏன்னா, பொம்பளைப் பிள்ளை படிச்சா அந்த வீடே படிச்சதுக்கு சமமாச்சே'' என அழகான முன்னுதாரணத்தோடு தொடர்கிறார்.
''வளர்மதி அண்ணாமலை காலேஜ் படிக்கும்போது, அங்கே படிச்ச பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலை. அவளுடைய முதல் போராட்டம் அங்கேதான் ஆரம்பிச்சது. எல்லோருக்கும் ஸ்காலர்ஷிப் கெடைச்சி அந்தப் போராட்டம் வெற்றி அடைஞ்சுச்சு. அதை வீட்டுக்கு வந்து சொன்னப்போ எங்களுக்குப் பெருமை தாங்கலை. நல்ல விஷயத்துக்காகப் போராடுறது தப்பில்லையே? அதனால், அவளோட செயலை நாங்கள் யாரும் தடுக்கலை. அதுக்கப்புறம் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம்னு எல்லாப் போராட்டங்களிலும் கலந்துக்கிட்டா. போலீஸ் தொடர்ந்து வழக்கு போட்டுட்டே இருந்துச்சு. இதுவரைக்கும் அவமேல ஆறு கேஸ் இருக்கு. வளர்மதியை நாங்க எதுக்காகவும் தடுத்ததே இல்லை. போலீஸுக்கும் பயந்ததில்லை. பொம்பளைப் புள்ளையை வீட்டிலே பூட்டிவெச்சுக்கணும் எனவும் நினைச்சதில்லை. அவ அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அதன் தொடர்ச்சிதான் வளர்மதிக்குள் இருக்கும் போராட்ட உணர்ச்சி. இது அவளோட உரிமை. அதற்கு நாங்க எப்படி தடைபோட முடியும்? நியாயத்துக்காக, மக்களுக்கு நீதி வேண்டும் எனப் போராடுகிறவளை நக்ஸலைட், மாவோயிஸ்ட், நாட்டுக்கு எதிராகச் சதி செய்கிறவள் எனச் சொல்றாங்க. இந்தப் போராட்ட குணம் யாரும் சொல்லிக்கொடுத்து வரலை. அது அவளுக்குள்ள தானா தோன்றின சுயம்பு. அவளுக்கு வேற எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லை. அவளைப் பொய் கேஸ் போட்டு சிறையில் அடைச்சதுக்கு எதிரா மக்கள் குரல் கொடுக்கணும். என் மகளை மீட்க குரல் கொடுங்க. வேற ஒண்ணும் வேண்டாம்'' என வார்த்தைக்கு வார்த்தை அசரடிக்கிறார் படிக்காத அந்தத் தாய்.
''நாங்கள் விவசாயக் குடும்பம். என் மகளும் விவசாயப் படிப்பு படிச்சிருக்கா. அதனால், விவசாயிகளுக்கு ஆதரவா போராடினாள். அது தப்பா? அவள் கொடுத்த நோட்டீஸ்ல அப்படி என்ன தப்பா இருந்துச்சு? ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை இல்லையா? அடிப்படையற்ற இந்தப் பொய் வழக்கிலிருந்து வளர்மதி மீண்டு வருவா. அவளை இன்னொரு போராட்ட வீதியில் நீங்கள் நிச்சயம் சந்திப்பீங்க'' என்கிறார் வளர்மதியின் தந்தை மாத்தையன்.
-- ஆவரை பால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக