
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதே நாளில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமியின் அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த ஆவணங்களை அதிகாரிகள் தோண்டி துருவிய போதுதான், துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி விதிகளை மீறி அதிக விலைக்கு சொகுசு கார் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவர் கடந்த ஆண்டு துணை வேந்தராக பதவி ஏற்ற போது, அவரது பயன்பாட்டுக்காக டொயோட்டா அல்டிஸ் கார் வழங்கப்பட்டது. அந்த கார் துணை வேந்தருக்காகவே 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டதாகும். 11 மாதமே ஆகி இருந்த அந்த காரை துணைவேந்தர் பயன்படுத்தவில்லையாம்.
இதனையடுத்து கீதாலட்சுமிக்காக புதிய கார் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் சாதாரண கார் இல்லை. டொயோட்டா பார்ச்சுனர் கார் வாங்கப்பட்டது. அந்த சொகுசு காரின் விலை ரூ.26 லட்சத்து 29 ஆயிரமாகும். தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கேட்கப்பட்டதற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் இது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த சொகுசு கார் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிதான் அந்த கார் வாங்குவதற்கு ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பொதுவாக அரசு உயர் அதிகாரிகளுக்கு வாகனம் வாங்க அதிகபட்சமாக ரூ.14 லட்சம் வரை அரசு பணத்தை செலவிடலாம் என்று தமிழக அரசு விதிகளை வரையறுத்துள்ளது.
ஆனால், அந்த விதிமுறைகளை மீறி துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு அரசு பணத்தில் சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வரையறுத்துள்ள விதிகளை மீறி கூடுதலாக 10 லட்சம் ரூபாய் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் செலவு செய்து துணைவேந்தருக்கு சொகுசு கார் வாங்குவதற்கு சுகாதார அமைச்சகத்தின் நிதிக்குழுவும், ஆட்சி மன்றக் குழுவும் கடும் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்தன. ஆனால் அந்த ஆட்சேபனையை மீறி ரூ.26 லட்சத்துக்கு கார் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், விஐபிக்கள் யாருக்குமே இவ்வளவு செலவில் பார்ச்சுனர் கார் வாங்கப்படவில்லை.
அமைச்சர்களையும் விட துணை வேந்தருக்காக அந்த சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு அது பட்டுப்புடவை கீதாலட்சுமி என்பதுதான். அவரை பார்க்க யார் சென்றாலும் பட்டுப்புடவையோடுதான் செல்ல வேண்டுமாம். இதை சொல்லி குமுறி வந்தனர். அவரது வீட்டில் ரெய்டு நடந்த போதுதான் பல்கலைக்கழக ஊழியர்கள் இதனைப்பற்றி கதை கதையாக பேசினர். இப்போது சொகுசு கார் பிரச்சினை கீதாலட்சுமிக்கு எதிராக பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக