செவ்வாய், 16 மே, 2017

கனிமொழிக்கு திமுகவில் திடீர் முக்கியத்துவும்?

சென்னை: திமுகவில் ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் முக்கியத்துவம் கொடுத்து வருவது அக்கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டது முதலே கனிமொழிக்கான முக்கியத்துவம் குறைந்தது. திமுகவைப் பொறுத்தவரையில் டெல்லி அரசியலைப் பார்ப்பது கனிமொழிதான். ஆனால் ஸ்டாலினோ, கனிமொழியை ஓரம் கட்டி வைத்தார். டெல்லி சந்திப்புகளுக்கு திருச்சி சிவா மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரைத்தான் பயன்படுத்தி வந்தார் ஸ்டாலின். இதனால் கனிமொழி கடும் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க ஸ்டாலின் தமது லாபி மூலம் முயற்சித்துப் பார்த்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதேநேரத்தில் கனிமொழியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்கும் பிரதமர் மோடி, இயல்பாக பேசி வந்தார்;
கருணாநிதியின் உடல்நிலை குறித்து எப்போதும் கேட்டும் வந்தார். இதனிடையே கருணாநிதியின் வைரவிழா, 94-வது பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் முன்னெடுத்தார். ஆனால் திடீர் திருப்பமாக தேசிய அளவில் அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுக்கும் பொறுப்பு கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது. கனிமொழிக்கான இந்த திடீர் முக்கியத்துவம் குறித்து விசாரிக்கையில், பாஜகவைப் பொறுத்தவரையில் அதிமுகவைப் போல திமுகவையும் பந்தாட நினைக்கிறது. இந்நிலையில் கனிமொழிக்கு மட்டும் டெல்லி முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது. இது தமது தலைமைக்கு ஏதேனும் ஒருவகையில் நெருக்கடியைத் தரக்கூடியதாக உருவெடுக்கலாம் என்பது ஸ்டாலின் தரப்பின் அச்சம். அத்துடன் பாஜக தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி வருகிறார் ஸ்டாலின்.
இதனால் பாஜக தமக்கு எதிராக விஸ்வரூபமெடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் கனிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் திமுகவில் சலசலப்பை உருவாக்க பாஜகவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது.. இதனால்தான் ஸ்டாலின் இப்படி ஒரு வியூகம் வகுத்து செயல்படுவதாக அறிவால வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  tamiloneindia

கருத்துகள் இல்லை: