சனி, 22 ஜூலை, 2017

மாதவிடாய் சோதனை: 12 ஆசிரியர்கள் நீக்கம்!

மின்னம்பலம் :உத்தரப்பிரதேசத்தில் 70-க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்திய 12 ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் கஸ்தூர்பா காந்தி உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 26 ஆம் தேதி அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான சுரேகா தோமர் கழிவறையில் ரத்தக்கறையை பார்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், 70-க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து வரிசையில் நிற்க வைத்து, ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுடைய உறவினர்கள் மூலம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சுரேகா தோமர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், இந்த அருவருக்கத்தக்க செயலால் நாங்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், வார்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, பேசிய வார்டன் சுரேகா தோமர், நான் அவ்வறு நடந்துகொள்ளவில்லை. மாணவிகளிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வதால்,அவர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றனர் என மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி சந்திர கேஷ் யாதவ் கூறுகையில், இந்த சம்பவம் உண்மையாக நடந்தா , இல்லையா என்பதை அறிய 3 துறைகள் அடங்கிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது என தெரிவித்தார்.
அதன்படி, விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இந்த சம்பவம் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என கூறினர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 26) நடந்தது, அன்று பள்ளி விடுமுறை, எப்படி இது சாத்தியமாகும் ? என்று அந்த பள்ளி ஆசிரியர் நீலூ ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: