புதன், 19 ஜூலை, 2017

இன்று கர்நாடகா, நாளை தமிழகம்....... தமிழக மக்களின் சுகாதாரம் காக்க, நீட்டை எதிர்ப்போம் !

சிவசங்கர் எஸ்.எஸ்: இன்று கர்நாடகா, நாளை தமிழகம்...
கர்நாடக மருத்துவத் துறை, உயர்கல்வி பயின்ற மருத்துவர்களுக்காக தத்தளிப்பதை இன்றைய 'ஆங்கில இந்து' நாளிதழ் முதல் பக்க செய்தியாக்கியுள்ளது.
சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த திணறிய கர்நாடக மருத்துவத்துறை, இணையம் வாயிலாக பணியமர்த்த முடிவு செய்து அறிவித்தது.
ஒரு இளம் மயக்கவியல் நிபுணர், மாதம் ரூபாய் மூன்றரை லட்சம் ஊதியம் கேட்டுள்ளார். அவரது அனுபவம் ஒரு வருடம் தான். இப்படி மற்ற மருத்துவர்களும் கேட்ட தொகை, துறை செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகையை விட அதிகம்.
மிகக் குறைவாக ஒரு மருத்துவர் கேட்டுள்ள தொகையே ரூபாய் ஒன்றரை லட்சம். அவரும் வட்டார அளவிலான பொது மருத்துவமனையில் பணிபுரிய மறுக்கிறார்.
இதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். தும்கூரு மாவட்ட மருத்துவமனையில் 26 ஆண்டுகால அனுபவத்தோடு பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் பெறும் சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம்.
இந்த வித்தியாசம் இப்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என எண்ணலாம்.
தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் ஏற்படப் போகும் நிலை வேறு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போது போதுமான அளவு இளநிலை மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ் படித்தவர்கள்) இருக்கிறார்கள். ஆனால் வரும் காலங்களில் பணிபுரிய இளநிலை மருத்துவர்களே இல்லாமல் திண்டாடும் நிலை வரும்.
காரணம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு. ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்தது.
அதனால் முதுநிலை மருத்துவம் படிக்க விரும்புபவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து கொண்டே படித்து தேர்வு எழுதுவார்கள். இதனால் கிராமப்புற மக்கள் எளிதாக மருத்துவ வசதி பெற்றனர்.
அவர்கள் அரசுப் பணியில் பணியாற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் முன் வந்தார்கள். இதை மருத்துவர்கள் 'சர்வீஸ் கோட்டா' என்பார்கள். நீட்டால் இந்த இடஒதுக்கீடு பறி போய் விட்டது. இதற்காகத் தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கடந்த மாதங்களில் போராடினார்கள்.
சில மருத்துவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை காக்க நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் இதன் பிற்கால தாக்கத்தை உணராமல், இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது.
இந்த வருடம் இளநிலை மருத்துவர்கள், முதுகலை படிப்பிற்காக கொச்சின், டெல்லி, சென்னை என 'கோச்சிங் கிளாஸ்'க்கிற்காக படையெடுப்பார்கள்.
அரசு மருத்துவர்களுக்கு, இடஒதுக்கீட்டு இல்லை என்ற நிலையில் அரசு மருத்துவப் பணிக்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும்.
அடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்புவதில் அடுத்த சிக்கல் வந்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்பில் பாதி இடத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் எதிர்காலத்தில்.
தமிழகத்திலும், தென் மாநிலங்களில் இருக்கும் அளவு எண்ணிக்கையிலான மருத்துவ படிப்பு இடங்கள், வட மாநிலங்களில் கிடையாது.
இதை விட மோசம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் நிலை. கல்லூரிக்கு ஓரிரு இடங்கள் தான் இருக்கிறது. அதையும் அடித்து பிடுங்குகிறார்கள்.
அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, தொலை நோக்கோடு திட்டம் வகுத்து, உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு இடத்தை தான் அவர்கள் அபகரிக்கிறார்கள். கஷ்டப்பட்டு நாம் உருவாக்கியதை திருடுவது தான் இது.
நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டு வா. இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊதி, ஊதி ஆளுக்கு பாதியாக சாப்பிடுவோம், கதை தான் இது.
உடனே சிலர் தகுதி, மெரிட் என குதிப்பார்கள்.
பெரு நகரத்தில், பெரும் பணம் கொடுத்து பயிற்சி எடுத்து விட்டு இங்கு வந்து படிக்கும் அயல் மாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிய மாட்டார்கள். அவர்கள் மாநிலத்திற்கு ஓடியே போய் விடுவார்கள்.
மெரிட்டில் படித்து விட்டு ஓடிப்போக இருப்பவர்களை விட , படித்து விட்டு இங்கேயே பணிபுரியும் நம் மாநிலத்து மருத்துவர்கள் போதும்.
நாம் உருவாக்கிய இடத்திற்கு தான் நாம் உரிமை கோருகிறோம். நம் மாநில சுகாதாரம் காக்க தான் நீட்டிற்கு எதிராக குரல் கொடுக்கிறோம்.
# தமிழக மக்களின் சுகாதாரம் காக்க, நீட்டை எதிர்ப்போம்

கருத்துகள் இல்லை: