வெள்ளி, 19 மே, 2017

தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது விழாவில் கலந்துக்கொள்ளுங்கள்... சனிக்கிழமை .

ArunThamizhstudio? இன்று பாலுமகேந்திரா பிறந்தநாள்
என்னுடைய திரையுலக வாழ்வில் நான் சமரசமின்றி எடுத்தத் திரைப்படங்கள் இரண்டு. ஒன்று வீடு. இன்னொன்று சந்தியா ராகம் என்று பாலுமகேந்திரா அடிக்கடி சொல்வார். இத்தகைய உண்மையை, வெளிப்படையாக தமிழ் சினிமாவில் என்பதுகளில் உருவான வேறு எந்த இயக்குனராவது சொல்ல முடியுமா? அது பாலுமகேந்திராவால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவின் எதேச்சிகாரத்தை, அதன் வணிக சமரசங்களை தன்னுடைய வாழ்நாள் முழுக்க கண்டித்து பேசிய இயக்குனர்களில் முதன்மையானவர் பாலுமகேந்திரா. ஒரு படைப்பாளி தான் சார்ந்த துறை அல்லது தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்திவந்தால் போதுமா? நிச்சயம் போதாது. இதை தெளிவாக உணர்ந்தவர் பாலுமகேந்திரா. திரைப்படங்கள் இயக்குவது தவிர்த்து, அதனை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்துவதை மிக முக்கிய பணியாக செய்து வந்தவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல சினிமா சார்ந்து இயங்கி வந்த எல்லா திரைப்பட அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் பெரும் உறுதுணையாக இருந்தவர். தமிழ்நாட்டில் மாற்றுத் திரைப்பட இயக்கங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு குரல் எழுப்பியவர் பாலுமகேந்திரா.ஓவியம் Ravi Palette
என்பதுகள் மட்டுமின்றி அதற்கும் முன்பும் கூட இப்படி நல்ல சினிமாவை முன்னெடுக்கும் சினிமா அமைப்புகளை பெரிதாக யாருமே ஆதரிக்கவில்லை. பாலுமகேந்திராதான் அதன் தொடக்கப்புள்ளி.
வெறும் இரைச்சலாக இருந்த தமிழ் சினிமாவில் சப்தங்கள் மட்டுமே இசையல்ல, மௌனம் எல்லா சப்தங்களை காட்டிலும் மென்மையானது என்பதை நிரூபித்தவர். அதன் காரணமாகவே தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா விருதில் ஒலியமைப்பிற்கும் விருதுக் கொடுத்து வருகிறோம்.
நண்பர்களே பாலுமகேந்திரா பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஸ்டுடியோ வழங்கி வரும் விருது விழா நாளை சனிக்கிழமை (20-05-2017) மாலை 4.30 மணிக்கு பிரசாத் லேப் 70mm திரையில் நடைபெற உள்ளது. 4.30 மணிக்கு பாலுமகேந்திரா விருது விழாவிற்காக தெரிவு செய்யப்பட்ட பத்துக் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் பின்னர் பரிசளிப்பு விழா தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் நண்பர்கள் பெருந்திரளாக இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாலுமகேந்திரா விட்டு சென்ற நல்ல சினிமாவிற்கு ஆதரவான குரல் உங்களிடமிருந்தும் எதிரொலிக்கட்டும். நல்ல சினிமாவிற்கு இன்னமும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் இருக்கிறோம் என்பதை உரக்க சொல்லவதற்கு அவசியம் சனிக்கிழமை சென்னை நோக்கி வாருங்கள். தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது விழாவில் கலந்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: