வெள்ளி, 21 ஜூலை, 2017

கண்கெட்டு போன டெல்லி ! உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குகூட தேறாது!

மோடிக்கு ஞாபகமிருக்குமா ?
உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குகூட தேறாது என்பார்கள் அனுபவசாலிகள். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், விவசாயிகளுக்கு விவசாயம் என்பது ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக இருந்தாலும் கூட, நாட்டு நலன் கருதி உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட விவசாயிகளின் முதுகெலும்பைத்தான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து உடைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில், தற்போது சுமார் 46 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் தான் இருப்பதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த நிலத்தில்கூட முழுமையாகப் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையாகி விட்டது. பாசனத்துக்குத் தண்ணீரில்லை. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலையில்லை. அதன் காரணமாக, விவசாயக் கடன் தொகை வாங்கியவர்களால் அதை, திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் நெருக்கடியால் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள், என்று கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

இந்நிலையில், விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் , தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 102 விவசாயிகள், கடந்த ஜுலை 14ஆம் தேதி சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு, டெல்லி சென்றவர்கள், நேராகப் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்றபோது, பாதிவழியிலே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு , நாடாளுமன்றம் அருகில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, கலையில் இருந்து மாலை வரையில் குடிநீர், சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை. அதனால் 60 பேர் மயக்கமடைந்தார்கள். மேலும், எங்களைச் சாந்திக்க வந்த செய்தியாளர்களையும் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு மாலை 5.00 மணிக்கு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவித்தார்கள்.
தொடர்ந்து, மந்தர் மைதானத்துக்கு ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம். ஜூலை 16ஆம் தேதி இரவு மனித எலும்புக்கூட்டை வைத்து போராட்டம் நடத்தினோம். அதன் மறுநாள் 17ஆம் தேதி எலும்பு தின்னும் போராட்டம், அதைத்தொடர்ந்து, 18ஆம் தேதி மண்டை ஓட்டைக் கையில் வைத்துக் கொண்டு வயிற்றில் அடித்துக் கொள்ளும் போராட்டம், 19ஆம் தேதி, திருச்சி அருகில் ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி, எஸ்.பி.ஐ. வங்கியில் டிராக்டர் லோன் வாங்கியிருந்தார். தவனைச் செலுத்தவில்லை என்று, வங்கியாளர்கள் டிராக்டரை எடுத்துக்கொண்டு கேவலமான வார்த்தைகளால் அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்த வங்கி அதிகாரிகளைக் கண்டித்து, அவரது மனைவி ராணி, ஏர் உழுவது போலவும், மாடுகளாக கார்த்திக், கணபதி இழுப்பதுபோல் போராட்டம் நடத்தினோம்.
இந்நிலையில், நேற்று 20ஆம் தேதி, எம்.எல்.ஏ-க்களுக்கு அவர்களது சம்பளத்தை ரூ. 55 ஆயிரத்திலிருந்து இரண்டு மடங்காக உயர்த்தி ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதுவுமில்லை. ஆனால், விவசாயிகளைப் பற்றி சட்டமன்றத்தில் எதுவுமே பேசாதவர்களுக்கு சம்பள உயர்வு என்று அறிவிக்கப்பட்டதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஓட்டுப் போட்டது விவசாயிகளின் தவறுதான் என்று தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டு போராட்டம் செய்தோம் என்றார் போராட்டத்திலிருக்கும் சண்முகம்.

இன்று 21ஆம் தேதி, ஆறாவது நாள் போராட்டத்தில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் போராட்டத்திலிருந்த, தலைவர் அய்யாக்கண்ணுவைத் தொடர்புகொண்டு, மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகைக்காகப் பேட்டி எடுத்தபோது அவர் கூறியதாவது,
மின்னம்பலம்: ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் செய்து வருகிறீர்கள்,
நாளைக்கு என்ன விதமான போராட்டம் நடத்தப் போகிறீர்கள் ?
அய்யாகண்ணு: நாளைப் போராட்டத்தை இரவு 10 மணிக்குத்தான் முடிவு செய்வோம்.
மின்னம்பலம்: பாஜக தேசியத் தலைவர் ஹெஜ்.ராஜா உங்களைப் பற்றி பேசியது குறித்து ?
அய்யாக்கண்ணு: ஹெஜ்.ராஜா தமிழர் கிடையாது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர். தமிழகத்திற்கு ஓடிவந்து செட்டிலாகி விட்டார். அவருக்குத் தமிழகத்தின் மீது அக்கரை இருக்காது. எனக்கு நூறு ஏக்கர் நிலம், ஆடி கார், கோடிக்கணக்கில் பணமிருக்கு என்றார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சொல்கிறார் எனக்கு நிலமே இல்லை, நான் விவசாயி இல்லை என்று. ஹெஜ்.ராஜா தனியார் டி.வி-ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், அவரது வீட்டில் நான் 25 வருடங்களாகப் படுத்து கிடந்ததாகத் தவறான முறையில் அவதூறாகப் பேசியுள்ளார். இதுகுறித்து நீங்கள் பேசியது சரியா என்று மொபைலில் கேட்டபோது, இல்லை இல்லை நான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறி மொபைல் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
மின்னம்பலம்: மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இதுவரை யாராவது உங்களிடம் பேசியிருக்கிறார்களா? யாரும் பேசவில்லை என்றால் போராட்டத்தை கைவிட வாய்ப்புகள் உள்ளதா?
அய்யாக்கண்ணு: நூறு நாள் இல்லை. ஐந்நூறு நாளில்லை, தீர்வு இல்லாமல் போராட்டத்தை முடிக்க மாட்டோம். டெல்லியிலேயே செத்து மடிவோம். விவசாயிகள் போராட்டத்தால் பலனடைவது அரசியல்வாதிகளும், பெரும் மிராசுதார்களும்தான், விவசாய கடன்களை எல்லாம் கடந்த காலத்தில் தள்ளுபடி செய்தபோது எத்தனை எம்.எல்.ஏ, எம்.பி.-க்கள், அமைச்சர்கள், பெரும் பணக்காரர்கள் பலன் பெற்றார்கள். அவர்களில் யாராவது எங்களது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்று கூறினார்களா ? இல்லையே.
2016ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்தபோது, எனக்கு 40 ஆயிரம் வாங்கப்பட்ட கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 70 ஆயிரத்தைத் தள்ளுபடி செய்தார்கள். அப்போது, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள், எனக்கு மட்டும் வேண்டாம் என்று மதுரை நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன் என்றார்.
மின்னம்பலம்: உங்கள் கோரிக்கைதான் என்ன?
அய்யாக்கண்ணு: 1970-இல் ஒரு டன் கரும்பு ரூ 90-ஆக இருந்தது, அப்போது வாத்தியார் சம்பளம் 90 ரூபாய் தான், ஆனால் இன்று வாத்தியார் சம்பளம் 46 ஆயிரம் ரூபாய். கரும்பு ஒரு டன் விலை 2550 ரூபாய்தான். 12 மரக்க நெல் 58 கிலோ 40 ரூபாய், வங்கி மேலாளர் சம்பளம் 150 ரூபாய், எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் 250 ரூபாயாக இருந்தது, இன்று வங்கி மேலாளர் சம்பளம் ரூ.88 ஆயிரம். எம்.எல்.ஏ, சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம். இன்று நெல் மூட்டை விலை எவ்வளவு தெரியுமா 800 ரூபாய்தான். அன்று ஒரு சவரன் 120 ரூ, இன்று 24 ஆயிரம் ரூபாய். அனைத்து, விலைகளும் ஏறுகிறது. வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் சம்பளம் உயர்கிறது. ஆனால் விவசாயிகளின் நிலை உயரவில்லை.
மின்னம்பலம்: அது சரி. டெல்லியில் போராட்டத்தை நடத்துவதன் நோக்கம் என்ன ?
அய்யக்கண்ணு: நதி இணைப்பு செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது, நான் பிரதமராக பதவியேற்றதும் நதிகளை இணைப்பேன், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்கப்படும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பேன், விவசாயிகளின் தரத்தை உயர்த்துவேன் என்று மோடி தேர்தல் வாக்குறுதியளித்தார்.
தேர்தல் முடிந்து, மோடியும், பிரதமராகப் பதவியேற்று மூன்று வருடம் முடிந்து விட்டது. தேர்தல் வாக்குரியாக தான் கூறியதே மோடிக்கு நினைவிருக்கா என்று தெரியவில்லை. விவசாயிகளை தீண்டத்தகாதவர்களாக மோடி பார்க்கிறார்.
நதி இணைப்பு , தனி நபர் இன்சுரன்ஸ் , 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் , விவசாய பொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த திமுக எம்.பி. திருச்சி சிவா,
கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் மற்றும் மகளிர் அமைப்பினர் போன்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறும். விவசாய புரட்சி உருவாகும் என்று அவர் கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: