புதன், 19 ஜூலை, 2017

சகாயம் விசாரணைக் குழுவை கலைக்க முடிவு : நீதிமன்றம்!


சகாயம் விசாரணைக் குழுவை கலைக்க முடிவு : நீதிமன்றம்!
மின்னம்பலம் : மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான விசாரனைக் குழுவை கலைப்பது குறித்து வருகிற ஜூலை 31ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் வெட்டி எடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மதுரையில் கிரானைட் முறைகேடு பற்றி 3 மாதங்கள் விசாரணை நடத்தி, ரூ.1,11,000 கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிரானைட் முறைகேடு விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், விசாரணைக் குழுவில் தான் பணியாற்றியதற்காக மாதம் ரூ.20,000 என 8 மாதத்துக்கான உதியம் வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று ஜூலை 18ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,'விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு குழுவினரின் விசாரணை முடிவடைந்ததால், ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியதுடன் விசாரணை அறிக்கையில் தவறான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,'கிரானைட் முறைகேட்டில் என்னுடைய அறிக்கையை யாரும் சந்தேகிக்க வேண்டாம், எனது அறிக்கையை சந்தேகப்படுவது, என்னுடைய நேர்மையை சந்தேகப்படுவதற்கு சமம். விசாரணைக் குழுவின் பணி முடிந்துவிட்டதா?என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்' என கூறினார். இதற்கு, தமிழக அரசு வழக்கறிஞர், 'உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஜூலை 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவுக்கு மொத்தம் ரூ. 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறி அரசாணை தாக்கல் செய்தார். அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு ஊதியம் வழங்கியது குறித்து எதுவுமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சகாயம் தலைமையிலான விசாரணை குழுவை உயர் நீதிமன்றம்தான் தான் அமைத்தது. அந்த குழுவை கலைக்க வேண்டும் என்றால், உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ‘கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல் தலைமையிலான முதன்மை அமர்வு, இந்த விசாரணை குழுவை கலைத்து விட்டது. ஆனால், இந்த குழு தொடர்ந்து செயல்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்’ என்று கூறினார். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலின் இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சகாயம் குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘கிரானைட் முறைகேடு குறித்து 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கு தான் முடிவுக்கு வந்துள்ளது. மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, இந்த விசாரணை குழுவும் தொடரத்தான் செய்யும்’ என்று வாதிட்டார்.
இந்த வாதத்தின்போது, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘சகாயம் தன்னுடைய அறிக்கையில் ரூ.1,11,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தவறான அறிக்கை. மதுரையில் அந்த அளவுக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார். இதற்கு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், ஓய்வுப்பெற்ற வட்டாட்சியருக்கு ஊதியம் வழங்கப்பட்டதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், ‘உரிய ஆவணங்களை கொடுத்தால், அதை சரி பார்த்து ஊதியம் வழங்கப்படும்’ என்று கூறினார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்று சகாயம் குழுவை கலைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: