புதன், 19 ஜூலை, 2017

சட்டசபைக்கு குட்காவுடன் வந்த ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர். ’குட்கா சட்டவிரோதமாக விற்கப்படுகிறது’ என்பது குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபை இருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: ‘சென்னையில் எந்தெந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறது என்பது குறித்து திமுக ஆய்வு செய்தது. குட்காவை பெண்களும் குழந்தைகளும் விற்று வருகின்றனர். தடைசெய்யப்பட்ட குட்கா சென்னையில் உள்ள கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. இதனை சட்டசபையில் தெரிவித்தேன். ஆனால், இதுகுறித்து பேச சட்டசபையில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்’ என்று தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட பொருளை சட்டசபைக்கு கொண்டுவந்ததாக மு.க.ஸ்டாலின் மீது சபாநாயகர் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ’தடைசெய்யப்பட்ட பொருள் கிடைத்தால் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அதை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தது தவறு’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ’தமிழக அரசு ஆதரவுடன் குட்கா விற்பனை நடப்பதை விளக்கவே அவைக்கு குட்காவை எடுத்து வந்தோம். காவல் அதிகாரிகளே திருடர்களாக உள்ளபோது குட்கா விற்பனையை காவல்துறையில் எப்படி புகார் செய்ய முடியும்?’ என்று கேள்வியெழுப்பினார்.

கருத்துகள் இல்லை: